உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நேற்று வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தபோது, வழக்கறிஞர் ராகேஷ் கோஷம், நீதிபதிகள் அமரும் இடத்திற்கு அருகே சென்று தனது காலணியை கழற்றி தலைமை நீதிபதி கவாய் மீது வீச முயன்றார்.
அப்போது நீதிமன்றத்தில் இருந்த பாதுகாப்பு பணியாளர்கள் உடனடியாக செயல்பட்டு அந்த வழக்கறிஞரை வெளியே இழுத்துச் சென்றனர்.
அந்த சமயத்தில் வழக்கறிஞர் ராகேஷ் கோஷம், ‘ சனாதனத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது’ என்று கூறி இருக்கிறார்.
எனினும் தலைமை நீதிபதி எந்த தயக்கமும் இல்லாமல் நீதிமன்றத்தில் இருந்த மற்ற வழக்கறிஞர்களை பார்த்து தங்களது வாதங்களை தொடருமாறு கூறியுள்ளார்.
இது போன்ற விஷயங்கள் மீது கவனம் செலுத்த வேண்டாம். இதெல்லாம் என்னை எதுவும் செய்யாது என்று தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை இந்திய பார் கவுன்சிலில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி தலைமை நீதிபதி பி ஆர் கவாய் மற்றும் வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு, மத்தியப் பிரதேச மாநிலம் கஜிராஹோவில் உள்ள ஒரு கோயிலில் உடைந்த விஷ்ணு சிலையை பழுது பார்த்து பராமரிக்க உத்தரவிட கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த விவகாரம் தொடர்பாக தொல்லியல் துறையை அணுக உத்தரவிட்ட நீதிபதிகள், விளம்பரம் தேடிக்கொள்வதற்காக இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படுகிறது என்று தெரிவித்திருந்தனர்.
அதோடு மனுதாரர் உண்மையிலேயே விஷ்ணுவின் பக்தராக இருந்தால் அவர் கடவுளை பிரார்த்தித்து தியானம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் தலைமை நீதிபதி.
இந்த கருத்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், எனக்கு அனைத்து மதத்தின் மீதும் நம்பிக்கை இருக்கிறது. அனைத்து மதங்களையும் நான் மதிக்கிறேன் என்று தலைமை நீதிபதி கூறினார்.
இந்த சூழலில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் தூஷர் மேத்தா, ஒவ்வொரு செயலுக்கும் அதற்கான எதிர்வினை உண்டு என நியூட்டனின் விதி கூறுகிறது. ஆனால் இப்போது ஒவ்வொரு செயலுக்கும் சமூக ஊடக எதிர்வினையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதேசமயம் அவர், ‘எனக்கு தலைமை நீதிபதியை 10 ஆண்டுகளுக்கும் மேலாக நன்றாக தெரியும். அவர் கோயில் உட்பட பல்வேறு மத வழிபாட்டு தலங்களுக்கு பக்தியுடன் சென்று வருவார்’ என்றும் கூறியுள்ளார்.
இந்த சூழலில் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச முயன்றதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று (அக்டோபர் 6) இரவு அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘தலைமை நீதிபதியிடம் தொலைபேசியில் பேசினேன். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒட்டுமொத்த இந்தியர்களையும் கோபப்படுத்தியுள்ளது. இதுபோன்ற கண்டிக்கத்தக்க செயலுக்கு இந்தியாவில் இடமில்லை.
எனினும் இந்த சம்பவத்தை பொறுமையாக கையாண்ட தலைமை நீதிபதியை பாராட்டுகிறேன். இது மதிப்புகள் மற்றும் நமது அரசியலமைப்பின் உணர்வை வலுப்படுத்துவதற்கான உறுதிபாட்டை காட்டுகிறது’ என்று கூறியுள்ளார்.