கொடிசியா அரங்கில் உலக புத்தொழில் மாநாடு துவக்க விழா மற்றும் அவிநாசி மேம்பாலத்தை திறந்து வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 9) கோவைக்கு பயணம் மேற்கொள்கிறார்.
கோவை கொடிசியா அரங்கில் உலக புத்தொழில் மாநாடு இன்றும் நாளையும் என 2 நாட்கள் நடக்கிறது. தமிழகத்தை உலகின் முன்னணி ஸ்டார்ட்-அப் மையங்களுள் ஒன்றாக நிலை நிறுத்தவும், உலகளாவிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுடன் இணைக்கவும், புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதத்திலும் நாட்டில் முதல்முறையாக இந்த புத்தொழில் மாநாடு நடக்கிறது.
இதன் துவக்க விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் இன்று காலை 9:30 மணிக்கு அவர் கோவை விமான நிலையம் செல்கிறார்.
அங்கிருந்து காலை 9.45 மணிக்கு கொடிசியாவில் நடைபெறும் உலக புத்தொழில் மாநாட்டுக்கு தலைமை தாங்க செல்கிறார்.
பின்னர் 10.40 மணிக்கு அங்கிருந்து கிளம்பி 10.50க்கு கோல்டுவின்ஸ் சென்று கோவை மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை திறந்து வைக்கிறார்.
ரூ.1791 கோடி மதிப்பீட்டில், தமிழ்நாட்டின் மிக நீளமான சுமார் 10.10 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்ட இந்த மேம்பாலத்தில் 11.10 மணிக்கு பயணித்து பார்த்து ஆய்வு செய்கிறார்.
பின்னர் 11.20 மணிக்கு அரசு காலை கல்லூரி சென்று உயிர் சாலை பாதுகாப்பு உறுதிமொழி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் பகல் 12 மணி 12.45 மணி வரை சிட்கோ தொழிற்பேட்டை குறிச்சி வளாகத்தில் ரூ.126 கோடியில் 2.46 ஏக்கரில் 8.5 லட்சம் சதுரடி பரப்பளவில் அமைய உள்ள தங்க நகை பூங்காவுக்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
அதன்பின்ன்னர் எல்&டி பைபாஸுக்கு 1 மணி அளவில் சென்று, அங்கிருந்து சின்னியம்பாளையம் பயணித்து, மதியம் 1.15மணிக்கு கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து சென்னை திரும்புகிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.