ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின் மூலம் இதுவரை ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 6) தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு ஒருவார கால பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதலில் ஜெர்மனி சென்ற அவர், அங்கு 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, ரூ.7020 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளார். அதன்மூலம் 15320 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து சென்றுள்ள ஸ்டாலின் இதுவரை 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, ரூ.8496 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளார்.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டுள்ள அறிக்கையில், “லண்டனில் இருந்து உற்சாகமான செய்தி! இங்கிலாந்தை தளமாகக் கொண்ட இந்துஜா குழுமம், தமிழ்நாட்டின் மின்சார வாகனச் சூழலில், பேட்டரி சேமிப்பு அமைப்புகளுக்காக ரூ.7,500 கோடியை முதலீடு செய்யவுள்ளது. இது 1,000+ வேலைகளை உருவாக்குகிறது.
ஆஸ்ட்ராஜெனெகாவின் விரிவாக்கம் மற்றும் முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், #TNRising இன் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பிரிவு இதுவரை ரூ.15,516 கோடி முதலீடுகளைப் பெற்றுள்ளது. இது நமது இளைஞர்களுக்கு 17,613 வேலைகளை உருவாக்குகிறது.
இவை வெறும் எண்கள் அல்ல – அவை வாய்ப்புகள், எதிர்காலம் மற்றும் கனவுகள். இது செயல்பாட்டில் உள்ள திராவிட மாதிரியின் உத்வேகம்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.