நட்பு சுட்டலையும், உள்நோக்கத்துடன் பரப்பும் அவதூறுகளையும் எங்களுக்கு பிரித்து பார்க்கத் தெரியும். அடிமைத் தனத்தை பற்றியெல்லாம் பேசலாமா என எடப்பாடி பழனிசாமியை நோக்கி முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 12) ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
ஃபிடல் காஸ்ட்ரே விட்டுச் சென்ற அடையாளம்!
அவர் பேசுகையில், “ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பது எனக்கு கிடைத்த பெருமை. உலகின் பல நாடுகளில் புரட்சி நடைபெற்றுள்ளது. ஆனால் எல்லா புரட்சியும் வெற்றி பெற்றதில்லை.
உலகில் புரட்சியை நடத்தி, அதில் வென்று ஆட்சியை பிடித்து வரலாற்றில் நிலைத்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ மட்டும் தான். 17 ஆண்டுகாலம் பிரதமர். 32 ஆண்டுகாலம் என ஜனாதிபதி என அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளையும் மீறி கியூபாவை வளர்த்துக் காட்டினார் ஃபிடல் காஸ்ட்ரோ. அவரும், சே குவாராவும் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய திகழ்கிறார்கள். இருவரும் கொள்கையால் இணைந்தவர்கள்.
ஏகாதிபத்திய சதியை முறியடிக்க வேண்டிய தேவை தற்போது உருவாகியுள்ளது. இந்தியா மீது 50 சதவீதம் வரியை அமெரிக்கா விதித்திருப்பதற்கு மத்திய அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசும், பிரதமர் மோடியும் வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டும்.
இந்தியா- பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என டிரம்ப் திரும்ப திரும்ப கூறி வருகிறார். இதுகுறித்து நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் எழுப்பி வரும் கேள்விக்கு பிரதமர் மோடி இதுவரை பதில் அளிக்கவில்லை. இது அவரது பலவீனத்தின் அடையாளம்.
ஆனால் ஃபிடல் காஸ்ட்ரே கியூபா நாட்டின் பலமாக இருந்தார். பாதுகாப்பு அரணாக இருந்தார். இதுதான் அவர் உலகிற்கு விட்டுச்சென்ற அடையாளம்” என்றார்.
யாரும் யாருக்கும் அடிமையில்லை!
தொடர்ந்து அவர், ”என்னில் பாதியான செங்கொடி தோழர்கள் அழைத்து, ஒரு நிகழ்வுக்கு நான் வராமல் இருந்ததில்லை. நமக்குள் இருப்பது தேர்தலுக்கான நட்பு அல்ல. கொள்கை நட்பு. இதுதான் தற்போது பலருக்கு எரிச்சலூட்டுகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு அண்மையில் கம்யூனிஸ்டுகள் மேல் பாசம் பொத்துக்கொண்டு வருகிறது. நாட்டில் யார் யார் எதை பேச வேண்டும் என்று விவஸ்தை இல்லை. அடிமைத் தனத்தை பற்றி பழனிசாமி பேசலாமா? இங்கு யாருக்கும் யாரும் அடிமையில்லை.
எடப்பாடி பழனிசாமிக்கு நிச்சயம் தீக்கதிர் படிக்கும் பழக்கம் இருக்காது. இருந்திருந்தால் இப்படி பேசமாட்டார். நான் தினந்தோறும் தீக்கதிர் படிக்கிறேன். இது கலைஞர் கற்றுக்கொடுத்தது.
நட்பு சுட்டலையும், உள்நோக்கத்துடன் பரப்பும் அவதூறுகளையும் எங்களுக்கு பிரித்து பார்க்கத் தெரியும்.
கூட்டணியில் இருப்பதால் தவறுகளை கம்யூனிஸ்ட் தலைவர்கள் சுட்டிகாட்டாமலும் இல்லை. அதை நான் ஏற்க மறுப்பதும் இல்லை. ஏனென்றால் கம்யூனிஸ்டுகள் என்னில் பாதி, ஏனெனில் என்னுடைய பெயரே ஸ்டாலின் தான்” என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.