முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாட்டுக்கு ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (செப்டம்பர் 1) அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு வார அரசு முறை பயணமாக ஜெர்மன், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் அன்று இரவு ஜெர்மனியை சென்றடைந்த நிலையில் அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

ஆகஸ்ட் 31ஆம் தேதி நேற்று கொலோன் நகரில் (Cologne) நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு – ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடினார்.
அப்போது அவர்களிடம், “நீங்கள் சிறியதாக பிசினஸ் செய்து கொண்டிருந்தாலும், உங்கள் தொழிலைத் தமிழ்நாட்டிலும் தொடங்க முயற்சி செய்யவேண்டும். பெரிய பெரிய நிறுவனங்களில் நீங்கள் வேலை செய்கிறீர்கள் நிறுவனத்தில், நம்முடைய என்றால், உங்கள் தமிழ்நாட்டில் நிறைந்திருக்கின்ற வாய்ப்புகளைப் பற்றி எடுத்துச் சொல்லி, நம்முடைய தமிழ்நாட்டில் இன்வெஸ்ட் செய்ய மோட்டிவேட் செய்யுங்கள். உங்கள் சொந்த கிராமங்களை கவனித்துக் கொள்ளுங்கள். அங்கே படிக்கின்ற நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ஏழை எளிய மாணவர்களுக்கு உங்களால் முடிந்த கல்வி உதவிகளை செய்யுங்கள்“ என்று கேட்டுக் கொண்டார்.

அதனைத்தொடர்ந்து டசெல்டோர்ஃப் நகருக்கு சென்ற ஸ்டாலின், அங்கு பெரும் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
இதன்மூலம் மு.க.ஸ்டாலின் தனது ஜெர்மனி பயணத்தில் சுமார் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் தமிழ்நாட்டுக்கு ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி,
🔷ரயில் கதவுகள், பிரேக்குகள் தயாரிக்கும் க்னோர்-பிரேம்ஸே (KNORR-BREMSE) நிறுவனம் சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் புதிய ரயில் கதவுகள் மற்றும் பிரேக்கிங் அமைப்புகளுக்கான நவீன தொழில்நுட்ப மையம், செயற்கை நுண்ணறிவு மையம் மற்றும் தொழில்நுட்ப மையம் அமைத்திட ரூ.2,000 கோடி அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் 3,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
🔷உலகின் மிகப்பெரிய காற்றாலை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான நோர்டெக்ஸ் குழுமம் (Nordex Group) தமிழ்நாட்டில் தங்களது நிறுவனத்தை விரிவுபடுத்திட ரூ.1,000 கோடிக்கு முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் 2500க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

🔷திறன்மிகு மின் மோட்டார்கள் தயாரிக்கும் இபிஎம் பாப்ஸ்ட் (EBM-PAPST) நிறுவனம் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அந்நிறுவனத்தின் GLOBAL CAPABILITY CENTRE மற்றும் உற்பத்தி மையங்களை விரிவுபடுத்த ரூ.201 கோடி முதலீட்டை உறுதி செய்துள்ளது. இதன்மூலம் 250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔷இதுதவிர, உலகில் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான BMW குழுமத்தின் உயரதிகாரிகள், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தமிழ்நாட்டில் ஆட்டோமொடிவ் துறையில், குறிப்பாக மின்சார வாகனப் பிரிவில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.