தென் இந்திய விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள கோவை வந்த பிரதமர் பீகாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ? என்று என் மனம் அலாவியது என தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை முடித்துகொண்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை வந்தடைந்தார். கொடிசியாவில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். விழாவில் பேசிய மோடி வணக்கம் என தனது உரையை தொடங்கினார். மேலும் பி.ஆர் பாண்டியனின் உரை தமிழில் இருந்ததால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஆளுநர் ரவியிடம் பாண்டியனின் உரையை இந்தி அல்லது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தருமாறு கேட்டுள்ளேன் என்றார்.
மேலும் நான் மேடையிலே வந்த போது பல வேளாண் குடிமக்கள் தங்கள் மேல் துண்டை வீசி கொண்டிருந்தார்கள். அப்போது பீகாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று என் மனம் அலாவியது என்றார்.
கோவை மருதமலையில் குடியிருக்கும் முருகனை தலைவணங்குகிறேன். தென் பாரதத்தின் தொழில் முனைவு ஆற்றலின் சக்தி பீடம் என்றார்.
மோடியின் கவனத்தை ஈர்த்த மாணவிகள்
கோவையில் பிரதமர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது தனியார் பள்ளியைச் சேர்ந்த ஸ்ரிங்கா,மித்ரா ஆகிய இரண்டு சிறுமிகள் அவரின் கவனத்தை ஈர்த்திருந்தனர். அப்போது பேசிய பிரதமர் சிறுமிகள் கையில் வைத்திருந்த பதாகைகளில் இருந்த வாசகங்களை உன்னிப்பாக எடுத்துக் கொள்கிறேன் என மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே கூறினார்.
அந்த பதாகையில், “எங்களுக்கு ஓட்டுரிமை வருவதற்குள் தமிழ்நாட்டில் தாமரை மலரும். விரைவில் இந்தியா வளர்ந்த முன்னேறிய நாடாக நிச்சயமாகமாறும். நான் இந்தியா பொருளாதாரத்தில் ரேங்க் 2 (தரவரிசை 2) இருக்கும்போது பட்டம் பெறுவேன். நான் இந்தியா பொருளாதாரத்தில் ரேங்க் 1 (தரவரிசை 1) இருக்கும்போது ஓய்வு பெறுவேன். உங்களின் தொலைநோக்கு பார்வைக்கு நன்றி.” என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
