ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.
அணுசக்தி திட்டம் தொடர்பான ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிநிலை எட்டாத நிலையில் ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த 28ஆம் தேதி தொடங்கி நான்காவது வாரமாக தாக்குதல் நீடித்து வரும் நிலையில், ஈரானும் பதில் தாக்கல் நடத்தி வருகிறது.
இதன் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் பெட்ரோல் விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த விவகாரத்தில் மோடி அரசு மவுனம் காப்பது கோழைத்தனமானது என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது.
இந்த சூழலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் உடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.
அப்போது ரம்ஜான் வாழ்த்தை தெரிவித்த பிரதமர் மோடி, இந்த பண்டிகை காலம் மேற்கு ஆசியாவிற்கு அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை கொண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில், “கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், கடல்வழிப் பாதைகள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் இருப்பதை உறுதி செய்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும், உலகளாவிய விநியோக சங்கிலிகளை சீர்குலைக்கும் வகையிலும் மேற்காசிய பிராந்தியத்தின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தார்” என குறிப்பிடப்பட்டுள்ள்து.
