இந்தியா- அமெரிக்கா இடையேயான புதிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக எம்.பிக்கள் டிஆர் பாலு, திருச்சி சிவா நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென, ”இந்தியாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிறது; ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில்லை என இந்தியா முடிவு செய்துவிட்டதால் இந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிறது; இந்திய பொருட்கள் மீதான வரி 18% ஆக குறைக்கப்படுகிறது; அமெரிக்காவின் பொருட்களையே இனி வாங்குவோம் என பிரதமர் மோடி ஒப்புக் கொண்டுள்ளார்” என அறிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், “அமெரிக்கா வரி குறைப்பை அறிவித்துள்ளதற்கு நன்றி” என தெரிவித்திருந்தார். ஆனால் புதிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து மோடி எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த விவகாரம் தற்போது பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது. அமெரிக்காவின் பொருட்களையே வாங்குவோம் என்ற மோடியின் முடிவால் இந்திய விவசாயிகளின் எதிர்காலம் மிகப் பெரும் கேள்விக்குறியாகி உள்ளதாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் இந்தியா- அமெரிக்கா இடையேயான புதிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் விவாதிக்க கோரி திமுகவின் டிஆர் பாலு, திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
