திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் சிலையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயின் தாயார் கமல்தாய் கவாய் திறந்து வைத்தார். Armstrong statue
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். இன்று ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் உள்ள ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் நோக்கி அவரது மனைவி பொற்கொடி, ஆதரவாளர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், ‘தமிழ் மாநில பகுஜன் சமாஜ்’ என்ற தனிக் கட்சியை தொடங்குவதாகவும் அறிவித்தார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.

மேலும் ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அமைக்கப்பட்டு முழு உருவ சிலையை, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தாயார் கமல்தாய் கவாய் திறந்து வைத்தார்.

ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், விசிக தலைவர் திருமாவளவன், மமக சார்பில் சாதிக் பாட்ஷா, மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பவுத்த மத பிக்குகளும் பங்கேற்றனர்.