கோவையில் பிரதமர் மோடி கலந்து கொள்வது முழுக்க முழுக்க விவசாயிகள் நடத்தும் மாநாடு எந்த அரசியல் சார்பும் கிடையாது. இதில், கலந்து கொள்வதற்காக மாநில முதலமைச்சர்கள் உட்பட யாருக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்படவில்லை என மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 19ம் தேதி தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க உள்ளார். இதனால் கோவையில் பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று (நவம்பர் 17) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று மாநாட்டில் கலந்து கொள்வதற்கு பிரதமர் மோடி கோவை வருகிறார். ஒட்டுமொத்த உலகமும் திரும்பிப் பார்க்கும் வகையிலான மாநாடாக இந்த மாநாடு அமையவிருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இயற்கை விவசாயத்தை மேற்கொள்பவர்கள், இயற்கை விவசாயத்தை அறிமுகம் செய்த நம்மாழ்வாரோடு பணியாற்றிய விவசாயிகள் ஆகியோருடன் பிரதமர் கலந்துரையாட உள்ளார் . இயற்கை விவசாயம் குறித்த கொள்கை முடிவுகளை எடுக்க இது நல்வாய்ப்பாக அமையும்.
இயற்கை வேளாண் பொருட்கள் தயாரிப்பு, தொழில் நுட்பம் சந்தைபடுத்துதல் குறித்து விவசாயிகள் பிரதமரிடம் எடுத்துரைக்க உள்ளனர். தமிழகம் , கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து வரும் 5000 விவசாயிகள் பங்கேற்பார்கள். நவம்பர் 19 ம் தேதி தொடங்கும் மாநாடு 21ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இயற்கை விவசாயத்தில் சாதித்த 10 பேருக்கு பிரதமர் விருது வழங்குவார் என தெரிவித்தார்.
மேலும் இது முழுக்க முழுக்க விவசாயிகள் நடத்தும் மாநாடு எந்த அரசியல் சார்பும் கிடையாது. இதில், கலந்து கொள்வதற்காக மாநில முதலமைச்சர்கள் உட்பட யாருக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்படவில்லை . மாநாட்டிற்கு மத்திய விவசாய துறை அமைச்சர் வருவார் என எதிர்பார்க்கிறோம்.
விவசாயிகள் காட்சி படுத்தும் அரங்கில் பிரதமருக்கு எது பிடித்தாலும் , அவர் எடுத்துக் கொள்ளலாம், நினைவு பரிசு கொடுக்க சில கட்டுப்பாடு உள்ளது. அதை, பரிசீலனை செய்து கொடுப்போம் என தெரிவித்தார்.
