வருமான வரி கணக்கு தாக்கல் செய்த லட்சக்கணக்கான வரி செலுத்துவோர் இன்னும் தங்கள் கணக்குகள் செயலாக்கப்படுவதற்காக காத்திருக்கிறார்கள். குறிப்பாக, டிசம்பர் 31 காலக்கெடு முடிந்த பிறகும், பலர் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதை (refund) ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வருமான வரித் துறை இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, மதிப்பீட்டு ஆண்டு (AY) 2025–26க்கு இதுவரை சுமார் 8.80 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 8.66 கோடி கணக்குகள் சரிபார்க்கப்பட்டுவிட்டன.
மேலும், சுமார் 8.02 கோடி கணக்குகள் ஏற்கனவே செயலாக்கப்பட்டுவிட்டன. 63 லட்சம் வரி செலுத்துவோரின் கணக்குகள் இன்னும் செயலாக்க நிலையில் உள்ளன. இவர்களில் பலருக்கு இன்னும் ரீஃபண்ட் வழங்கப்படவில்லை. இவ்வளவு கணக்குகள் ஏன் நிலுவையில் உள்ளன, வரி செலுத்துவோர் கவலைப்பட வேண்டுமா என்ற கேள்விகள் எழுகின்றன.
வரி நிபுணர்களின் கருத்துப்படி, இந்த தாமதங்கள் பெரும்பாலும் வேண்டுமென்றே, சட்ட விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காகவே செய்யப்படுகின்றன. இது கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு அல்ல. இந்த தாமதங்கள் வழக்கமானவைதான்.
வருமான வரிச் சட்டத்தின்படி, மத்திய செயலாக்க மையம் (CPC) ஒரு நிதியாண்டுக்கான கணக்குகளைச் செயலாக்கம் செய்ய அந்த நிதியாண்டு முடிந்து ஒன்பது மாதங்கள் வரை அவகாசம் உள்ளது. AY 2025–26க்கு தாக்கல் செய்யப்பட்ட கணக்குகளுக்கு இது டிசம்பர் 31, 2026 வரை அவகாசம் உள்ளது என்பதைக் குறிக்கிறது. சரிபார்க்கப்பட்ட கணக்குகளில் 90%க்கும் மேல் ஏற்கனவே செயலாக்கம் செய்யப்பட்டுள்ளதால் தற்போதைய நிலுவை சட்ட காலக்கெடுவுக்குள் உள்ளது. எனவே இது கவலைப்பட வேண்டிய விஷயம் அல்ல.
அதிக எண்ணிக்கையிலான நிலுவையில் உள்ள கணக்குகள், ஆட்கள் பற்றாக்குறை அல்லது இணையதளச் சிக்கல்களால் ஏற்படவில்லை. மாறாக, கடுமையான தரவு சோதனைகள் மற்றும் இடர் அடிப்படையிலான செயலாக்கத்தின் (risk-based processing) விளைவாகும். வருமான வரித் துறை இப்போது பெரிய அளவிலான மூன்றாம் தரப்பு தரவுகளைப் பயன்படுத்துகிறது. இதில் TDS தாக்கல், வருடாந்திர தகவல் அறிக்கைகள் (AIS), படிவம் 26AS, வங்கித் தரவுகள், பரஸ்பர நிதி பரிவர்த்தனைகள் மற்றும் SFT அறிக்கைகள் ஆகியவை அடங்கும்.
வரி செலுத்துவோர் தாக்கல் செய்த கணக்கில் உள்ள தகவல்கள் இந்தத் தரவுகளுடன் முழுமையாகப் பொருந்தவில்லை என்றால், அந்தக் கணக்கு தானாகவே ஃபிளாக் செய்யப்படும் (flagged). அதாவடு, வருமானம், கழிவுகள் அல்லது விலக்குகளில் சிறிய முரண்பாடுகள் இருந்தாலும் செயலாக்கம் தாமதமாகலாம்.
வருமான வரிக்கான ரீஃபண்ட் பணத்தை பெறுதல் தாமதமாவதற்கு முக்கிய காரணம், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிசம்பர் 2025இல் தொடங்கிய “நட்ஜ்” (nudge) பிரச்சாரமாகும். இந்த முயற்சியின் கீழ், கணக்குகளில் முரண்பாடுகள் உள்ள வரி செலுத்துவோருக்கு SMS அல்லது மின்னஞ்சல் மூலம் முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவர்கள் அந்த வேறுபாட்டை ஏற்கவோ அல்லது திருத்தப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட கணக்கைத் தாக்கல் செய்யவோ வாய்ப்பு வழங்கப்படுகிறது. அத்தகைய திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை இந்த கணக்குகளின் செயலாக்கத்தை வருமான துறை வேண்டுமென்றே நிறுத்தி வைக்கிறது.
அதாவது, வரி செலுத்துவோர் தவறைச் சரிசெய்ய அல்லது பணம் செலுத்தப்படுவதற்கு முன்பு அல்லது வரி கோரிக்கைகள் எழுப்பப்படுவதற்கு முன்பு வாய்ப்பளிப்பதற்காக, வரித் துறை பணத்தைத் திரும்பப் பெறுவதை வேண்டுமென்றே நிறுத்தி வைக்கிறது.
