எதிர்க்கட்சிகளுக்கு கஜானாவை நிரப்புவது மட்டும்தான் வேலை : ராஜ்யசபாவில் மோடி பேச்சு!

Published On:

| By Kavi

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் , பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 5) மாலை ராஜ்யசபாவில், குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீமானத்தின் மீது உரையாற்றினார்

அவர் பேச ஆரம்பித்ததுமே எதிர்க்கட்சி எம்.பி.க்கள், எதிர்க்கட்சித் தலைவரைப் பேச விடுங்கள் என்று கூறி அவையின் மைய பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பினர். 

ADVERTISEMENT

அப்போது மல்லிகார்ஜுன கார்கேவை பார்த்து பேசிய மோடி, ‘கார்கே ஜி, உங்கள் வயதைக் கருத்தில் கொண்டு நான் சொல்கிறேன், தயவுசெய்து அமர்ந்து கொண்டு கோஷம் எழுப்புங்கள். உங்கள் ஆரோக்கியம் எங்களுக்கு முக்கியம்’ என்று விமர்சிக்கும் விதமாக கூறினார். 

 மேலும் என்னை பேசவிடுங்கள் என்று கூறிய பிரதமர் மோடி,  “வளர்ச்சி என்பது வெறும் எண்கள் மட்டுமல்ல, விளிம்புநிலை மக்களைச் சென்றடைவதே உண்மையான வெற்றி. சரியான பாதையில்  நாடு வளர்ந்து வருகிறது.  

ADVERTISEMENT

நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள், கிராமங்கள், விவசாயிகள், பெண்கள், அறிவியல், தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய இந்தியாவின் முன்னேற்றத்தை குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் விரிவாக முன்வைத்துள்ளார்.

இந்த நூற்றாண்டின் இரண்டாவது கால்பகுதி, இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான வலிமைமிக்க காலக்கட்டமாக அமையப்போகிறது” என்றார்.

ADVERTISEMENT

பிரதமர் பேசிக்கொண்டிருக்கும்போதே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.  

எனினும் தொடர்ந்து பேசிய மோடி, “நமது நாடு ஒருபுறம் வளர்ச்சியின் புதிய சிகரங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. அதே வேளையில், நாளுக்கு நாள் நமது நாடு இளமையாகிக் கொண்டும் இருக்கிறது. இது இளைஞர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடு. 

இன்று, இந்தியா பல நாடுகளுடன் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் உலகின் மிக முக்கியமான மற்றும் முன்னேறிய பொருளாதார நாடுகளுடன் சில முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களை நாம் வெற்றிகரமாக முடித்துள்ளோம்.

27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு மைல்கல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று சோர்வடைந்து, ஏமாற்றத்தில் இருப்பவர்கள், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய உலகில் எந்த நாடும் முன்வராத நிலைக்கு நாட்டை எப்படி  வைத்திருந்தீர்கள் என்பதற்கு என்றாவது ஒருநாள் பதிலளித்தே ஆக வேண்டும்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, அவர்களுக்கு எந்தவிதமான தொலைநோக்குப் பார்வையும் இல்லை என்பதை நான் உறுதியாக கூறுகிறேன். அதன் விளைவாக, இந்த நாடு மிகப்பெரிய பாதிப்புகளைச் சந்திக்க நேரிட்டது. 

நாடு சுதந்திரம் அடைந்தபோது, ​​நாம் உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடாக இருந்தோம். ஆனால் இவர்கள் பெரிய குழப்பங்களைச் செய்ததால், பதினொன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டோம். தற்போது மூன்றாவது இடத்தை பிடிக்கும் வகையில் முன்னேறி வருகிறோம். 

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்,  திமுக, இடதுசாரிகள் என யாராக இருந்தாலும், அவர்கள் பல ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். மாநிலங்களிலும் அரசாங்கங்களை நடத்தும் வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் சொந்தப் கஜானாவை நிரப்புவதற்கே குறியாக இருந்தார்கள். குடிமக்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவருவது அவர்களின் நோக்கமாக இருந்ததில்லை. 

வங்கி அமைப்பிற்குள் ஊடுருவியிருந்த ‘நோய்’ போன்ற சீர்கேடுகளிலிருந்து எனது அரசு வங்கிகளை விடுவித்து, அவற்றின் ஆரோக்கியத்தை மீண்டும் மீட்டுக்கொண்டு வந்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பல விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் சொந்தக் குறைபாடுகளையும் பார்க்க வேண்டும். மேற்கு வங்க மக்கள் இந்த அரசாங்கத்தால் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்கள் நீதிமன்றங்களை அணுகுவதன் மூலம் ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்க முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரத்தைப் பற்றி மட்டும்தான் கவலை” என்று எதிர்க்கட்சியினரை கடுமையாக் விமர்சித்தார். 

மேலும் அவர்,  “ காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்காக மாற்றம் கொண்டு வந்தோம், பாகிஸ்தான் பயங்கரவாதம், இடதுசாரி தீவிரம் ஒழிக்கப்பட்டது.  

இதனால், எதிர்கட்சியினர் எனக்கு சவக்குழி தோண்ட பார்க்கின்றனர். ஆனால், தேசத்தின் கோடிக்கணக்கான மக்கள் எனக்குக் கவசமாக இருக்கும் வரை, அவர்களால் எதையும் செய்ய முடியாது” என்று குறிப்பிட்டார். 

காங்கிரஸ் ஆண்ட காலத்து பிரதமர்களைவிட நான் மிக வேகமாக செயல்படுகிறேன் என்று கூறிய மோடி,  “எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ, எச்.ஏ.எல் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் லாபகரமாக செயல்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் செய்த தவறுகளை சரி செய்யவே நாங்கள் அதிக நேரம் செலவிடுகிறோம்” என்றும் குறிப்பிட்டார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share