தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில் மகிழ்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்தார்.
தமிழகத்தின் அறுவடைத் திருவிழாவான பொங்கலை முன்னிட்டு, டில்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழா களைகட்டியது.
ஆண்டுதோறும் எல்.முருகன் தனது டில்லி இல்லத்தில் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு “ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்ற கருப்பொருளுடன் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விழாவில் சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் போன்ற தமிழக பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜி.வி. பிரகாஷ் தலைமையிலான இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழில் “இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!” என்று கூறி தனது பேச்சைத் தொடங்கினார். தொடர்ந்து அவர் கூறியதாவது:”பொங்கல் பண்டிகை உலக அளவில் சர்வதேச பொங்கலாக மாறி உள்ளது. தமிழ் மக்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில் மகிழ்ச்சி
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விழா தான் பொங்கல் பண்டிகை. இதையொட்டி அனைத்து தமிழ் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆயிரம் ஆண்டுக்கு முன் கங்கை கொண்ட சோழபுரத்தில் பொங்கல் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரப் பண்டிகை இது. விவசாயிகளுக்கும் தமிழர்களுக்கும் இருந்த தொடர்பைப் பற்றி பேசுகிறது திருக்குறள். விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே எங்களின் முதல் நோக்கமாக உள்ளது” என்று தெரிவித்தார்.
திரைப் பிரபலங்கள் பங்கேற்பு
பிரதமர் மோடி பங்கேற்ற இந்த பொங்கல் விழாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் பங்கேற்று சிறப்பு சேர்த்தனர்.
