கேரளா கன்னியாஸ்திரிகள் இருவர் துன்புறுத்தலுக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகியுள்ளது மிகவும் கவலையளிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் கடந்த 25ஆம் தேதி துர்க் ரயில் நிலையத்தில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகளான சகோதரி வந்தனா பிரான்சிஸ் மற்றும் சகோதரி பிரீத்தி மேரி ஆகியோரை பஜ்ரங் தளத்தின் ஜோதி சர்மா மற்றும் அவரது ஆதரவாளர்களால் சூழப்பட்டனர்.

அவர்கள் அளித்த புகாரின் பேரில் கன்னியாஸ்திரிகள் மீது மனித கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றம் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து கிருஸ்துவ மற்றும் சிறுபான்மை அமைப்பினைச் சேர்ந்த பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நடவடிக்கை எதிராக கேரளா மற்றும் டெல்லியில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”சத்தீஸ்கரில் பஜ்ரங் தளம் அமைப்பினரால் கேரள கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் இருவர் துன்புறுத்தலுக்கும் பொய்யான குற்றச்சாட்டுக்கும் உள்ளாகியுள்ளது ஆழ்ந்த கவலையளிக்கிறது. இந்தியாவின் சிறுபான்மையினர் கண்ணியத்திற்கும் சம உரிமைகளுக்கும் தகுதியானவர்கள், அச்சத்திற்கு அல்ல” என்று தெரிவித்துள்ளார்.
இதே போன்று மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.