பிரதமர் நரேந்திர மோடி (PM Narendara Modi Tamil Nadu) ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மீண்டும் தமிழகம் வருகை தருகிறார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்கு தொடர்ச்சியாக பயணங்களை மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

மாலத்தீவுகளுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து நேராக ஜூலை 26-ந் தேதி தூத்துக்குடி வருகை தந்தார். அங்கு ரூ4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
பின்னர் ஜூலை 27-ந் தேதி அரியலூர் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்றார்.
இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 26-ந் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல செப்டம்பர் மாத இறுதியிலும் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வருகை தருகிறாராம். இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் மோடி கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பயணம் மேற்கொள்கிறார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து தமது வானொலி நிகழ்ச்சியான மனதின் குரலின் நேரலையில் மோடி பங்கேற்கிறார் என்கின்றன மத்திய அரசு வட்டாரங்கள்.