மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூன்றாவது நாளாக வந்துகொண்டிருக்கின்றன. ஏற்கனவே தமிழ்நாடு பல உள்ளாட்சித் தேர்தல்களைக் கண்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்றிருக்கிறது. ஆனால் இந்த தேர்தலைப் போல திட்டமிடப்படாத, சீரற்ற முறையில் வேறு எப்போதும் நடந்ததில்லை என்று தேர்தல் பணிகளில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் வெளிப்படையாக குமுறுகிறார்கள்.
சுழற்சி முறையில் தேர்தல் பணி என்று அறிவித்தனர், ஆனால் பெண் ஊழியர்களுக்கான பணி நேரம் வரையறை இல்லாமை, அவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம், பொதுவாகவே தேர்தல் ஊழியர்களுக்கான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமை என தேர்தல் ஆணையத்தின் மீது அரசு ஊழியர்கள் கடும் கொதிப்பில் இருக்கிறார்கள்.
நிர்வாக ரீதியாக இப்படிப்பட்ட பிரச்சினைகள் என்றால் தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 515 மாவட்டக் கவுன்சிலர்கள், 5090 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிகபட்ச இடங்களை திமுக கூட்டணியே கைப்பற்றி வருகிறது. திமுக கூட்டணி என்பதை விட திமுகவே அதிக இடங்களில் ஜெயித்திருக்கிறது. இந்த நிலையில் அரசு ஏற்கனவே திட்டமிட்டப்படி நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களை அடுத்த கட்டமாக நடத்துமா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்திருக்கிறது.
இந்தத் தேர்தல் முடிவுகளை வைத்து அதிமுக தலைமையில் விவாதம் நடந்திருக்கிறது. ‘ஆளுங்கட்சி என்ற முறையில் எல்லா வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டும், அதிமுக ஏறக்குறைய பாதிதான் ஜெயிக்க முடிந்திருக்கிறது. பொதுவாகவே கிராமப்புறங்களில் அதிமுகவுக்கு சாதகமான நிலையே இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட பகுதிகளிலேயே அதிமுக பல கட்ட பிரயத்தனங்களுக்குப் பிறகுதான் இந்த முடிவைப் பெற்றிருக்கிறது. கிராமங்களிலேயே இப்படி என்றால் நகரப் பகுதிகளில் கேட்கவே வேண்டாம்.
நகரப் பகுதிகளில் அதிமுகவுக்கு செல்வாக்கு குறைவுதான். மேலும் நடந்து முடிந்த ஊரகத் தேர்தல்களில் ஆளுங்கட்சி என்ற முறையில் நாம் நடத்திய வேலைகள் ஓரளவுக்குத்தான் மீடியாவில் வெளிவந்தன. நகர்ப்புறத் தேர்தலில் இந்த கண்காணிப்பு இன்னும் கடுமையாக இருக்கும். அரசு ஊழியர்கள் அரசு மீது மிகக் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். எனவே விரைவில் நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தினால் அதிமுக தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட மாதிரிதான் இருக்கும்’ என்பதே அரசுக்கு போலீஸ் மூலமாக தெரிவிக்கப்பட்டிருக்கும் செய்தி.
பற்றாக்குறைக்கு, ’நகர்ப்புற ஊராட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து நடத்தி இருந்தால் தி.மு.க. இன்னும் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கும்’என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதேநேரம் தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களையும் நடத்தி முடித்துவிட்டுத்தான் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. ஆனால் அதை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற போதும் அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதற்கிடையில் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்து தேர்தல் முடிவுகளும் வெளிவந்துவிட்டன. எனவே இப்போது நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களை விரைவில் நடத்த உத்தரவிடுமாறு அந்த வழக்கின் கோரிக்கை மாறுகிறது. இதுமட்டுமல்ல நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களை உடனடியாக நடத்திட திமுக சார்பிலும் சட்ட ரீதியான முயற்சிகளில் ஈடுபட ஆயத்தங்கள் நடக்கின்றன. ஆனால் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் நகர்ப் பகுதிகளில் திமுகவுக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் மாநகராட்சித் தேர்தலை நடத்த வேண்டுமா என்ற ஆலோசனை ஆளுங்கட்சி வட்டாரத்தில் தீவிரமாக எழுந்துள்ளது. ஒன்பது மாவட்ட ஊரகத் தேர்தல் வேறு அதிமுகவுக்கு அடுத்த கட்ட கவலையை ஏற்படுத்தியுள்ளது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
