மயிலாடுதுறையில் இன்று ஆகஸ்ட் 16-ந் தேதி நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அடிதடி ஏற்பட்டு ரத்த களரியானதால் முதல்வர் ஸ்டாலின் கடும் கோபத்தில் இருக்கிறார் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா முருகனுக்கும், சீனியரான குத்தாலம் கல்யாணம் மகன் அன்பழகனுக்கும் இடையே நீண்டகாலமாக பனிப்போர் நீடித்து வருகிறது.
குத்தாலம் அன்பழகனிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவியை பறித்துதான் நிவேதா முருகனுக்கு கொடுக்கப்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் இருவரும் எம்.எல்.ஏ. சீட்டுக்கு முட்டி மோத, நிவேதா முருகனுக்கு ஜாக்பாட் கிடைத்தது.
இப்படி நீண்டகாலமாக நிவேதா முருகனுக்கும், குத்தாலம் அன்பழகனுக்கும் மோதல் நடந்து வருகிறது. இருவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் கண்ணார் தெரு பகுதியில் அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக நிர்வாகிகள் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன்.

இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர் நிவேதா முருகனிடம் தகவல் தொழில்நுட்ப அணி மாநில இணை செயலாளர் ஸ்ரீதர் ஒருமையில் பேசினார். அத்துடன், “என்னைப்பற்றி தலைமைக்கு தவறான தகவல்களை அனுப்புறீங்களா? நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று மிரட்டலாகவும் ஶ்ரீதர் பேசியிருக்கிறார்.
அப்போது மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பாலமுருகன் என்பவர், ஸ்ரீதரிடம், “என்னய்யா? மாவட்ட செயலாளரை மிரட்டுவியா?” என குரலை உயர்த்தி பேசியுள்ளார்.
அங்கிருந்த குத்தாலம் அன்பழகன், சட்டென நிவேதா முருகனின் ஆதரவாளரான பாலமுருகனின் சட்டையைப் பிடிக்க, பதிலுக்கு பாலமுருகன் பிளாஸ்டிக் சேரைத் தூக்கி அன்பழகன் மீது அடித்தார். இதனால் கூட்டத்தில் பெரும் களேபரம் வெடித்தது.
இந்த சம்பவத்தை தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் விக்னேஷ் என்பவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதனை நிவேதா முருகன் ஆதரவு பொறுப்பாளர்கள் செல்போனை பறித்தவுடன் ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கமிட்டி கூட்டம் நடைபெற்ற கட்டிடத்திற்கு வெளியே ரவுடி கும்பல் குவிந்ததால் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து முக்கிய பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேற கூட்டம் நடைபெற்ற அரங்கின் வாயில் கதவு இழுத்து மூடப்பட்டது.
இதற்கிடையே மயிலாடுதுறை கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகமணி ரத்தம் தோய்ந்த வேஷ்டியுடன் வெளியேறியது உள்ளே நடந்த பிரச்சனையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. அவர் தவிர மேலும் சிலருக்கும் ரத்த காயம் ஏற்பட்டு, வேட்டிகளில் ரத்த கறைகள் படிந்திருந்தன.

தொடர்ந்து அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர். ஆளும் கட்சியினர் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அறிவாலயம் வரை சென்றது.
இதனையடுத்து மாவட்ட செயலாளர் நிவேதா முருகனுக்கும் குத்தாலம் அன்பழகனுக்கும் கட்சி தலைமையிடம் இருந்து போன் போயிருக்கிறது.
அப்போது, “உங்கள் பிரச்சினை முதல்வரை ரொம்பவே டென்ஷனாக்கிவிட்டது” என சொல்லப்பட்டது. அப்போதும் விடாமல், நிவேதா முருகனும் குத்தாலம் அன்பழகனும் பரஸ்பரம் புகார் சொல்ல.. அறிவாலயம் செம்ம கோபத்தில் இருக்கிறதாம்.