பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் வெளிநாடு செல்ல மும்பை உயர் நீதிமன்றம் இன்று (அக்டோபர் 8) மீண்டும் அனுமதி மறுத்துள்ளது.
பாலிவுட் நடிகைகளில் பிரபலமானவர் ஷில்பா ஷெட்டி. தமிழில் பிரபு தேவாவுடன் மிஸ்டர் ரோமியோ மற்றும் விஜய்யின் குஷி படத்தில் கெஸ்ட் ரோலில் நடனம் ஆடியுள்ளார்.
ஷில்பாவும் அவரது கணவரும் இணைந்து நடத்தி வந்த ‘பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட்’ (Best Deal TV Pvt. Ltd.) என்ற நிறுவனத்தின் மூலம், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவரை ரூ. 60 கோடிக்கு ஏமாற்றியதாக அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாத வண்ணம், நாட்டின் அனைத்து விமான நிலையங்களுக்கும், மும்பை காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு ஒரு லுக் அவுட் சுற்றறிக்கையை (LOC) அனுப்பியுள்ளது. அதன்படி அவர்கள் நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி வெளிநாடு செல்ல முடியாது.
இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெறும் யூடியூப் நிகழ்வில் கலந்துகொள்ள இருப்பதாகவும், அதற்கு அனுமதி வேண்டும் எனவும் ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்த்ரா தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி நிகழ்ச்சியின் அழைப்புக் கடிதத்தைக் கேட்டார். ஆனால் பயண அனுமதி கிடைத்தால்தான் முறைப்படி அழைப்புக் கடிதம் தங்களுக்கே கிடைக்கும் என்று ஷில்பாவின் வழக்கறிஞர் பதில் தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, ’முதலில் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் முழுத் தொகையான ரூ.60 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தினால் மட்டுமே அவர்களின் வெளிநாட்டுப் பயணத்திற்கான கோரிக்கையை பரிசீலிப்போம்’ என்று கூறி வழக்கு விசாரணையை அக்டோபர் 14ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
முன்னதாக, குடும்ப விடுமுறைக்காகப் புக்கெட் (தாய்லாந்து) செல்ல தம்பதி விடுத்த கோரிக்கையையும், இதே காரணத்தைக் கூறி நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.