சென்னை உட்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வங்கக் கடலில் புயல் உருவாகியிருப்பதால ஆந்திராவில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும், ஆந்திராவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் லேசான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 28) வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘நேற்று (27-10-2025) காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “மோன்தா” புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (28-10-2025) காலை 0.530 மணி அளவில் தீவிரப்புயலாக வலுப்பெற்று, காலை 08.30 மணி அளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், மசூலி பட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகபட்டினத்திலிருந்து தெற்கு-தென்மேற்கே 320 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிரப்புயலாக, இன்று (28-10-2025) மாலை / இரவு நேரத்தில் கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நேற்று (27-10-2025) மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (28-10-2025) காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 36 மணி நேரத்தில் மேலும், வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும்.
28-10-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை & காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
29-10-2025 முதல் 03-11-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
