’வாவ்’ அனுபவம்!
குறிப்பிட்ட வகைமையில் அமைந்த படங்களின் திரைக்கதைகள் இப்படித்தான் இருக்கும் என்று கண்களை மூடிக்கொண்டு சொல்ல முடியும். அதற்கேற்ப பாத்திரங்களின் வார்ப்பும் அமைக்கப்பட்டிருக்கும். என்னதான் சிறப்பானதொரு உருவாக்கத்தைக் கொண்டிருந்தாலும், வெகு சுலபமாக ‘க்ளிஷே’ என்று சொல்லிவிட முடியும். அப்படியொரு வகைமைதான் ‘மியூசிகல்’ திரைப்படங்கள். குறிப்பாக, மேற்கத்திய குழு நடனத்தை அடிப்படையாகக் கொண்ட படைப்புகள். moonwalk movie review may 2025
அப்படியொரு படமாக உருவாகியிருக்கிறது மலையாளத் திரைப்படமான ‘மூன்வாக்’. இதுவே, இக்கதையின் மையமாக மைக்கேல் ஜாக்சனின் ‘பிரேக் டான்ஸ்’ அமைந்திருப்பதைச் சொல்லிவிடும். மேற்சொன்னவாறு இப்படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என்ற எண்ணவோட்டம் நமக்குள் பரவிடும்.
நிறைய புதுமுகங்கள் திரையில் மலர்ந்திட, வினோத் ஏ.கே. இயக்கியிருக்கிற ‘மூன்வாக்’ படமும் அப்படியொரு ‘க்ளிஷே’வாக தான் அமைந்திருக்கிறதா அல்லது சிறப்பானதொரு திரையனுபவத்தைத் தருகிறதா?

நடனமே வாழ்வு!
தொண்ணூறுகளில் பெருநகரங்களில் தொடங்கிய ‘மைக்கேல் ஜாக்சன்’ பாணி நடன மோகம் மெல்ல சிறு நகரங்கள், கிராமங்களுக்கும் பரவியது. அந்த வகையில், கேரள கிராமப்பகுதிகளில் வாழ்கிற சில கல்லூரி இளைஞர்களின் வாழ்வில் ‘பிரேக் டான்ஸ்’ ஏற்படுத்திய மாற்றங்களைப் பேசுகிறது ‘மூன்வாக்’.
ஒரு கல்லூரியில் வெவ்வேறு துறைகளில் படிக்கிற இளைஞர்கள். அறிவியல், கலை, கணக்கியல் என்று அவர்களது படிப்புகள் வெவ்வேறு பணிகளை நோக்கி அமைந்திருக்கின்றன. ஆனாலும், நடனம் அவர்களைப் பிணைக்கிறது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு நடனக்குழுவுக்கு ரசிகர்கள் தந்த வரவேற்பினைக் காண்பவர்கள், ‘எப்படி பிரேக் டான்ஸ் ஆடுவது’ என்று யோசிக்கின்றனர். அவர்களிடம் கேட்கின்றனர். அவர்களோ, ‘வீடியோ கேசட்ல எம்ஜே ஆல்பம் பார்த்துதான் கத்துக்கிட்டோம்’ என்கின்றனர்.
வெவ்வேறு பொருளாதாரப் பின்னணி உடையவர்களாக இருந்தாலும், நடன மோகம் அவர்களை ஒன்றிணைக்கிறது. அந்த நேரத்தில், சிங்கப்பூரில் இருந்து கேரளா திரும்பிய இளைஞர் ஒருவருக்கு ‘பிரேக் டான்ஸ்’ தெரியும் என்ற விஷயத்தைக் கேள்விப்படுகின்றனர். அவர்களைத் தேடிச் செல்கின்றனர்.
ஒரு இடத்தில் நடனப் பயிற்சி மேற்கொள்ளத் தொடங்குகின்றனர். மெல்ல அவர்களது நடை உடை பாவனைகள் மாறுகின்றன. பின்னந்தலையில் மயிர்க்கற்றைகள் புரளத் தொடங்குகின்றன. காதில் கடுக்கண் அணிகின்றனர். உடையணியும் போக்கு மாறுகிறது. மேடையில் அவர்களது நடன அசைவுகள் மெல்ல மெருகேறுகின்றன. அதேநேரத்தில், அவர்களது தோற்றம் சில சண்டை சச்சரவுகளில் மாட்டிக்கொள்ளவும் துணை நிற்கின்றன.
இந்த நிலையில், அந்த ஆண்டுக்கான மாநில நடனப் போட்டியில் பங்கேற்க அந்த இளைஞர்கள் முடிவு செய்கின்றனர். எதிர்பாராத சில நிகழ்வுகள் அவர்களில் சிலரை நடனமாட விடாமல் தடுக்கிறது. பெரிதாக வசதிகள் இன்றி, வழிகாட்டுதல் இன்றி அந்த இளைஞர்கள் மேற்கொள்கிற நடனப் பயணத்தில் வெற்றி கிடைத்ததா என்று சொல்கிறது ‘மூன்வாக்’.
இந்தக் கதையில் கல்லூரி இளைஞர்கள் சிலரோடு கட்டடப் பணிக்குச் செல்கிற ஒரு சித்தாளும் உண்டு. அந்த இளைஞரின் நடன ஆர்வம் எப்படிப்பட்டது என்பதனைக் காட்டுகிற காட்சிகள் ‘க்ளிஷே’ எனச் சொல்ல முடியாதவாறு மிகக்கவனமாக அப்பகுதியைக் கையாண்டிருப்பதே இப்படத்தின் யுஎஸ்பி.

வெற்றி ‘பார்முலா’!
இந்தாண்டில் மட்டும் கணிசமான மலையாளத் திரைப்படங்கள் சினிமா ரசிகர்களின் மனதைக் கொள்ளையடிக்கிறவிதமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கின்றன. ’வாரத்திற்கு ஒரு படமாவது சூப்பரா இருக்கும்’ எனும்படியாகச் சிறப்பான வடிவமைப்பைக் கொண்டிருக்கின்றன.
அவற்றுள் ஒன்று எனச் சொல்லும்படியாக உள்ளது ‘மூன்வாக்’.
இதில் நடித்தவர்களில் பெரும்பாலோனோர் புதுமுகங்கள். நிச்சயமாக அவர்களில் கணிசமானோரை அடுத்தடுத்து பல படங்களில் காண முடியும் என்கிறவிதமாகத் திரையில் தோன்றியிருக்கின்றனர்.
சுஜித் பிரபாகர், அனுநாத், சிபி குட்டப்பன், பிரேம்சங்கர், அப்பு ஆசாரி, ரிஷி கைனிக்கரா, சித்தார்த்.பி, அர்ஜுன் மணிலால், மனோஜ் மோசஸ், சஞ்சனா தாஸ், நைனிடா மரியா என்று பல புதுமுகங்கள் இதில் அசத்தியிருக்கின்றனர்.
காதல், நகைச்சுவை, மோதல், விரக்தி, குதூகலம், இயலாமை உட்படப் பல உணர்வுகளை அவர்கள் வெளிப்படுத்தியிருகிற விதம் ‘வாவ்’ அனுபவமாக இருக்கிறது. இவர்களோடு ஸ்ரீகாந்த் முரளி, வீணா நாயர், துஷாரா பிள்ளை போன்ற அதிக புகழ் வெளிச்சம்படாத ‘சீனியர்’களும் நடித்திருக்கின்றனர்.
‘மூன்வாக்’ படத்தின் ஆகச்சிறப்பான விஷயம், பிரசாந்த் பிள்ளையின் இசையமைப்பு. பின்னணி இசையில் மனிதர் கலக்கியெடுத்திருக்கிறார். அதனை ரசிப்பதற்காக மட்டுமே ஆறேழு முறை பார்க்கலாம் என்கிற அளவுக்கு அவரது பங்களிப்பு படத்தில் உள்ளது.
’இது ஒரு சின்ன பட்ஜெட் படம்’ என்ற எண்ணம் தொடக்கத்தில் உருவானாலும், அடுத்தடுத்த காட்சிகளில் அதனைத் தவிடுபொடியாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அன்சர் ஷா. கிட்டத்தட்ட ஒரு உலகப்படம் பார்க்கிற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.
அவருக்கு பக்கபலமாக இருக்கிற வகையில் கலை இயக்குனர் சாபு மோகனின் குழு உழைப்பைக் கொட்டியிருக்கிறது. வீடியோ கேசட், விசிஆர், ஆடியோ கேசட்கள் தொடங்கி தொண்ணூறுகளில் இருந்த வசதியான மலையாளிகளில் கலாசார நுகர்வுகள் வரை பலவற்றைத் திரையில் வெளிப்படுத்த உதவியிருக்கிறது.
இந்த படத்தில் பல பாத்திரங்கள் ஓரிரு காட்சிகள் திரையில் வருகின்றன, போகின்றன. அவற்றின் இருப்பில் ‘பினிஷிங்’ இல்லை என்று சொல்ல முடியாதவாறு இதன் திரைக்கதை அமைந்திருக்கிறது. அதற்கேற்றவாறு படத்தைத் தொகுத்திருக்கிறது தீபு ஜோசப் – கிரண் தாஸ் கூட்டணி.
சில இளைஞர், இளைஞிகள், அவர்கள் சார்ந்த குடும்பத்தினர், மனிதர்களின் வாழ்வின் ஒரு பகுதியைக் காட்டுவதாக உள்ளது இப்படம். அதற்கேற்றவாறு இதன் எழுத்தாக்கத்தை மேத்யூ வர்கீஸ், சுனில் கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து கையாண்டிருக்கிறார் இயக்குனர் வினோத் ஏ.கே.
தொண்ணூறுகளில் இப்படியெல்லாம் ‘பிரேக் டான்ஸ்’ ஆடியிருக்கிறார்களா என்பதைத் தாண்டி, இப்படியும் ஆட முடியுமா எனும்படியாகக் கதாபாத்திரங்களை நடனமாட வைத்திருக்கிறது ஸ்ரீஜித் பி டேஸ்லர்ஸின் நடன வடிவமைப்பு.

ஓரிரு ஷாட்கள் காட்டப்படுகிற நடனக்குழுக்களும் சிறப்பாக நடனமாடும்படிச் செய்திருப்பதே இப்படத்தோடு நாம் ஒன்றவும், இன்னும் சில காலம் கழித்து ‘கிளாசிக்’ ஆகக் கொண்டாடவும் அடிப்படையாக இருக்கும்.
இது போக ஸ்டண்ட், ஒலி வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, டிஐ, விஎஃப்எக்ஸ் எனப் பல நுட்பங்கள் செறிவுற இதில் இடம்பெற்றிருக்கின்றன.
’ஒரு டான்ஸ் மியூஸிகல் படத்துல என்ன புதுசா பண்ணிட முடியும்’ என்று கேட்பவர்களுக்கு ‘மூன்வாக்’ எந்தப் பதிலும் சொல்லவில்லை. அதேநேரத்தில், ‘இது ஜாலியா, செமையா இருக்கும்’ என்று மட்டும் சொல்லியிருக்கிறது.
இன்று நாற்பதுகளைக் கடந்திருக்கும் சினிமா ரசிகர்களுக்கு இப்படம் பல நினைவுகளைத் தட்டியெழுப்பும். நடனத்தில் ஆர்வம் இல்லாதவர்களையும் கவர்ந்திழுக்கிற சில பிணைப்புகள் இத்திரைக்கதையில், கதாபாத்திரங்களில் பொதிந்திருக்கிறது ‘மூன்வாக்’கின் முக்கிய அம்சம்.
அது மட்டுமல்லாமல், ’முப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால நடந்த கதைய சுவாரஸ்யமா சொல்லுவாங்களா’ என்று கேள்வியோடு தியேட்டருக்கு வருகிற இன்றைய 2கே கிட்ஸ்களையும் ஈர்க்கிற ஒரு விஷயம் இப்படத்தில் இருக்கிறது.
ஆம், கொண்டாட்டத்தை அள்ளித் தருகிற தருணங்கள் ‘மூன்வாக்’கில் அடுத்தடுத்து வந்து போகின்றன. அதே நேரத்தில், பதின்ம வயதினரைக் காட்டுகிற இந்த ‘கம்மிங் ஆஃப் ஏஜ்’ வகைமை திரைப்படத்தில் ‘வயது வந்தோருக்கு மட்டும்’ விஷயங்கள் கொஞ்சம் கூட இல்லை. ஆதலால், குறைகளைத் தேடிக் கண்டுபிடிப்போரும் கொண்டாடுகிற வகையில் இருக்கிறது.
ஆக, தியேட்டர்களில் ‘திருவிழா’வை நிகழ்த்த இந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் இருந்து வந்திருக்கிறது இந்த ‘மூன்வாக்’..