தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் (வயது 56) மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று (செப்டம்பர் 24) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
அடிப்படையில் மருத்துவரான பீலா வெங்கடேசன், இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வாகி, பல்வேறு முக்கியத் துறைகளில் செயலாளராகப் பணியாற்றிய அனுபவமிக்கவர். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் சவால் மிகுந்த மருத்துவத் துறைச் செயலாளராகப் பணியாற்றியவர்.
மேலும் பல பெரும் பொறுப்புகளில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருந்த அவரது அகால மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அரசு உயர் அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசில் 1997ஆம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் பீலா வெங்கடேசன் பணியாற்றியுள்ளார்.
கொரோனா பரவல் சமயத்தில் சுகாதாரத்துறை செயலாளராக அவர் ஓடோடி பணியாற்றியது மக்களின் பாராட்டை பெற்றது. கடந்த 2023ஆம் ஆண்டு எரிசக்தித் துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டு பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன் சென்னையில் இன்று காலமானார்.