வங்க கடலில் உருவான மோன்தா புயல் (Month மோந்தா) இன்று (அக்டோபர் 28) ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கிறது.
வங்க கடலில் அக்டோபர் 27-ந் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மோன்தா புயலாக வலுவடைந்தது. தற்போது மோன்தா புயல், வடக்கு- வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
மோன்தா புயல் ஆந்திராவின் மசூலிப்பட்டிணம்- கலிங்கபட்டிணம் இடையே காக்கிநாடா அருகே இன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கிறது. மோன்தா புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 90 முதல் 110 கி.மீ.வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆந்திராவில் மோன்தா புயலை எதிர்கொள்ள அம்மாநில அரசு முழுவீச்சில் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காக்கிநாடா உள்ளிட்ட புயல் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மோன்தா புயல் ஆந்திராவில் கரையைக் கடக்கும் நிலையில் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்துக்கு அதிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்
சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது; நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. சென்னை எண்ணூரில் 12 செ.மீ. மழை பதிவானது.
