அமிதாப் துபே
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிந்தைய பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைகள், இந்தியாவின் நீண்டகால ஒருமித்த கருத்தான “சுயேச்சையான வெளியுறவுச் செயல்பாட்டிலிருந்து” அவர் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுவிட்டார் என்பதைக் காட்டுகின்றன. இந்தச் சுதந்திரமான அணுகுமுறை என்பது மேற்கத்திய நாடுகளுடன் பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பு தொடர்பாகவும் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொள்வதோடு, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளுடன் தொழில்நுட்ப, எரிசக்தி, பாதுகாப்பு ஆகியவை சார்ந்து இந்தியாவுக்கு இருக்கும் உறவுகளைக் கைவிடாமல் இருப்பதே ஆகும்.
ஈரான் விவகாரத்தில் பிரதமர் மோடி செய்த தவிர்க்கக்கூடிய மூன்று தவறுகள், உலகத் தலைமை குறித்த அவரது பெருமைகளைத் தகர்த்ததோடு, இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளன.
மேற்கு ஆசியாவில் எந்தவொரு இந்திய அரசாங்கமும் சமநிலைப்படுத்த வேண்டிய மூன்று முக்கியமான நலன்கள் உள்ளன:
1.அமெரிக்கா, இஸ்ரேல்: வர்த்தகம், முதலீட்டிற்கு அமெரிக்காவையும், ஆயுதங்களுக்கு இஸ்ரேலையும் இந்தியா சார்ந்துள்ளது.

2.ஈரான்: இந்தியாவுக்கு எரிசக்தி வழங்கும் நாடு; ஹார்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் உலக எண்ணெய், எரிவாயு விலையைத் தீர்மானிக்கும் சக்தி கொண்டது. மேலும் இது ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானைச் சார்ந்துள்ள பிராந்திய வலிமை கொண்ட நாடாகும்.
3.வளைகுடா நாடுகள்: இவை இந்தியாவுக்கு எண்ணெய், எரிவாயு, உரங்களை வழங்கும் முக்கிய நாடுகள். மேலும் பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் சுமார் 1 கோடி இந்தியர்கள் வாழ்கின்றனர்.
இத்தகைய சிக்கலான சூழலில், இந்தியா இருதரப்பிலிருந்தும் சமமான தூரத்தைப் பேணுவதும், தேவைப்பட்டால் நேர்மையான சமரசத் தரகராகச் செயல்படுவதும், பல தசாப்தங்களாக இந்தியாவுக்குப் பயனளித்துவரும் “விதிமுறைகளின் அடிப்படையிலான உலக ஒழுங்கை” (Rules-based order) நிலைநிறுத்துவதுமே தர்க்கரீதியான பாதையாக இருந்திருக்கும். குறைந்தபட்சம், இஸ்ரேலுக்கான அரசுமுறைப் பயணத்தைத் தள்ளிவைத்திருக்க வேண்டும். ஈரானின் உயரிய தலைவர் அலி ஹொசைனி கமேனியின் சட்டவிரோதப் படுகொலைக்குக் கண்டனம் தெரிவிக்காவிட்டாலும், இரங்கலாவது தெரிவித்திருக்க வேண்டும்.

அந்த மூன்று தவறுகள்
முதலாவதாக, ஒரு போர் மூளப்போவது அனைவருக்கும் தெரிந்திருந்த சூழலில், அதன் விளிம்பில் நின்றுகொண்டு இஸ்ரேலுக்குப் பிரதமர் பயணம் மேற்கொண்டது, நாம் இஸ்ரேல் பக்கம் சாய்ந்துவிட்டோம் என்ற வினோதமான சமிக்ஞையை உலகிற்குத் தந்தது.
இரண்டாவதாக, கமேனி படுகொலை செய்யப்பட்டபோது நாம் மௌனம்காத்தோம். மோடி அரசாங்கம் ஒருபடி மேலே சென்று, ஈரானிய இரங்கல் புத்தகங்களில் கையெழுத்திட வேண்டாம் என்று உலகம் முழுவதிலும் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. பின்னர் அந்த முடிவை மாற்றி, ஒரு அமைச்சரை அனுப்புவதற்குப் பதிலாக வெளியுறவுச் செயலாளரை அனுப்பி ஈரானியத் தூதரகத்தில் கையெழுத்திட வைத்தது.

மூன்றாவதாக, இந்தியாவின் ‘மிலன்’ (MILAN) கடற்படைப் பயிற்சியில் விருந்தினராகப் பங்கேற்றுச் சென்ற சில நாட்களிலேயே, ஈரானின் ‘ஐரிஸ் தேனா’ (IRIS Dena) என்ற போர்க்கப்பலை அமெரிக்கக் கடற்படை மூழ்கடித்ததை நாம் மௌனமாக வேடிக்கை பார்த்தோம்.
ஈரான் மீதான தாக்குதல் குறித்து நாம் எதுவும் சொல்லவில்லை, ஆனால் பாரசீக வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலைக் கண்டிக்கும் ஐநா தீர்மானத்தை ஆதரித்தோம். வளைகுடா நாடுகளுடனான நமது உறவின் அடிப்படையில் இது புரிந்துகொள்ளக்கூடியது என்றாலும், ஈரான் மீதான தாக்குதலில் நாம் காட்டிய மௌனம் வினோதமானது. இப்போது, பாரசீக வளைகுடாவில் சிக்கியுள்ள இந்தியக் கப்பல்களை விடுவிக்குமாறு ஈரானிய அரசாங்கத்திடம் கெஞ்ச வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

ஈரான் மீதான தாக்குதலுக்கு இந்தியாவின் எதிர்வினை இன்னும் கடுமையாக இருக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை, “பதற்றமான எதிர்வினை” என்றும், “கற்பனையான தார்மீகத் தூய்மையை” எட்ட முனையும் முயற்சி என்றும் சில ஆய்வாளர்கள் விமர்சிக்கிறார்கள். ஆனால், பயத்தினால் மௌனம் காப்பது மட்டுமே தீர்வாகாது. உலக அரங்கில் ஒரு உயரிய இடத்தைப் பிடிப்பதன் நோக்கம் என்ன? முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கூறியது போல, “வாயை மூடிக்கொண்டிருப்பது ராஜதந்திரம் அல்ல.”
இந்திய-அமெரிக்க உறவை மேம்படுத்தப் பாடுபட்ட மன்மோகன் சிங், 2005இல் அமெரிக்கப் பயணத்தின்போது ஈராக் மீதான ஆக்கிரமிப்பு தவறு என்று துணிச்சலாகக் கூறினார். ஆனால், வாஷிங்டனுக்கு மோடி அரசு காட்டும் கீழ்ப்படிதலுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. டிரம்பின் செயல்பாடுகள் இந்தியாவின் ஏற்றுமதிப் போட்டியை முடக்குவதாகவே உள்ளன.

முடிவு என்ன?
இனி நடக்கப்போவதை யாராலும் தடுக்க முடியாது; எரிசக்திச் சந்தையில் ஏற்படப்போகும் பாதிப்புகள் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று மட்டுமே இந்தியா இப்போது எதிர்பார்க்க முடியும். அமெரிக்காவுக்கு எவ்வளவு நெருக்கடியைத் தர முடியுமோ, அவ்வளவையும் ஈரான் கொடுக்கும்; அந்த மோதலின் பக்க விளைவாக இந்தியாவுக்கும் பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

இந்தியப் பொருளாதாரத்தையும், தனது அரசியல் செல்வாக்கையும் சிதைக்கக்கூடிய ஒரு போரைத் தடுக்க மோடி ஒரு சிறு முயற்சியைக்கூட எடுக்கவில்லை. வரலாறு ஒரு பாடம்: 1973 எண்ணெய் அதிர்ச்சி இந்தியாவில் நெருக்கடி நிலைக்கு வழிவகுத்தது. 1979 எண்ணெய் அதிர்ச்சி இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஆட்சிகளை மாற்றியது.
மோடி தனது சொந்த நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் செயல்படாமல், யாருடைய நலனுக்காகச் செயல்படுகிறார் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
கட்டுரையாளர்: அமிதாப் துபே, காங்கிரஸ் உறுப்பினர்.
நன்றி: தி பிரிண்ட் இணைய இதழ்
