தேசிய விருதுடன் விஜயகாந்த் நினைவிடம் மற்றும் சிவாஜி கணேசன் இல்லம் சென்று எம்.எஸ்.பாஸ்கர் இன்று (செப்டம்பர் 25) மரியாதை செலுத்தியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் 71-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது. இதில் ‘பார்க்கிங்’ படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து பெற்றார் எம்.எஸ்.பாஸ்கர். அப்போது அவர் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்து சென்றது இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு அருகே அமைந்துள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு இன்று சென்ற எம்.எஸ் பாஸ்கர், அங்குள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தேசிய விருதை வைத்து வணங்கி ஆசி பெற்றார். அதன்பின்னர் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவையும்ம் நேரில் சந்தித்து அவரிடம் தேசிய விருதைக் காண்பித்து ஆசி பெற்றார்.
விஜயகாந்துடன் ‘எங்கள் அண்ணா’, ‘கஜேந்திரா’, ‘நிறைஞ்ச மனசு’, ‘தர்ம்புரி’, ‘பேரரசு’ ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தார் எம்.எஸ்.பாஸ்கர்.
இந்த நிலையில் தேசிய விருது வாங்கிய கையுடன் மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் சென்று மரியாதை செலுத்தியது அவரது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே போன்று மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மீது மிகுந்த பற்றுக்கொண்ட எம்.எஸ்.பாஸ்கர், அவரது இல்லத்திற்கு சென்று அங்கு வைக்கபட்டிருந்த சிவாஜியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி ஆசி பெற்றார்.