ஆளுநர் மாளிகையில் நாளை (ஆகஸ்ட் 15) நடைபெறும் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க போவதில்லை என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்து அளிக்கப்படுவது மரபு. அந்த வகையில், நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் கொண்டாடப்படுவதால், கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தேநீர் விருந்து அளிக்கப்படுகிறது.
இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் ஆளுநர் தமிழக நலனுக்கு எதிராக செயல்படுவதாக கூறி இந்த தேநீர் விருந்தை காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் புறக்கணித்தன.
கடந்த ஆண்டு திமுக கட்சி சார்பில் ஆளுநர் விருந்தை புறக்கணித்தபோதும், தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
அதனால் இந்தாண்டு முதல்வர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் நாளை நடைபெறும் ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்துள்ளார் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் இன்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா முறையாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு அவர் ஒப்புதல் அளிக்காமல், தாமதப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்துள்ளார்.
அதுமட்டுமன்றி, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழகங்களின் சட்டம் தொடர்பாக வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பினைப் பெற்ற பின்பு பாஜக நிர்வாகி குட்டி (எ) வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடையாணை பெற்றார். அந்தத் தடையாணையினை நீக்கிட உச்சநீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு அணுகியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில், ஆளுநர் மேற்படி பா.ஜ.க. பிரமுகர் தெரிவித்த கருத்துக்களை ஆதரிக்கும் வகையில் முந்திக்கொண்டு போய் வாதுரை தாக்கல் செய்துள்ளார். இது அவரது அரசியல் சார்பு தன்மையை அப்பட்டமாக வெளிக்காட்டுவதோடு, அவரது ஒருதலைபட்சமான நடவடிக்கைக்கும் இது ஒரு உதாரணமாக விளங்குகிறது.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைக்கழங்களில் துணைவேந்தர்கள் இல்லாமல் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும் நிலைமைக்கு ஆளுநர் அவர்களின் செயல்பாடுகளும், அவர் போட்டுவரும் இந்தச் சூழ்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.8.2025 அன்று கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டார்கள்.
மேலும், முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி நானும் வரும் 18.8.2025 மற்றும் 19.8.2025 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழங்களின் பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்கப் போவதில்லை” என அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.