கோவை வந்த பிரதமர் விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்திற்கு காரில் சென்றார்.
பிரதமர் மோடி இன்று (நவம்பர் 19) இயற்கை வேளாண் மாநாட்டை தொடக்கி வைக்க கோவை வந்துள்ளார். அவருக்கு பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் வந்த பிரதமரை ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தமிழக அரசு சார்பில் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமாகா தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
எடப்பாடி பழனிசாமி கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றை பிரதமரிடம் வழங்கி உள்ளார். கொடிசியா வளாகத்திற்கு சென்ற பிரதமர் மோடியை வழிநெடுகிழும் தொண்டர்கள் உற்சாகத்தோடு மேள தாளம் முழங்க வரவேற்றனர். அப்போது ஆபரேசன் சிந்தூர் போஸ்டருடனும், இந்திய பெண்கள் அணி உலக கோப்பையை வென்றதை நினைவுபடுத்தும் வகையில் இளம்பெண்கள் இந்திய கிரிக்கெட் சீருடையுடன் கோப்பையை கையில் ஏந்தியவாறு வரவேற்றனர்

கொடிசியாவில் பிரதமர் மோடி விவசாயிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய, ஜி.கே.வாசன், “தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்கிற நோக்கத்திலேயே எஸ் ஐ ஆர் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்தியது என்டிஏ அரசுதான். அதேபோல் கோவை மற்றும் மதுரையில் மத்திய அரசு மெட்ரோ திட்டத்தை செயல்படுத்தும் பிரதமர் வருகின்ற தினத்தில் குறிப்பாக இதுபோன்ற சர்ச்சையை எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றனர் மெட்ரோ திட்டம் குறித்த கூடுதல் தகவலை தான் மத்திய அரசு கேட்டுள்ளது முழுமையாக ரத்து செய்யவில்லை.
பிரதமரை வரவேற்கும் நிகழ்ச்சியில் தமாகா கொடிகள் இல்லையே என்ற கேள்விக்கு தலைவர் நானே நேரடியாக வந்திருக்கிறேன் என்று கூறினார்.

அதேசமயம் மோடியை விமான நிலையத்தில் வரவேற்ற ஜி.கே வாசன் உடனடியாக தற்போது சென்னை திரும்பி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
