UPSC வெற்றியாளர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதிகாரிகள் என்றால் அலட்டலாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரண மக்களிடம் அன்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு (UPSC) இல் இந்த ஆண்டு 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று 56 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
சென்னை விக்டோரியா பொது அரங்கில் நடைபெற்ற UPSC வெற்றியாளர்களுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:“UPSC தேர்வு இந்தியாவிலேயே, ஏன் உலக அளவிலேயே மிகக் கடினமான தேர்வு என்று செல்வார்கள். இது மன வலிமை, ஒழுக்கம் ஆகியவற்றையும் சோதிக்கும் கடுமையான தேர்வு. உங்களில் சிலர் முதல் முயற்சியிலேயே வென்றுள்ளீர்கள். சிலர் பல ஆண்டுகள் முயன்று வெற்றி பெற்றுள்ளீர்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து UPSC-யில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது. ஆனால், திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதை சரிசெய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம்.‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை, உயர் பயிற்சி, நேர்முகத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்தினோம். இதற்காக உழைத்த அதிகாரிகள், பயிற்சியாளர்களுக்கு என் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் அனைவரும் சைலண்ட் ஹீரோஸ் தான்.இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து 60 பேர் தேர்வாகியுள்ளனர். அதில் 56 பேர் ‘நான் முதல்வன்’ திட்டத்தால் பயனடைந்தவர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த எண்ணிக்கை இன்னும் உயர வேண்டும்.இங்கு வந்திருப்பவர்களை role model-ஆக எடுத்துக்கொண்டு இன்னும் பல இளைஞர்கள் தமிழ்நாட்டிலிருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக, ஆட்சியர்களாக, செயலாளர்களாக, தூதர்களாக பணியாற்ற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கும் எளிய மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும்.
ஆட்சியாளர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலை சந்திக்க வேண்டும். ஆனால் உங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக பணியாற்றும் வாய்ப்பு உள்ளது. இது உங்களை மேலும் பொறுப்புணர்வுடன் செயல்பட வைக்க வேண்டும்.அடக்கம், மனிதநேயம், சமூகநீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பணியாற்றுங்கள்.
அதிகாரிகள் என்றால் அலட்டலாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரண மக்களிடம் அன்பாக, பண்பாக நடந்து கொள்ளுங்கள். அது தான் உங்கள் பெயரை காலத்துக்கும் நிலைக்கச் செய்யும்.
உங்கள் வாழ்க்கை இனி மிகவும் பிஸியாக இருக்கும். ரெஸ்ட் என்பது கிடைப்பது அரிது. எனவே, உங்கள் வீடு, குடும்பம், பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகளை கவனிக்க மறக்காதீர்கள். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஒரு அஞ்சு நிமிடம் போன் செய்து அக்கறை காட்டுங்கள். இந்த அன்பும் அக்கறையும் தான் உங்கள் career-க்கு பெரிய துணையாக இருக்கும்.
இப்போது உங்கள் கனவு நிறைவேறியுள்ளது. இனி மக்களின் கனவுகளை நிறைவேற்றும் பணியைத் தொடங்குங்கள். உங்களை போல இன்னும் பலரையும் உருவாக்க திராவிடமாடல் அரசு துணைநிற்கும்” என தெரிவித்தார்.
