தென்காசி மாவட்டத்திற்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கச் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்கு மாணவர்களுடன் இணைந்து உற்சாகமாக சிலம்பம் சுற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் ரூ.1,020 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளைத் திறந்து வைக்கவும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், அரசின் நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 29) காலை தூத்துக்குடி, திருநெல்வேலி சாலை வழியாக தென்காசிக்கு சென்றார்.
தென்காசி மாவட்டத்தில் கழுநீர்குளம் பகுதி வழியாக முதல்வர் ஸ்டாலினின் வாகனம் சென்றபோது, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த திமுக தொண்டர்களும், பொதுமக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, வழியில் சில மாணவ, மாணவிகள் பாரம்பரியத் தற்காப்புக் கலையான சிலம்பத்தை சுற்றிக் காண்பித்து முதல்வரை வரவேற்றனர்.
மாணவர்களின் இந்த உற்சாகத்தைக் கண்டு மகிழ்ந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது காரில் இருந்து கீழே இறங்கினார். அவர் மாணவர்களின் சிலம்பக் குழு அருகே சென்று, அவர்களிடமிருந்து ஒரு சிலம்பக் கம்பைப் பெற்று, சில நொடிகள் தானும் உற்சாகத்துடன் சிலம்பம் சுற்றினார்.
முதல்வரின் இந்த எதிர்பாராத செயலால், அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் பெரும் ஆரவாரம் எழுப்பி மகிழ்ந்தனர்.
மாணவி பிரேமா கனவு இல்லத்தில் ஸ்டாலின்
அதனைத் தொடர்ந்து ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் பேசிய மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு கட்டப்பட்டு வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், “நெடுநாள் கனவாக இருந்து, இப்போது நனவாகிவரும் சகோதரி பிரேமாவின் இல்லத்தின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டேன். கல்வி கொடுத்த உயர்வில் பிறந்துள்ள இந்த மகிழ்ச்சி, இவர்களின் கனவு இல்லத்தில் என்றும் நிறைந்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
