தமிழ்நாடு இயற்கை உழவர் மற்றும் ஆர்வலர் கூட்டுக் குழு சார்பில் கோவை கொடிசியா அரங்கில் ‘தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு-2025’ இன்று முதல் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாநாட்டை துவக்கி வைத்தார்.
விழா மேடையில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான 21வது தவணையாக ரூ.19 ஆயிரம் கோடியை பிரதமர் விடுவித்தார்.
பின்னர் மேடையில் வணக்கம் என்று தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, “புட்டபர்த்தியில் தவிர்க்க முடியாத காரணத்தால் இங்கு தாமதமாக ஏற்பட்டது. அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன்.
கோவை மருதமலை முருகனை வணங்குகின்றேன். இந்த நகரம் தென் பாரத தொழில் முனைவு ஆற்றலின் இடம். ஜவுளித்துறை கோவையின் சிறப்பு. கோவை மேலும் ஒரு காரணத்தால் சிறப்பு பெறுகின்றது. அது சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவராகி இருப்பது.
இதயத்திற்கு நெருக்கமானது
இயற்கை விவசாயம் என் இதயத்திற்கு நெருக்கமானது. மேடைக்கு வரும் முன் அரங்குகளை பார்த்தேன். இயந்திரவியலில் இருந்து ஒருவர், இஸ்ரோவில் இருந்து ஒருவர் என இயற்கை விவசாயத்திற்கு வந்துள்ளனர். நான் இங்கு வரவில்லை என்றால் எனக்கு பல விசயங்கள் தெரியாமல் போய் இருக்கும்.
இங்கு வேளாண் துறையினர், ஸ்டார்ட் அப் உட்பட அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்து இருக்கின்றனர். இனி வரும் ஆண்டுகளில் வேளாண்துறையில் மாறுதல்கள் இருக்கும். பாரதம் வேளாண் துறையில் புதிய பாதையில் பயணிக்க துவங்கி இருப்பதால் ஊராக பகுதி பொருளாதரம் மேம்படும்.
விவசாயிகளுக்கு ஆதாயம்
11 ஆண்டுகளில் வேளாண் தொழில்களில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. வேளாண்தொழிலுக்கு தேவையானதை அரசு செய்து வருகின்றது. விவசாய கடன் அட்டை மூலமாக 10 ஆயிரம் கோடி அளவிற்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பாலும் விவசாயிகளுக்கு ஆதாயம் கிடைத்து இருக்கின்றது. தேசத்தின் அனைத்து விவசாயிகளுக்கும் 18 ஆயிரம் கோடி ரூபாய் இன்று பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேசத்தில் சிறு விவசாயிகளுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
இயற்கை வேளாண்மை பாதையில் நாம் முன்னேறியே ஆக வேண்டும், அப்போதுதான் அடுத்த தலைமுறைக்கு உயிரி பாதுகாப்பு தன்மையினை கொடுக்க முடியும். தமிழகத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இயற்கை விவசாயத்தின் அடிப்படை
இயற்கை வேளாண்மை நமது பாரம்பரியத்தில் பிறந்தது. நம் சுற்று சுழலுக்கு உகந்தது. இயற்கை வேளாண்மையுடன் சிறுதானியங்கள் உற்பத்தியும் ஊக்குவிக்க வேண்டும். நமது சூப்பர் உணவுகள் உலகம் முழுவதும் சென்று சேர வேண்டும்.
கேரளம், கர்நாடக பகுதியில் பல்லடுக்கு விவசாயம் நடைபெறுகிறது. இது தான் இயற்கை விவசாயத்தின் அடிப்படை கோட்பாடு. விவசாயத்தின் இந்த மாதிரியை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.
தென்னிந்தியா வாழும் பல்கலைகழகமாக உள்ளது. கிராமங்களுக்கு சென்று விவசாய நிலங்களை பரிசோதனை கூடமாக்கிட வேண்டும் என ஆராய்ச்சியாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இயற்கை விவசாயத்திற்காக பணியில் மாநில அரசுகள், உற்பத்தியாளர்கள் , விவசாயிகள் ஆகியோரின் பங்கு முக்கியமானது. இந்த மாநாடு தேசத்தின் இயற்கை வேளாண்மைக்கு ஒரு திசையை காட்டும் ” என்றார்.
