கலைமாமணி விருது விழாவில் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டே இருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021, 2022 மற்றும் 2023 ஆகிய 3 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு இன்று (அக்டோபர் 11) வழங்கப்பட்டது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு இயக்குநர்கள் லிங்குசாமி, எஸ்.ஜே.சூர்யா, பிரபல இசையமைப்பாளர் அனிருத், நடிகர் விக்ரம்பிரபு, மணிகண்டன், சாண்டி நடிகை சாய்பல்லவி, பாடகி ஸ்வேதா மோகன் உட்பட மொத்தம் 90 பேருக்கு ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்தார்.
மிகச்சரியானவர்களுக்கு விருது!
தொடர்ந்து நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “1967ம் ஆண்டு அறிஞர் அண்ணா கையால் கலைஞர் பெற்ற கலைமாமணி விருதை இன்று நீங்களும் பெற்றுள்ளீர்கள். 2021, 22, 23 ஆகிய 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து பல்வேறு கலைப்பிரிவுகளில் விருதுகளை வழங்குவதில் நானும் பெருமை அடைகிறேன்.
இயல், இசை, நாடகம், திரைப்படம், சின்னத்திரை, கிராமியம், நாட்டுப்புற கலைகள், இதர கலைப்பிரிவுகள் கலைத்துறையின் எந்த பிரிவும் விடுபடக்கூடாது என்ற கவனத்தில் இந்த விருதுகளை வழங்கும் இயல், இசை, நாடக மன்றத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
விருது பெற்றிருக்கும் பெரும்பாலோனார் எனக்கு நன்றாக அறிமுகமானவர்கள். பலரின் கலைத்தொண்டு பற்றி எனக்குத் தெரியும். மூத்த கலைகளுக்கு மட்டுமில்லாமல் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களையும் அடையாளம் கண்டு மிகச்சரியானவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
90 வயதான முத்துக்கண்ணம்மாவும் விருது பெறுகிறார்கள். இளம் இசையமைப்பாளர் அனிருத்தும் விருது பெறுகிறார்கள். கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு தங்கப்பதக்கமும், விருது பட்டயமும் வழங்கப்பட்டுள்ளது.
இன்று நாட்டில் தங்கத்தின் விலை என்னவென்று உங்களுக்கேத் தெரியும். ராக்கெட் வேகத்தில் ஒரு நாளைக்கு 2 முறை ஏறிக்கொண்டே போகுது. இந்த விருது அறிவித்த அன்று தங்கத்தின் விலையும், இன்று இருந்த தங்கத்தின் விலையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும். ஆனால், அவ்வளவு மதிப்புமிக்க வகையில் இந்த விருது அமைந்துள்ளது.
தங்கத்தை காட்டிலும் கலைமாமணிக்குத்தான் மதிப்பு அதிகம். ஏனென்றால் இது தமிழ்நாடு தந்த பட்டம். தொன்மையான கலைகளை வளர்த்தல், அந்த கலைகளை ஊக்குவித்தல், அழிந்து வரும் கலைகளை ஆவணமாக்குதல், நாடகம், நாட்டிய நாடகங்களுக்கு புத்துயிர் அளித்தல், நம் பாரம்பரிய கலைகளை வெளிமாநிலங்களுக்கும், உலகளவிலும் எடுத்துச் செல்லுதல், தமிழ் கலைகள் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்கை செய்யும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குதல், நலிந்த நிலையில் உள்ள கலைஞர்களுக்கு மாதாந்திர பணிகளை வழங்குதல் ஆகியவற்றை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சிறப்பாக செய்து வருவதன் அடையாளம்தான் இந்த விழா” என ஸ்டாலின் பேசினார்.
தங்கம் விலையை சுட்டிக்காட்டியது ஏன்?
தங்கம் விலையானது நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் வாங்க, ஒரு லட்சம் இல்லாமல் கடைக்குள் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாமர மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அதேவேளையில் கலைமாமணி விருதுடன் 5 சவரன் எடைகொண்ட தங்கப்பதக்கம் வழங்கப்படுக்றது. இந்த நிலையில் தான் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டே இருக்கிறது என சுட்டிக்காட்டி பேசியுள்ளார் முதல்வர்.