ADVERTISEMENT

பாஜக அம்பியா, ரெமோவா, அந்நியனா? இந்துத்துவ கருத்தியலின் மல்டிபிள் பர்சனாலிடி டிஸார்டர்!

Published On:

| By Minnambalam Desk

Multiple Personality Disorder of Hindutva Ideology

ராஜன் குறை

இரண்டு உரைகளை கடந்த வாரங்களில் பிரதமர் மோடி நிகழ்த்தினார். இரண்டிலும் மெக்காலே அவர்களைக் குறிப்பிட்டு, மெக்காலே உருவாக்கிய அடிமை மனநிலையை அகற்ற வேண்டும் என்று சூளுரைத்தார்.

ADVERTISEMENT

தாமஸ் பாபிங்டன் மெக்காலே என்ற பிரிட்டிஷ் அதிகாரி இந்தியாவிற்கான கல்விக் கொள்கை வரைவை 1835-இல் வெளியிட்டார் என்பதால் அடுத்த பத்தாண்டுகளில் அதன் 200-ஆவது ஆண்டு நிறைவின்போது நாம் அவர் கொள்கை உருவாக்கிய அடிமை மன நிலையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்றார்.

ADVERTISEMENT

முதல் உரை டில்லியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஏற்பாடு செய்த ராம்நாத் கோயங்கா நினைவேந்தல் உரை. அது நிகழ்ந்த இடம் பல முக்கிய பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், தொழிலதிபர்கள், குடிமைச் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்ட அரங்கக் கூட்டம்.

மற்றொரு உரை அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததைக் குறிப்பிடும் வகையில் அதன் கோபுரத்தில் காவிக் கொடியேற்றிவிட்டு நிகழ்த்திய எழுச்சி உரை. இரண்டுமே பாரதீய ஜனதா கட்சியின் கருத்தியல் அடிப்படைகளை விளக்கும் உரைகள் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.   

ADVERTISEMENT

பிரதமரின் இந்த இரு உரைகளிலும், பொதுவாகவும் பாஜக இந்தியா துரிதமாக பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும்; உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறது. அமெரிக்கா போல. ஐரோப்பா போல, ஜப்பான் போல, சீனா போல தொழில்துறையிலும், பெரு உற்பத்தி அல்லது திரள் உற்பத்தியில் புதிய சிகரங்களை எட்டி, ஜிடிபி என்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியினை வேகமாக அதிகரித்து வல்லரசாக மாற வேண்டும் என்று கூறுகிறது.

செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்ப வேண்டும், நிலவை, செவ்வாய் கிரகத்தை ஆராய வேண்டும், அணு ஆயுத வல்லமை பெற வேண்டும், அணு மின் நிலையங்கள் அமைக்க வேண்டும், புல்லட் டிரெய்ன் என்ற அதிவேக ரயிலை ஜப்பான் உதவியுடன் அறிமுகம் செய்ய வேண்டும். இவையெல்லாம் வளர்ச்சியின் அடையாளங்கள் என்று பாஜக உறுதிபடக் கூறுகிறது.

ADVERTISEMENT

பொதுவாக பொருளாதார வளர்ச்சியினைக் குறித்து ஆராயும் யாரும் கணிணி மென்பொருள் துறையில் இந்தியா அடைந்த வளர்ச்சியே இந்தியாவின் இன்றைய பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கிய காரணம் என்பார்கள்.

எடுத்துக்காட்டாக பாஜக அரசு கணிணி மென்பொருள் கார்ப்பரேட் சாதனையாளர் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் துணைவியார் சுதா மூர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராக்கியுள்ளது. நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக், ஒரு இந்திய வம்சாவழியினர், பிரிட்டிஷ் பிரதமராக சிறிது காலம் பதவி வகித்தார் அல்லவா? அதற்குக் காரணமும் ரிஷி சுனக் ஹார்வார்டில் படித்த  பொருளாதார மேலாண்மைக் கல்விதானே?

இவ்வாறு நாம் தொழில்துறையில் எதிர்காலத்தில் தொடர்ந்து முன்னிலை வகிக்க வேண்டுமானால் AI என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் செயற்கை நுண்ணறிவுத் துறையில், ரொபாடிக்ஸ் எனப்படும் இயந்திர உடலியக்க நுட்பங்களில் முன்னிலை வகிக்க வேண்டும். அறிவியலில் பின் தங்க முடியாது.

நம் கல்வி நிறுவனங்கள் பலரையும் அதற்குத் தகுதியானவர்களாக உருவாக்க வேண்டும். மனித வள மேம்பாடு முக்கியம். அதற்கு சர்வதேசத் தரத்தில் கல்வி முக்கியம். இதில் எல்லாம் எந்த கட்சியும் முரண்பட முடியாது – தொலைக்காட்சி விவாத மொழியில் சொன்னால் மாற்றுக் கருத்து கிடையாது.

அப்படியானால் இதுவரையிலான கல்வித்துறை வளர்ச்சியை சாத்தியமாக்கியது, பல்வேறு அறிவுத்துறைகள், தொழில்துறைகள், வர்த்தகம், பொருளாதாரம், அரசியல், வரலாறு என அனைத்திலும் புது ரத்தம் பாய்ச்சியது மெக்காலே அறிமுகம் செய்த ஆங்கிலக் கல்விதானே? அதன் தொடர்ச்சியாகத்தானே நாம் இன்று சர்வதேச வளர்ச்சியில் பங்கெடுக்க முடிகிறது?

இந்த இடத்தில்தான் பாஜக திடீரென மாற்று வடிவம் எடுக்கிறது. நம் பண்டைய அறிவுச்செல்வத்தை நாம் மெக்காலேவால் இழந்துவிட்டோம். சமஸ்கிருதத்தை விட்டுவிட்டு ஆங்கிலம் பயின்றோம். ஆங்கிலக் கல்வியே முக்கியம் என நினைக்கிறோம். நமக்கு அடிமை மனோநிலை வந்துவிட்டது. நமது பண்பாட்டைப் புறக்கணிக்கிறோம் என்றெல்லாம் ஆவேசமாகப் பேசுகிறது.

இயக்குனர் ஷங்கர் அந்நியன் என்று ஒரு படம் எடுத்தார். அதில் நடிகர் விக்ரம் அம்பி என்ற சாதுவான வைணவ ஐயங்கார் வக்கீலாக நடித்திருந்தார். ஆனால் அவருக்கு ஒரு உளவியல் நோய். அவர் தன்னை பலராக உணர்வார் – மல்டிபிள் பர்சனாலிடி டிசார்டர். அதனால் அவர் தவறு செய்பவர்களை தண்டிக்க பயங்கரமான அந்நியன் உருவெடுப்பார்.  தன் காதலியை கவர்வதற்காக ரெமோ என்று ஸ்டைலாக ஆங்கிலம் பேசும் மாடலாக உருவெடுப்பார். எப்போது அம்பி என்ன வடிவெடுப்பார் என்பது அவருக்கே தெரியாது.

அது போல பெரும் பொருளாதார முன்னேற்றம் வேண்டும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் முன்னணியில் இருக்க வேண்டும், சர்வதேச சந்தையில் நாம் வலிமையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கூறுபவர்கள் திடீரென நமது கல்விமுறையை மாற்ற வேண்டும், மெக்காலே கெடுத்த பண்பாட்டு வளங்களை மீட்டெடுக்க வேண்டும் என்றெல்லாம் பேசுகிறார்கள். அவர் எதைக் கெடுத்தார், எதை மீட்க வேண்டும், அப்படி மீட்டதை வைத்து இன்றைக்கு நம் நாட்டை எப்படி முன்னேற்ற வேண்டும் என்பதை எல்லாம் அவர்கள் தெளிவாகக் கூறுவதில்லை.

பொதுவாக முரண்பாடாக இயங்குபவர்களைக் குறித்து ரைட்டில் இண்டிகேட்டர் போட்டுவிட்டு லெஃப்டில் வண்டியை திருப்புகிறார்கள் என்று சொல்வார்கள். பாஜக வண்டியை முன்னால் செலுத்த ரிவர்ஸ் கியர் போட வேண்டும் என்று சொல்கிறதா என்று குழப்பமாக இருக்கிறது. இதை நாம் புரிந்துகொள்ள காலனி ஆட்சி எதனால் உருவானது, மெக்காலே கல்வி எதனால் அவசியமானது, அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும்.

காலனி ஆட்சியும், மெக்காலேவும்

கிரேக்கம், ரோமானிய பேரரசு, எகிப்து, அரேபியா, சீனா, இந்தியா ஆகிய நிலப்பரப்புகளுக்குள் விவசாய சமூகங்கள் உருவான பிறகு நீண்ட நெடுங்காலமாக வர்த்தக உறவுகளும், தொடர்புகளும் இருந்து வந்துள்ளன. எல்லா நாடுகளிலும் அரசர்கள், அமைச்சர்கள், படைத்தலைவர்கள், மதகுருமார்கள், நிலப்பிரபுக்கள், வர்த்தகர்கள் என்பன போன்ற அமைப்புகளும் நிலவின. 

பன்னிரெண்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு ஐரோப்பாவில் கிறிஸ்துவ மதத்தின் துணையுடன் நிலபிரபுத்துவ சமூகம் என்பது நிலைபெற்றது. அதனால் வரி வசூலில் ஒழுங்குமுறை ஏற்பட்டு உபரி பொருளாதாரம் வர்த்தகத்தை அதிகரித்தது. உணவுக்கான மசாலா பொருட்களும், பட்டுத்துணி போன்ற பல பொருட்களும் இந்தியா சீனாவிலிருந்து அவசியமாக ஐரோப்பாவிற்குத் தேவைப்பட்டது. நில வழியாகக் குறைந்த அளவே பொருட்களை கொண்டு போக முடியும் என்பதால் கடல் மார்க்கத்தை கண்டுபிடிக்க ஒரு தேவை இருந்தது.

இதற்கிடையில் அச்சு இயந்திரத்தை 1436-1445 ஆண்டுகளில் ஜெர்மனியில் கூடன்பர்க் என்பவர் உருவாக்கினார். இது அறிவுப்பரவலில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கியது. ஏனெனில் எந்த ஒரு ஆய்வாளரும், கணித வல்லுனரும் தங்கள் பயிற்சிகளை நூல்களாக எழுதி அச்சிட்டு விரைவில் பகிர்ந்துகொள்ள முடிந்தது.

இந்தியாவிற்குக் கடல் மார்க்கம் தேடிப் புறப்பட்ட கொலம்பஸ் 1492-ஆம் ஆண்டு அமெரிக்கக் கண்டங்களை கண்டடைந்தார். அதனைத் தொடர்ந்து 1498-ஆம் ஆண்டு வாஸ்கோ ட காமா இந்தியாவிற்குக் கடல் வழி கண்டு கேரள மாநில கள்ளிக்கோட்டையில் (காலிகட்) வந்து இறங்கினார்.

இந்த மூன்று நிகழ்வுகள், அச்சு இயந்திரம் உருவானது, அமெரிக்க கண்டங்கள் கண்டறியப்பட்டது, இந்தியாவிற்கான கடல்வழி கண்டறியப்பட்டது ஆகியவை ஐரோப்பிய சமூகத்தில் பெரும் மாற்றங்களை தோற்றுவிக்கத் துவங்கின. குறிப்பாக அறிவுத் துறைகளில், ஆய்வுகளில் புத்தகங்களின் பரவலினால் பெரும் பாய்ச்சல் ஏற்பட்டது.

கிரேக்க, இலத்தீன் மொழிகளில் எழுதிவந்தது மாறி, மக்கள் பேசும் மொழிகளில் எழுதுவது அதிகரித்தது. காரணம் பண்டிதர்களின் மொழியில் புத்தகத்தை அச்சிட்டால் குறைந்த நபர்களே வாங்குவார்கள். மக்கள் பேசும் மொழிகளில் அச்சிட்டால்தான் நிறைய பிரதிகள் விற்கும். மக்கள் தொகுதிகள் மொழிவாரி தேசங்களாக உருவாக இந்த அச்சு முதலீட்டியம் முக்கிய காரணம் என்று கூறுகிறார் ஆய்வாளர் பெனடிக்ட் ஆண்டர்சன்.     

மேலும் தனி நபர்களை, அவர்கள் அனுபவங்களை மையப்படுத்தும் சிந்தனைகள் வலுவடைந்தன. அதனுடன் ஆய்வு மனப்பான்மையும் வளர்ந்தது. புதிய அறிவியல், அரசியல் சிந்தனைகள் பெருகின. உதாரணமாக ஃபிரான்சிஸ் பேகன் (1561-1626), கலிலியோ (1564-1642), தாமஸ் ஹாப்ஸ் (1588-1679), ராபர்ட் பாயில் (1627-1691), ஐசக் நியூட்டன் (1643-1727) என்பது போன்ற ஏராளமான சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள் ஆங்கிலம், இத்தாலி, ஃபிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் எழுதுகிறார்கள். அவை மக்கள் மத்தியில் பரவுகின்றன. பொதுக்கல்வி வடிவமெடுக்கிறது. பொது மன்றம் உருவாகிறது. 

இந்த காலகட்ட த்தில் 1500-1700 காலகட்ட த்தில் இந்தியாவில் சிந்தனையாளர்களே இல்லையா, அறிவியலே இல்லையா என்றால் இருந்திருக்கலாம். ஆனால் அச்சு இயந்திரம் பயன்பாட்டுக்கு வரவில்லை, மக்கள் பேசும் மொழிகளில் பொதுக்கல்வியோ, பொதுமன்றமோ உருவாகவில்லை என்பதால் ஐரோப்பாவில் ஏற்பட்ட நவீன தன்னுணர்வு இந்தியாவில் உருவாகவில்லை என்றுதான் கூற வேண்டும். இது அப்பட்டமான வரலாற்று யதார்த்தம்.

இந்த தன்னுணர்வின் வெளிப்பாடாகத்தான் வரலாறு எழுதுதலும், வரலாற்று ஆய்வுகளும் துவங்கின. அதனால் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வந்ததும் இந்தியாவின் மொழிகளைக் கற்று, இந்திய வரலாறு, பண்பாடு குறித்து அவர்கள் மொழிகளில் எழுதத் துவங்கினார்கள். சமஸ்கிருத நூல்களை பயின்று அவற்றை அச்சிட்டார்கள். காளிதாசரின் சாகுந்தலத்தை ஜெர்மானிய கவிஞர் கூத (Goethe, 1749-1832) வியந்தோதினார். அசோகரின் பிராமி கல்வெட்டுகளை ஜேம்ஸ் பிரென்சப் (1799-1840) வாசித்து அறிந்தபோதுதான் இந்திய வரலாறு வெளிச்சத்திற்கு வந்தது.

பல்வேறு பேரரசுகளாக, சிற்றரசுகளாக வரலாறு நெடுகிலும் விளங்கிவந்த நிலப்பரப்பை இந்தியா என்ற ஒற்றை அடையாளமாக சித்தரித்தது, பல்வேறு மொழிகளில் பல்வேறு வழிபாட்டு முறைகள், தெய்வ வடிவங்கள், தத்துவங்கள் என்று இருந்தவற்றை இந்து என்ற ஒற்றை மதமாக சித்தரித்து பயிலத் துவங்கியது ஆகியவற்றில் ஐரோப்பியர்களின் பங்கு முதன்மையானது.  

கிழக்கிந்திய கம்பெனியோ, இங்கிலாந்து அரசோ பொருளீட்டத்தான் இந்தியாவிற்கு வந்தன. இந்தியர்களை சுரண்டிக்கொழுத்தன, கொள்ளையடித்தன. அதற்கு ஏன் இந்திய மன்னர்கள் இடமளித்தார்கள் என்பது வேறு கேள்வி. அதற்கான காரணங்கள் பல.

இந்த பின்னணியில்தான் பல்வேறு காரணிகளால் தங்கள் ஆளுகைக்குள் வந்த இந்திய நிலப்பகுதிகளை எப்படி ஆட்சி செய்வது என்ற கேள்வி கிழக்கிந்திய கம்பெனிக்கும், இங்கிலாந்து அரசிற்கும் ஏற்பட்டது. அப்போதுதான் தாமஸ் பாபிங்க்டன் மெக்காலே (1800-1859) இந்தியாவிற்கு வந்தார். இந்தியர்களுக்கு ஆங்கிலக் கல்வியும், ஆங்கில/ஐரோப்பிய சிந்தனை முறைகளில், அறிவியல், அரசியல் ஆகியவற்றில் பயிற்சியும் கொடுத்தால் அவர்கள் அந்த சிந்தனைகளை அவரவர் சொந்த மொழிகளில் எழுதி வளர்த்தெடுத்துக் கொள்வார்கள் என்று கருதினார்.

மெக்காலே கல்விமுறை பயனளித்ததா?

ஆங்கிலக் கல்வியும், அது உருவாக்கிய நவீன தன்னுணர்வு, அறிவியல், அரசியல் சிந்தனைகளும்தான் இந்திய தேசியத்தை உருவாக்கின. உதாரணமாக பால கங்காதர திலகர் (1856-1920) மராத்திய சித்பவன் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். அவர் தந்தை சமஸ்கிருத ஆசிரியர். திலகர் டெக்கான் கல்லூரியில் பி.ஏ. கணிதம் பயின்றார். அவரும்  விஷ்ணு சாஸ்திரி சிப்லூங்கர், கோபால் கணேஷ் அகர்கர் ஆகியோரும் ஆங்கிலத்தில் பட்டப் படிப்புகளை பயின்றதுடன் New English School என்ற ஆங்கிலப் பள்ளியையும், ஃபெர்குசன் காலேஜ் என்று ஆங்கிலேயே கவர்னர் பெயரில் ஒரு கல்லூரியையும் துவங்கினர். அந்தக் கல்லூரியில் கணிதம் போதித்தார் பால கங்காதர திலகர்.

அவர் மட்டுமல்ல, மூஞ்சே, சாவர்க்கர், ஹெட்கவார் என இந்துத்துவ பிதாமகர்கள் அனைவரும் ஆங்கிலக் கல்வி பயின்றவர்கள். மூஞ்சே இத்தாலி சென்று முசோலினியைச் சந்தித்தார். பாசிச ராணுவப் பயிற்சி முகாமை பார்த்துதான் ஆர்.எஸ்.எஸ் உருவாக்க ஆலோசனை கூறினார். சாவர்க்கர் இத்தாலிய தேசியவாதி மாஜினியைப் படித்ததுதான் அவர் வாழ்வின் திருப்புமுனை. அவர் மாஜினியைக் குறித்து நூல் எழுதினார்.

பாஜக உயர்த்திப் பிடிக்கும் ஒற்றை தேசிய அடையாளம், ஒற்றை மத அடையாளம் ஆகிய அனைத்துமே ஐரோப்பிய தேசியவாத சிந்தனைகளின் தாக்கம்தான் என்பதை ஏராளமான ஆய்வாளர்கள் விரிவாக எழுதியுள்ளார்கள்.

அதே போல காங்கிரஸ் தலைவர்கள் காந்தி, நேரு உள்ளிட்ட பெரும்பாலோர் சட்டம் படித்தவர்கள். அவர்கள் பலர் இங்கிலாந்தில் சென்று படித்தவர்கள். அவர்கள் சுதந்திரவாதம், மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை, பன்மைத்துவம், சோஷலிசம் ஆகியவற்றை முன்னெடுத்தார்கள். காந்தி ஹென்றி டேவிட் தோரோ, தால்ஸ்தாய் ஆகியோரால் பெரிதும் தாக்கம் பெற்றார்.

தலைவர்கள் அனைவரும் ஆங்கிலம் பயின்றதால்தான் இந்தியாவின் பலபகுதிகளைச் சேர்ந்தவர்கள் காங்கிரசிலோ, இந்து மகாசபையிலோ இணைந்து பணியாற்ற முடிந்தது. இருநூறு ஆண்டுகளில் ஆங்கிலம் இந்திய மொழிகளில் ஒன்று என்னும் அளவு பழகிவிட்டது.

ஆங்கிலம் பயின்றதால் இந்திய மொழிகள் அழியவில்லை. ஆங்கிலத்தில் பயின்றதை அனைத்து இந்திய மொழிகளிலும் எழுதி, உள்ளூர் சிந்தனைகளை உலக சிந்தனைகளுடன் இணைத்தே இன்றைய பொதுமன்றங்கள் இயங்குகின்றன. தமிழில்தான் எத்தனை மொழியாக்கங்கள் நடக்கின்றன? எத்தனை புதிய சிந்தனைகள் தமிழ் பண்பாட்டின் சிறப்புகளை ஆராயத் தலைபடுகின்றன?

ஜோதிபா பூலேவும், சாவித்ரி பாய் பூலேவும் ஏற்படுத்திய கல்வி மறுமலர்ச்சி மராத்திய சிந்தனைக்கு புத ரத்தம் பாய்ச்சவில்லையா? அயோத்தி தாசர் ஆங்கிலம் பயின்றது நவபெளத்த சிந்தனைகளை உயிர்ப்பிக்கவில்லையா? பெரியார், அண்ணா, கலைஞரின் சிந்தனைகள் தமிழ் சிந்தனைக்கு புது ரத்தம் பாய்ச்சவில்லையா?

தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துகிறோம் என்று சொல்லும் பாஜக போஜ்பூரி, மைதிலி, அவதி போன்ற மொழிகளில் பள்ளிக்கல்வியை வழங்க முன்வருமா? தாய்மொழி என்பதன் வரையறை என்ன? வட இந்தியாவில் இருப்பவர்கள் அனைவருக்கும் இந்தி தாய்மொழி என்று கூறுவது ஏற்கத்தக்கதா?

தாய்மொழிக்கல்வியுடன் கூட ஆங்கில மொழிக்கல்வியும் இணைந்திருப்பதுதான் இந்தியாவின் ஆற்றல்கள் வெளிப்பட உதவும். உயர்கல்வியில் ஆங்கில மொழி அறிவு அவசியமானது. அதுதான் சர்வதேச அறிவுப் பரிமாற்றத்தை சாத்தியமாக்கும்.

இருபத்தோராம் நூற்றாண்டில் அறிவியல் ஒருபுறம் வேகமாக வாழ்வை மாற்றிவருகிறது. மற்றொருபுறம் சூழலியல் சீர்கேடு உலகளாவிய பிரச்சினையாக மாறி வருகிறது. இன்றைய சூழலில் கிழக்கு, மேற்கு என்று பண்டைய பண்பாட்டு அடிப்படைவாதங்களுக்கு எந்த பொருத்தமும் கிடையாது. கோளவியல் (planetarity) என்ற மானுட பொதுநோக்கே இன்றைய தன்னுணர்வின் தேவையாக உள்ளது.

ஆனால் பாஜக-வின் பிரச்சினை வேறு விதமானது. பிரதமர் மெக்காலே கல்வியால் நாம் ராமரை கற்பனை பாத்திரம் என்று கூறத் துணிந்தோம் என்று வருந்துகிறார். இங்கேதான் இன்னொரு அந்நியன் வடிவம் வெளிவருகிறது. ராமரை கடவுளாகத்தான் மக்கள் வழிபடுகிறார்கள். ஆனால் சாவர்க்கரும் பிறரும் அவர் வரலாற்றில் வாழ்ந்த மனிதர், கற்பனையல்ல என்று கூறுகிறார்கள். பகுத்தறிவு சார்ந்த வரலாற்று ஆய்வில் புற ஆதாரங்கள் இல்லாமல் எதையும் வரலாற்று உண்மையாக எடுத்துக் கொள்ள முடியாது.

இதையெல்லாம் தொகுத்துப் பார்த்தால் பாஜக ஒரு புறம் அம்பியாக நமது பண்டைய பண்பாடு, காந்தி, அகிம்சை என்று சாத்வீக வடிவம் எடுக்கும், அந்நியனாக ஒற்றை மத அடையாள ஒற்றைத் தேசிய அடையாள பாசிச வன்முறை அரசியலை முன்னெடுக்கும், ஆனால் முதலீட்டிய வளர்ச்சி சர்வதேச வர்த்தகம் என ரெமோ வடிவமும் எடுக்கும் என்றுதான் தோன்றுகிறது. இந்துத்துவத்தின் உண்மையான வடிவை புரிந்துகொள்வது சிக்கல்தான். அவர்களுக்கே அதில் தெளிவிருக்கிறதா என்றும் தெரியவில்லை.  

கட்டுரையாளர் குறிப்பு:  

Multiple Personality Disorder of Hindutva Ideology - Article in Tamil By Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share