பூட்டான் நாட்டுக்கு 2 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் நேற்று நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக பூட்டான் சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோடி, ” மிகவும் கனத்த இதயத்துடன் பூட்டானுக்கு வருகை தந்துள்ளேன். டெல்லியில் நடந்த கொடூர சம்பவத்தால் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறேன். டெல்லி கார் குண்டு வெடிப்புக்கு காரணமான சதிகாரர்கள், தப்பிவிட முடியாது.

டெல்லி குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒட்டுமொத்த தேசமும் இணைந்து நிற்கிறது. டெல்லியில் இரவு முழுவதும் விசாரணை அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினோம். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனையைப் பெற்றுத் தருவோம்” என்றார்.
முன்னதாக பூட்டான் பயணம் தொடர்பாக பிரதமர் மோடி ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், “நான் பூட்டானில் 2025 நவம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் பயணம் மேற்கொள்கிறேன். பூட்டான் 4-ம் மன்னரின் 70-வது பிறந்த தினம் கொண்டாடப்படும் வேளையில் பூட்டான் மக்களுடன் இணைவது எனக்கு கிடைத்த கௌரவமாகும். பூட்டானின் உலகளாவிய அமைதி பிரார்த்தனை திருவிழாவில் இந்தியாவிலிருந்து புத்தரின் புனித பிப்ரவா நினைவுச் சின்னங்கள் இடம்பெறுவது நமது இருநாடுகளின் நாகரீகம் மற்றும் ஆன்மிக தொடர்புகளை பிரதிபலிக்கிறது. இப்பயணத்தின்போது புனட்சங்க்சு-II நீர்மின் திட்டம் தொடங்கப்படுவது நமது வெற்றிகரமான எரிசக்தி கூட்டமைப்பில் மற்றொரு மைல்கல்லாகும்.

பூட்டானின் மன்னர், 4-ம் மன்னர் மற்றும் பிரதமர் ஷெரின்ங் டோப்கே ஆகியோரை சந்திப்பதை நான் எதிர்நோக்கியுள்ளேன். எனது பயணம் நமது நட்புறவை மேலும் வலுப்படுத்தி பகிரப்பட்ட வளர்ச்சி மற்றும் வளமையையொட்டிய நமது முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் என்று நான் நம்புகிறேன்.
இந்தியாவும், பூட்டானும் சிறந்த நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு, ஆழ்ந்த பரஸ்பர நம்பிக்கை, புரிதல் மற்றும் நற்பெயரை கொண்டுள்ளன. நமது கூட்டாண்மை அண்டை நாடுகளுக்கு முதல் முன்னுரிமையின் முக்கியத்தூணாகவும், அண்டை நாடுகளுக்கிடையே சிறந்த நட்புறவுக்கான மாதிரியாகவும் திகழ்கிறது என மோடி தெரிவித்திருந்தார்.
