பிரதமர் அலுவலகத்தின் மாண்பைக் குறைக்கும் மோடி

Published On:

| By Minnambalam Desk

சஞ்சய் கே. ஜா

ஈரான் விஷயத்தில் பிரதமர் நடந்துகொள்ளும் முறை பிரதமர் அலுவலகத்தின் மாண்பைக் குறைக்கும் வகையில் உள்ளது. 

நரேந்திர மோடி மே 23, 2016 அன்று ஈரானுக்குத் தனது முதல் பயணத்தை மேற்கொண்டபோது கூறியதை நினைவு கூர்வோம்: “ஈரானின் அனைத்து நைட்டிங்கேல் பறவைகளும் இந்தியாவிலிருந்து தெஹ்ரானுக்கு வரும் இந்த புதிய இனிப்பைப் பெறுகின்றன.” இந்தியாவிலிருந்து இளம் கடற்படை அதிகாரிகளின் உடல்கள் தெஹ்ரானுக்குத் திரும்பும்போது, ஈரானின் அந்த நைட்டிங்கேல் பறவைகள் துக்கத்தில் விம்மி அழுவது மோடியின் காதுகளில் விழுகிறதா?

ADVERTISEMENT

இந்தியக் கடற்படையின் அழைப்பின் பேரில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு பயிற்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த அந்த ஈரானியக் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மூழ்கடித்தது. இந்தச் சட்டவிரோதத் தாக்குதலுக்கு இந்தியாவைப் பொறுப்பாக்க முடியுமா என்பது கேள்வியல்ல. இந்தியாவின் பிம்பத்தைக் காயப்படுத்துவது மோடி அரசாங்கத்தின் மௌனம்தான். ஈரானின் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காத மோடி, இந்தியப் பெருங்கடலில் நடந்த இந்த கொடிய குற்றத்தைப் பற்றியும் மௌனம் காக்கிறார். தனது விருந்தினர்களை இவ்வளவு அலட்சியத்துடன் நடத்தும் பாரம்பரியம் இந்தியாவுக்கு இல்லை. நமது எல்லைக் கட்டுப்பாட்டிற்கு வெளியே நமது விருந்தினர்கள்மீது பாகிஸ்தான் குண்டு வீசினால் மோடியின் பதில் என்னவாக இருக்கும்? இந்தியாவிலிருந்து திரும்பும் 100க்கும் மேற்பட்ட அமெரிக்க அல்லது இஸ்ரேலிய வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டால் மோடி இப்படிப் பேசாமல் இருப்பாரா?

மோடி இந்தியாவின் பிரதமரைப் போல நடந்துகொள்கிறாரா? சமீபத்திய பல சம்பவங்கள் இந்த அசாதாரணமான கேள்வியை எழுப்பியுள்ளன. பிரதமர்கள் தங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின்படி செயல்பட சுதந்திரமானவர்கள் அல்ல. அவர்கள் ஒரு நிறுவனக் கட்டமைப்பிற்குள் இயங்குகிறார்கள்; இந்தியாவின் அரசியலமைப்பு மாண்பு மற்றும் சமூக-கலாச்சாரப் பண்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது. ஈரான் இந்தியாவின் பழைய, நம்பிக்கைக்குரிய நண்பன். ஒரு நட்பு நாட்டின் விஷயத்தில் ஆற்ற வேண்டிய தேசியக் கடமையை மீறுவதற்கு எந்தவொரு இந்தியப் பிரதமருக்கும் தனிப்பட்ட உரிமை கிடையாது.

ADVERTISEMENT

குறைந்தபட்சம் கமேனியின் மறைவுக்கு வருத்தம் தெரிவிப்பதையும், ஈரானியக் கடற்படை அதிகாரிகள் கொல்லப்பட்டதற்கு வருந்துவதையுமேனும் மோடி செய்திருக்கலாம். இந்த மனிதநேய மரியாதை என்பது மோடியின் (இந்தியாவின் அல்ல) சிறந்த நண்பர்களான அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிரான புரட்சி ஆகிவிடாது. பிரதமர் அலுவலகத்தின் கண்ணியம் அந்தப் பதவியில் இருப்பவர் நமது தேசியப் பெருமையைக் குறைக்கும் வகையில் கோழைத்தனமாக நடந்துகொள்வதை அனுமதிக்காது. நம்பிக்கைக்குரிய கூட்டாளி என்ற இந்தியாவின் தகுதி இப்போது சிதைந்து போயுள்ளது.

2016 பயணத்தின்போது மோடியே இவ்வாறு கூறினார்: “இன்றைய உலகில், அரசியல் பண்டிதர்கள் மூலோபாய ரீதியான ஒன்றிணைப்பைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், இந்தியாவும் ஈரானும் நமது சிறந்த கலாச்சாரங்களின் சங்கமத்தைக் கொண்டாடும் இரண்டு நாகரிகங்கள். இந்தியாவும் ஈரானும் புதிய நண்பர்கள் அல்ல. நமது நட்பு வரலாற்றைப் போலவே பழமையானது. பல நூற்றாண்டுகளாக, கலை, கட்டிடக்கலை, சிந்தனைகள், மரபுகள், கலாச்சாரம், வணிகம் ஆகியவை மூலம் நமது சமூகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. நண்பர்களாகவும் அண்டை நாடுகளாகவும், வளர்ச்சி, செழிப்பு, மகிழ்ச்சி, துக்கம் ஆகியவற்றில் நமக்குப் பொதுவான அம்சங்கள் உள்ளன.”

ADVERTISEMENT

இந்த அலங்காரப் பேச்சுக்கும் யதார்த்தத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லையா? கமேனியின் கொலையாளிகளைக் கண்டிக்கத் துணிவு இல்லாவிட்டாலும், அந்த மரணத்திற்கு மோடி வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும்.

தனது 2016 உரை முடிவில் மோடி இவ்வாறு கூறினார்: “நாம் ஒருமுறை முடிவு செய்துவிட்டால், காசிக்கும் காஷானுக்கும் இடையிலான தூரம் வெறும் அரை அடிதான்”. ஈரானுடனான உறவை முறித்துக்கொள்ள மோடி எப்போது “முடிவு செய்தார்” என்று இந்தியா அறிய விரும்புகிறது. ஈரானியத் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி விசாரிக்க அவர் அண்டை நாடுகளை அழைத்தார். ஆனால் அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி விசாரிக்க அவர் ஈரானை அழைக்கவில்லை. இந்தியாவின் நண்பர்களில் யாருக்கு மிகப்பெரிய துயரம் ஏற்பட்டது? ஈரானா, அல்லது கத்தார், குவைத், ஓமனா? ஈரானைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் இறையாண்மையும் பிராந்திய ஒருமைப்பாடும் மீறப்பட்டதை மோடி கண்டித்தார். இதன் மூலம், இந்தியாவையும் பிரதமர் அலுவலகத்தையும் சிறுமைப்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார்.

ஈரானின் இறையாண்மை

டொனால்ட் டிரம்ப், பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் அடக்குமுறை ஆட்சியிலிருந்து மக்களை விடுவிப்பதாகக் கூறி ஈரானைத் தாக்கியுள்ளனர். ஈரானியப் பெண்களுக்கு விடுதலை தேவை என்று அவர்கள் கூறினர். ஹிஜாப் அணிந்த பெண்கள், எப்ஸ்டீன் போன்ற கீழ்த்தரமான சூழலில் இருக்கும் பெண்களை விடச் சிறந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை. பள்ளிகள்மீது குண்டு வீசி 165 சிறுமிகளைக் கொல்பவர்களுக்குப் பாலின நீதி பற்றிப் பேசத் தகுதி இல்லை. காசா படுகொலையை முன்னின்று நடத்துபவர்களிடமிருந்து தாராளமயம் பற்றிய போதனைகளை யாரும் விரும்ப மாட்டார்கள். தனது சட்டவிரோத ஏகாதிபத்தியத் திட்டங்களை நியாயப்படுத்த அமெரிக்கா அரங்கேற்றும் “சுதந்திரம்” என்ற நாடகத்தை உலகம் இப்போது புரிந்துகொண்டுள்ளது. கடந்த பல தசாப்தங்களாகத் தீய ஆட்சிகளை மாற்றுவதாகக் கூறி அமெரிக்கா மனிதகுலத்திற்கு எப்படி ‘சேவை’ செய்தது என்பது ரகசியமல்ல.

அமெரிக்காவும் இஸ்ரேலும் நீண்ட காலமாக ஈரானின் சிதைவுகள்மீது நடனமாடத் துடித்துக்கொண்டிருந்தன. கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்காவை இந்த அநீதியான போருக்குள் தள்ள இஸ்ரேல் முயன்றது. ஆனால் பராக் ஒபாமாவும் ஜோ பைடனும் அதற்கு மறுத்துவிட்டனர். இருப்பினும் இஸ்ரேல் தனது தீய திட்டங்களைத் தொடர்ந்தது. 2016இல் வெளியான ‘மொசாட்’ (Mossad) என்ற புகழ்பெற்ற புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “ஈரானின் அணுசக்தி நிலையங்களைச் சீர்குலைத்தல், விஞ்ஞானிகளைக் கொல்லுதல், போலி நிறுவனங்கள் மூலம் குறைபாடுள்ள உபகரணங்களை வழங்குதல், உயர்மட்ட ராணுவ அதிகாரிகளைத் தப்பியோடச் செய்தல், ஈரானின் கணினி அமைப்புகளில் வைரஸ்களைப் புகுத்துதல் போன்ற நிழல் யுத்தத்தை மொசாட் நடத்திவருகிறது. இது ஈரானின் அணு குண்டு முயற்சியைப் பல ஆண்டுகள் தாமதப்படுத்தியிருந்தாலும், இறுதி முயற்சியாக ராணுவத் தாக்குதலை நடத்துவதற்கு முன் இப்போதே அந்த மறைமுகப் போர் உச்சத்தை எட்டியுள்ளது.”

இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாட்’ பற்றி நன்கு தெரிந்த மைக்கேல் பார்-ஜோகர், நிசிம் மிஷால் ஆகியோர் எழுதிய புத்தகம் இது. அவர்கள் கணித்த அந்தத் திட்டமிட்ட ராணுவத் தாக்குதல் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. ஆனால் ஈரானின் கடுமையான பதிலடியால் அது தோல்வியடைந்தது. ட்ரம்ப்பும் நெதன்யாகுவும் அந்த அவமானத்தை அப்போது ஜீரணித்துக்கொண்டனர். ஈரானின் ஒட்டுமொத்த அரசியல், ராணுவத் தலைமையையும் அழிப்பதற்காகப் பழிவாங்கும் உணர்ச்சியுடன் இப்போது திரும்பியுள்ளனர். அவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளச் சொல்லும் அனைத்துக் காரணங்களும் பொய்யானவை, முட்டாள்தனமானவை. உலகின் ஒரே வல்லரசு இவ்வளவு பொறுப்பற்றதாகவும் பேராசை கொண்டதாகவும் இருப்பது பெரும் சோகம். 

இறையாண்மையை அவமதிப்பது அமெரிக்காவுக்கு வழக்கம்தான் என்றாலும், ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, ஏமன், சிரியா ஆகியவற்றைத் தொடர்ந்து இப்போது ஈரான்மீது படையெடுக்க அது சொல்லும் காரணங்களை அதன் நீண்டகாலக் கூட்டாளிகள்கூட ஏற்கவில்லை.

அமெரிக்கத் துணிச்சல்

ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) ஒரு மீட்பராக உருவெடுத்துள்ளார்! யார் இந்த பெசென்ட்? ஈரான் போரால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு 30 நாள் விலக்கு அளித்த அமெரிக்க நிதித்துறைச் செயலாளர். சில நாட்கள் அல்லது ஒரு வாரம் அல்ல, முழுமையாக 30 நாட்கள்! ஒருவேளை சங்கப் பரிவாரங்களின் “விஸ்வகுரு” கனவைக் கருத்தில் கொண்டு இவ்வாறு செய்திருக்கலாம். 

இந்தியாவை அடிமை நாடாக நடத்த அமெரிக்காவிற்குத் துணிச்சலைக் கொடுத்தது யார்? மோடியின் ஆட்கள் பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனை இடைத்தரகராகத் தேர்ந்தெடுத்தபோது டொனால்ட் ட்ரம்ப் இந்த அரசாங்கத்தை எடை போட்டுவிட்டாரா? மோடியை மிரட்டுவதற்குத் தேவையான சில மோசமான ரகசியங்கள் டிரம்பிடம் உள்ளனவா? ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தின் தொடக்கத்தில், அவர் இந்தியர்களைச் சங்கிலியால் பிணைத்து அனுப்பி அவமானப்படுத்தியபோதும், பாகிஸ்தானுடனான போரை நிறுத்தியதற்காகத் திரும்பத் திரும்பப் பெருமை பேசிக்கொண்டபோதும், அவரை எதிர்க்காமல் இருந்ததன் மூலம் மோடி அரசியல் ரீதியான தவறு செய்துவிட்டாரா? நியாயமற்ற இந்த வர்த்தக ஒப்பந்தம் மோடியால் தன்னை எதிர்க்க முடியாது என்பதை ட்ரம்பிற்கு உறுதிப்படுத்திவிட்டதா?

மோடியின் பலவீனம்

கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளில் ட்ரம்புடன் அர்த்தமுள்ள உரையாடல்களை நடத்த முடியாத மோடியின் பலவீனம் சந்தேகங்களைத் தூண்டுகிறது. தனது அரசியல் வாழ்க்கையை அழிக்கப்போவதாக யாராவது தொடர்ந்து மிரட்டினாலும் எந்தத் தலைவர் மௌனமாக இருப்பார்? இந்த அடிபணிதலை ராஜதந்திர வெற்றி என்று ஒட்டுமொத்த பாஜகவும் சித்தரிப்பது வெட்கக்கேடானது.

ட்ரம்ப் நிர்வாகத்திடம் இந்தியா தனது வணிக, மூலோபாய அல்லது அரசியல் தேர்வுகளில் எந்தத் தலையீட்டையும் பொறுத்துக்கொள்ளாது என்று மோடி நேரடியாகக் கூறினால் மட்டுமே இந்தச் சூழலை மாற்ற முடியும். நமது வணிக நலன்களுக்கு உகந்ததாக இருக்கும்வரை இந்தியா ரஷ்ய எண்ணெயைத் தொடர்ந்து வாங்க வேண்டும். பெசென்ட் போன்றவர்களிடம் “உன் வேலையைப் பார்” என்று சொல்வதற்கு அதுவே சிறந்த வழியாக இருக்கும்!

கட்டுரையாளர்: சஞ்சய் கே. ஜா, அரசியல் விமர்சகர்.

நன்றி: தி வயர் இணைய இதழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share