மோடி அரசின் ‘பராக்கிரம பிம்பம்’ சிதைந்துவிட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சீர்குலைந்துள்ளது. பாஜகவின் தேர்தல் வெற்றிகளின் கவர்ச்சி மறைந்து விட்டது.
சாகரிகா கோஷ்
கடந்த 11 ஆண்டுகளாக, முடிவில்லாத மாய வலைகளைப் போல முழக்கங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. அச்சே தின் (நல்ல காலம்), புதிய இந்தியா, விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா).
இது முழக்கங்களின் அரசியல் அல்லது அரசியலை முழக்கங்களாக்குதலின் 11 ஆண்டுகள். இதற்கான ஊடக இயந்திரம் எப்போதும் தயாராகவே இருந்தது. நிபுணத்துவத்துடன் திட்டமிடப்பட்ட செய்தித்தாள் தலைப்புகளும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தினசரி மினுமினுப்பான ‘வளர்ச்சி’, உயர்மட்ட மாநாடுகள், ஆக்ரோஷமான தேசபக்திக் கதைகள் ஆகியவற்றைப் பரப்பின.

பிரதமர் நரேந்திர மோடி ஒருபுறம் புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். மறுபுறம் ரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். பாலத்தில் கம்பீரமாக நடக்கிறார். 597 அடி சர்தார் படேல் சிலைக்கு வணக்கம் செலுத்துகிறார். உலகத் தலைவர்களைக் கட்டிப்பிடிக்கிறார். கேமராவைப் பார்த்துச் சிரித்து மகிழ்கிறார்.
அரசின் உயர்மட்டத் தலைமை தீவிரமாக முன்னிறுத்திய மத உணர்வானது சமூக ஊடகக் கணக்குகள், களப்பணியாளர்கள், காவி உடை அணிந்த ஆர்வலர்கள், தொலைக் காட்சிகளில் கத்திக் கூச்சலிடும் நெறியாளர்கள் ஆகியோர் மூலம் தேசம் முழுவதும் பரப்பப்பட்டது. மத வெறுப்பு 24 மணி நேரமும் செய்திகள் மூலம் மக்கள் மனங்களில் திணிக்கப்பட்டது.
ஊடக வெளிச்சம், பசு பாதுகாப்புப் படையினர், முத்தலாக் மசோதா, வக்ஃப் வாரிய மசோதா, அயோத்தி கோயில் திறப்பு என புதிய பாரதக் குடியரசு 2014இல் உருவானதாகச் சொல்லப்பட்டது. “போலி மதச்சார்பிமை வாதிகள்” என்று விமர்சிக்கப்பட்ட மெக்காலேவின் வாரிசுகளுக்கு முடிவு கட்டப்படுவதாகச் சித்தரிக்கப்பட்டது.
மக்கள் பிரமித்துப் போய், அரை மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டனர். திடீரெனச் செல்லாததாக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கு வெளியே வரிசையில் நின்றார்கள். கொரோனா வைரஸை விரட்டப் பாத்திரங்களைத் தட்டினார்கள். ஒரு நேர்காணலில் பிரதமர் தனது பிறப்பு “உயிரியல் சார்ந்தது அல்ல” (Non-biological) என்று கூறியபோதுகூட எவரும் கேள்வி எழுப்பவில்லை.

ஆனால் 2025 இந்த மாயையை உடைத்துவிட்டது. பனி மூட்டம் போலத் தூவப்பட்ட மாயைகள் விலகி, நச்சுக் காற்று வீசத் தொடங்கியுள்ளது. மக்கள் கோபத்தில் உள்ளனர். மாசு மேலாண்மை இல்லாமை, விமானப் போக்குவரத்துக் குழப்பம், கோவா போன்ற “இரட்டை எஞ்சின்” மாநிலங்களில் நிர்வாகச் சீர்குலைவு, பாஜகவின் உயர்மட்டத்தில் நிலவும் ஊழல்கள், பொருளாதார மந்தநிலை, கோடிக்கணக்கான மக்களின் கடும் இன்னல்கள் ஆகியவை ‘அச்சே தின்’ மாயையைத் தகர்த்துள்ளன.
“மோடி இருந்தால் எதும் சாத்தியம்” (Modi hai to mumkin hai) என்ற கனவு 2025இல் சரிந்தது. அதற்கான ஐந்து காரணங்கள் இதோ:
1. மோசமான நிர்வாகம்

இண்டிகோ ஏர்லைன்ஸ் குழப்பம், காற்று மாசுபாடு குறித்த கோபம், பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகரித்துவரும் ஊழல் அல்லது வீழ்ச்சியடைந்து வரும் ரூபாய் மதிப்பு என மோடி அரசாங்கம் தனது இயலாமையில் திணறிவருகிறது.
அனைத்து முடிவுகளும் பிரதமர் அலுவலகத்தில் மட்டுமே எடுக்கப்படுவதால் கொள்கை மாற்றங்களைக் கையாள்வதற்கான வியூகங்களை வகுக்க முடியாமல் அரசு தவிக்கிறது. இண்டிகோ நெருக்கடியிலும் இதே நிலைதான் காணப்பட்டது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) புதிய விதிகளை வெளியிட்டது. பின்னர் அவசரமாக அதைத் திரும்பப் பெற்றது. இதற்கிடையில் 4,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு லட்சக்கணக்கான பயணிகள் அவதிப்பட்டனர்.
சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் ஏகபோக நிலைக்கு மோடி அரசாங்கமே பொறுப்பு. நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்குக் கிடைத்த பதிலில், காற்று மாசுபாட்டைத் தடுக்க முறையான தேசியத் திட்டம் எதுவும் இல்லை என்பது உறுதியானது.
மோடியின் “நானும் ஊழல் செய்ய மாட்டேன், மற்றவர்களையும் விடமாட்டேன்” (Na khaunga na khaane dunga) என்ற முழக்கம் தோற்றுவிட்டது. அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டுவின் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பெரிய அரசு ஒப்பந்தங்கள் கிடைப்பது ஒரு “அதிசயமான தற்செயல் நிகழ்வு” என்று உச்ச நீதிமன்றமே சமீபத்தில் கூறியது.

குஜராத்தைச் சேர்ந்த சந்தேசரா சகோதரர்கள் 1.6 பில்லியன் டாலர் மோசடி செய்தும், அவர்களிடமிருந்து மிகக் குறைந்த தொகையே வசூலிக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி வரிசையில் மீண்டும் ஒருமுறை அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற எண்ணம் வலுத்துள்ளது.
2. மந்தமான பொருளாதாரம், மோசமான வாழ்க்கை நிலை
தனியார் முதலீடுகள் கணிசமாகக் குறைந்துள்ளன, அந்நிய நேரடி முதலீடு வீழ்ச்சியடைந்துள்ளது. வளர்ச்சி குறித்த மோடி அரசாங்கம் தரும் தரவுகளின் துல்லியம் குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் குடியுரிமையைத் துறந்துள்ளனர். மோசமடைந்துவரும் வாழ்க்கைச் சூழல் காரணமாக வசதி படைத்த இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

3. ‘வலிமையான பிம்பம்’ சிதைந்தது
மோடி அரசின் ‘வலிமையான அரசு’ என்ற பிம்பம் சேதமடைந்துள்ளது. சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்குத் தானே காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறிவருகிறார். இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளிவரும் சர்வதேச ஊடக அறிக்கைகள் அரசின் வாதங்கள்மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. பகல்காம், தில்லி செங்கோட்டை மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் ஆகியவை “பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டுவிட்டது” என்ற அமித் ஷாவின் மார்தட்டலைப் பொய்யாக்கியுள்ளன.

4. வெளியுறவுக் கொள்கை தோல்விகள்
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நிலைகுலைந்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாமீது 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், அரசாங்கம் அதைக் கையாளத் திணறிவருகிறது. விஸ்வகுரு என்று தன்னைத் தானே அழைத்துக்கொண்ட மோடி, முன்பு வெள்ளை மாளிகையில் சுதந்திரமாக வலம் வந்தார். ஆனால் இன்று அதே வெள்ளை மாளிகை இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறது. அண்டை நாடுகளான நேபாளம் முதல் வங்கதேசம் வரை இந்திய எதிர்ப்பு உணர்வு மேலோங்கியுள்ளது.
5. திட்டமிட்ட தேர்தல் வெற்றிகள்
பாஜகவின் தேர்தல் வெற்றிகள் இப்போது இயல்பானவையாகத் தெரியவில்லை. அவை திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டதாகத் தோன்றுகின்றன. பிகார் தேர்தலில் வாக்காளர்களுக்கு வெளிப்படையாகப் பணம் விநியோகிக்கப்பட்டது. முன்பு இலவசங்களை எதிர்த்த மோடி, பிகாரில் இலவசங்களை நம்பியே வெற்றி பெற்றார். பாரபட்சமான ஊடகங்கள் கேள்வி கேட்பதில்லை, தேர்தல் ஆணையம் விதிமீறல்களைக் கண்டுகொள்வதில்லை. நாடாளுமன்றம் ஒருதலைப்பட்சமாக நடத்தப்படுகிறது.

அனைத்தையும் மாற்றுவோம் என்று பீற்றிக்கொண்ட மோடி அரசாங்கம் இன்று பெயர்களை மாற்றுவதில் (எடு: MGNREGA பெயரை மாற்றுவது) மட்டுமே குறியாக உள்ளது. தேசியப் பாதுகாப்பு, பொருளாதாரம், நிர்வாகம் என அனைத்திலும் சறுக்கிவரும் மோடி அரசின் கவர்ச்சி, மெதுவாக அணைந்து வரும் பட்டாசு போலத் தேய்ந்துவருகிறது.
2025இல் ‘வளர்ச்சி’ என்ற முகமூடி கழன்றது, ‘மோடி மேஜிக்’ தோல்வியடைந்தது, ‘அச்சே தின்’ என்ற மாயை தகர்ந்தது.
கட்டுரையாளர்:
சாகரிகா கோஷ், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி
நன்றி: தி பிரிண்ட்
