பிறரிடம் நாம் எதிர்பாரப்பதை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என மேன்மைமிகு தலைவரிடம் பாடம் பயின்ற நான் அரசியல் நாகரீகத்தோடு செல்வப்பெருந்தகை மீதான எனது பதிவை திரும்ப பெறுகிறேன் என எஸ்எஸ் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த சில வாரங்களில் தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக தலைமையிலான பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் தரப்பு பாமக இணைந்து தேர்தலைச் சந்திக்க உள்ளது.
இந்நிலையில், மருத்துவர் ராமதாஸ் தரப்பு பாமக, திமுகவுடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தரப்பில் அதிருப்தி எழுந்துள்ளது.
தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விசிக தலைவர் தொல். திருமாவளவன், “திமுக கூட்டணியில் ராமதாஸ் இணைந்தால் விசிக வெளியேறும்” என்று வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, “ராமதாஸும் திருமாவளவனும் நேருக்கு நேர் உட்கார்ந்து பேசினால் விசிகவின் நிலைப்பாடு மாறும்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு விசிக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.குறிப்பாக விசிக எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி தனது எக்ஸ் பதிவில், “கூட்டணியில் யார் இருப்பார்கள் என்பதை முடிவு செய்வது திமுக தலைமையின் உரிமை. சாதியவாத, மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில் விசிக இருக்காது. எங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் தோற்றத்தைத் திணிப்பது நாகரிகமற்ற அரசியல் அணுகுமுறை” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செல்வப் பெருந்தகைக்கு கண்டனம் தெரிவித்ததை டெலிட் செய்த எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி, “அரசியல் நாகரிகத்தோடு செல்வப்பெருந்தகை மீதான கண்டன பதிவைத் திரும்பப் பெறுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து எஸ்.எஸ். பாலாஜி தனது பதிவில்,”காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகையின் பேட்டி காணொளியில் வந்த ஒர் பகுதியின் அடிப்படையிலும், அரசியல் நிலைபாடுகளில் தலைவர் என்றைக்கும் நேர்மையாக செயல்படுபவர் என்கிற நிலையில் அதற்கு கேடு விளைவிக்க கூடியதாக அந்த பகுதி இருப்பதை உணர்ந்து எனது தனிப்பட்ட கருத்தை பதிவு செய்தேன்.
எந்த நிலையிலும் தலைவரின் நிலைபாட்டை தான் கேள்விகுறியாக்கவில்லை என்றும், அப்படி அது வெளிப்பட்டு இருந்தால் அது பேட்டியினை எடிட் செய்தவிதமாக இருக்கும் என என்னிடம் அலைபேசியில் செல்வ பெருந்தகை தெரிவித்ததை உளபூர்வமாக நம்புகிறேன்.
பிறரிடம் நாம் எதிர்பார்ப்பதை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என மேன்மைமிகு தலைவரிடம் பாடம் பயின்ற நான் அரசியல் நாகரீகத்தோடு எனது பதிவை திரும்ப பெறுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
