பாரதியாரை அழைத்து வரச் சொன்ன எம்எஸ்வி: அதிர்ந்து போன படக்குழு!

Published On:

| By Minnambalam Desk

சிவாஜி, சாவித்ரி, எஸ்எஸ்ஆர், கேஆர் விஜயா நடிப்பில் கேஎஸ் கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் 1964 ஆம் ஆண்டு வெளி வந்து பெரும் வெற்றி பெற்ற படம் ‘கை கொடுத்த தெய்வம்’.

கேஆர் விஜயாவுக்கு இது இரண்டாவது படம். ஜனாதிபதியின் வெள்ளிப் பதக்கம் வாங்கிய படம் இது

இந்தப் படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுத ஒரு பாடலை மட்டும் தேச ஒற்றுமை நோக்கோடு வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் இயக்குனர் . அது சினிமாவில் வருவதற்கு முன்பே பிரபலமான பாட்டாக இருக்க வேண்டும் என்று எண்ணி , மகாகவி பாரதியார் எழுதிய ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ பாடலையே பயன்படுத்த நினைத்தார்.

    பாடலைக் கொண்டு போய் எம்எஸ் விஸ்வநாதனிடம் கொடுத்தார். இது யார் எழுதின பாட்டு என்று எம்எஸ்வி கேட்க, பாரதியார் எழுதின பாட்டு என்று சொல்லி விட்டுப் போனார் கேஎஸ் கோபாலகிருஷ்ணன்.

    ADVERTISEMENT

    மெட்டுப் போட ஆரம்பித்தார் எம்எஸ்வி . ஒரு இடம் அவருக்கு ரொம்ப இடித்தது .

    கேஎஸ் கோபால கிருஷ்ணன் வந்தபோது , ” என்னங்க இது? சுந்தரத் தெலுங்கினில் பாட்டி செத்து … பாட்டி செத்துன்னு வருது. நல்லா இல்லியே என்கிறார். அதிர்ந்து போன கே எஸ் கோபால கிருஷ்ணன் ”அது பாட்டி செத்து இல்ல பாட்டிசைத்து ”என்று சொன்னார்

    ADVERTISEMENT

    எம்எஸ் வி விடவில்லை. “இருக்கட்டும். ஆனா பாடும்போது பாட்டி செத்து பாட்டி செத்துன்னு தான் கேட்கும். அந்த வரியை மாத்தணும்” என்றார்.

    கேஎஸ்ஜி , ” அப்படி எல்லாம் முடியாது . அது பாரதியார் பாட்டு” என்று சொல்ல, எம்எஸ்வி “யாரா இருந்தா என்ன? பாரதியார் எழுதின பாட்டுதானே? நான் என்ன உங்களையா மாத்தைச் சொன்னேன். அந்த பாரதியாரையே வரச் சொல்லி மாத்திக் கொடுக்கச் சொல்லுங்க ” என்று போட்டார் ஒரு போடு .

    ஆடிப் போன கே எஸ் கோபால கிருஷ்ணன், ” யோவ் . அவரு செத்து நாப்பது வருஷத்துக்கு மேல ஆச்சுய்யா ” என்று சொல்ல அதிர்ந்து போனார் எம்எஸ்வி .

    அப்புறம் அவரிடம் பாரதியார் பற்றி எல்லாரும் சொல்ல , ” அய்யா பகவானே.. தெரியாம சொல்லிட்டேன் எல்லாரும் மன்னிச்சுடுங்க ” என்றாராம் எம்எஸ்வி .

    அந்த அளவுக்கு இசை உலகத்தில் மட்டுமே வாழ்ந்து இருக்கிறார் எம்எஸ்வி

    – ராஜ திருமகன்

    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
    Join Our Channel
    Share