‘ஏழைகளின் சுருக்குப் பை காசை பிடுங்கும் பாஜக’ திருவாரூர் பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

MK Stalin

திருவாரூர் என்றால் அது தி.மு.க. ஊர்! அதனால்தான் பரப்புரையை இங்கிருந்து தொடங்குகிறேன். தமிழ்நாட்டைக் காக்க வேண்டும் என்றால், தி.மு.க.தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்! தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து நடைபோட வேண்டும் என்றால், தி.மு.க. ஆட்சியில் தொடர வேண்டும்! கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (31-03-2026) திருவாரூரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசினார்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய முதல்வரின உரை :

2026 சட்டமன்றத் தேர்தலின் ‘சூப்பர் ஸ்டாராக’ விளங்கிக் கொண்டிருக்கும் தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தில் வெளியிட்டேன். நேற்று, தலைவர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு, கொளத்தூர் தொகுதியில் என்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்தேன். இன்று, தலைவர் கலைஞரை வளர்த்தெடுத்த திருவாரூர் மண்ணிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கான பிரச்சாரத்தை – பரப்புரையைத் தொடங்குகிறேன்.

ADVERTISEMENT

திருவாரூர் என்றால் அது தி.மு.க. ஊர். அதனால் நான் இங்கிருந்து தொடங்குகிறேன். இந்த மேடையில் இருக்கும் இவர்கள், உங்களின் நன்மதிப்பை வாக்குகளாகப் பெற்று, எம்.எல்.ஏ.க்களாக, 17-ஆவது சட்டப்பேரவைக்குள் நுழைய இருக்கும் நம்முடைய வெற்றி வேட்பாளர்கள். திருவாரூர் சட்டமன்றத் தொகுதியைப் பொருத்தவரை, திருவாரூர் மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் நன்கு அறிமுகமான, இன்னும் சொன்னால், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு உறுப்பினராக இருக்கும், மாவட்டச் செயலாளர் – நம்முடைய அருமைச் சகோதரர் பூண்டி கலைவாணன் களமிறங்குகிறார். தலைவர் கலைஞர் மறைந்த பிறகு, கலைவாணன் அவர்களைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு வாக்களித்து, வெற்றி பெற வைத்தீர்கள். இந்த முறையும், நம்முடைய பூண்டி கலைவாணன் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் திருவாரூர் மக்கள் உங்களின் வாக்குகளை அளித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து, மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில், மன்னையில் பிறந்து – சென்னையின் கோட்டையிலிருந்து, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைப் புதிய உயரத்திற்குக் கொண்டு சென்றுள்ள நம்முடைய தம்பி டி.ஆர்.பி. ராஜா களமிறங்குகிறார். நம்முடைய டி.ஆர்.பி. ராஜா அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் மன்னார்குடி மக்கள் உங்களின் வாக்குகளை அளித்து, பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

திருத்துறைப்பூண்டி தொகுதியில் நமது கொள்கைக் கூட்டணியின் பலமாக இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, பொதுவுடைமை இயக்கத்தின் போராளியான தோழர் மாரிமுத்து அவர்கள் களமிறங்குகிறார். அவரைப் பொறுத்தவரை, களத்தில் மட்டுமல்ல; கடந்த முறை சட்டமன்றத்திலும் சிறப்பாகச் செயல்பட்டவர். அப்படிப்பட்ட நம்முடைய தோழர் மாரிமுத்து அவர்களுக்கு, திருத்துறைப்பூண்டி மக்கள் கதிர் அரிவாள் சின்னத்தில் உங்களின் வாக்குகளை அளித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கு, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளர் – நம்முடைய அன்புக்குரிய சகோதரர் முகமது முபாரக் அவர்கள் களமிறங்குகிறார். சகோதரர் முகமது முபாரக் அவர்கள் கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். நம்மில் ஒருவர். களத்தில் அவருக்காக கடுமையாகப் பாடுபட்டு வெற்றி பெற வைக்க வேண்டியது ஒவ்வொரு தி.மு.க.வினரின் கடமை. நம்முடைய முகமது முபாரக் அவர்களுக்கு, நன்னிலம் மக்கள் உதயசூரியன் சின்னத்தில் உங்களின் வாக்குகளை அளித்து, பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த நான்கு பேரையும், உங்களின் பிரதிநிதிகளாக – உங்களின் குரலாகச் சட்டமன்றத்தில் ஒலிக்க, உங்களின் பொன்னான வாக்குகளை நீங்கள் வழங்க வேண்டும்.

மண்ணின் மைந்தன்

நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. நான் இந்த மண்ணின் மைந்தன். இன்னும் சொன்னால், தலைவர் கலைஞரின் மகன். உங்களால் உருவாக்கப்பட்ட இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்… அன்போடும் – உரிமையோடும் கேட்கிறேன்… வெற்றி உறுதியா! இந்த நான்கு பேருக்கும் நீங்கள் தரப்போவது வெற்றி! அது உறுதியா? உறுதி (மக்கள்). வெற்றி உறுதியாகிவிட்டது, வேட்பாளர்கள் இருக்கையில் அமரலாம். இப்போது நீங்கள் சொன்ன உறுதிபோன்றே, நேற்று மாலை, கொள்கை உறவாக நம்முடன் இணைந்திருக்கும் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரையும் அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து, அவர்களுடன் கலந்து பேசி, ‘வெல்வோம் ஒன்றாக’ என்று உறுதி எடுத்திருக்கிறோம். அதை முடித்துவிட்டுதான் திருவாரூருக்கு வந்திருக்கிறேன்.

ADVERTISEMENT

திருவாரூர் தேர் பேரழகு!

திருவாரூர், பெயரே அழகு; அதைவிட, திருவாரூர் தேர் பேரழகு! நேற்று முன் தினம்தான் திருவாரூர் தேரோட்டம் கம்பீரமாக நடந்து முடிந்திருக்கிறது. இன்னமும்கூட அந்த உற்சாகத்தை உங்களிடம் பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட, புகழ்பெற்ற ஆழித்தேர், 1948-க்கு பிறகு, 22 ஆண்டுகள் ஓடாமல் இருந்தது. திருவாரூரில் வளர்ந்து, திருவாரூரை வளர்த்தெடுத்த தலைவர் கலைஞர் அவர்கள், தேர் செல்லும் பாதையைச் செப்பனிட்டு, 1970-இல் ஆழித்தேரை ஓட வைத்த தலைவர், நம்முடைய தலைவர் கலைஞர். எப்போதெல்லாம் ஆட்சியில் இருந்தோமோ, அப்போதெல்லாம் திருவாரூருக்காக நிறைய செய்திருக்கிறோம். அதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஏன், திருவாரூர் மாவட்டத்தை உருவாக்கியதே நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தான்!

திமுக அரசின் சாதனைகள்

ஆட்சியர் அலுவலகம் – நீதிமன்ற அலுவலகம் – நகராட்சிக் கட்டடம் – மாவட்டக் காவல் அலுவலகம் – புதிய பேருந்து நிலையம் – இவ்வாறு அனைத்தையும் அமைத்தவர், தலைவர் கலைஞர்! திருவாரூரில், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்! 2010-இல் மருத்துவக் கல்லூரி! மன்னார்குடியில் அரசு கலைக் கல்லூரி! பாமணி உரத் தொழிற்சாலை! மாவட்டம் முழுவதும் குடிநீர் வசதி! இங்கிருக்கும் நம்முடைய டி.ஆர். பாலு அவர்கள் முயற்சியால், செம்மொழி எக்ஸ்பிரஸ் உட்பட ஐந்து புதிய ரயில்கள் வந்தது! மன்னையில் இருந்து திருப்பதிக்கு எக்ஸ்பிரஸ் விட்டதும் கழகத்தின் முயற்சியால்தான்! இவற்றின் தொடர்ச்சியாக, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளுக்குச் செய்து தந்திருக்கும் திட்டங்கள் ஏராளமாக இருக்கிறது. நேரத்தின் அருமை கருதி, ஹைலைட்ஸாக சிலவற்றை மட்டும் சொல்கிறேன். • திருவாரூர் நகராட்சியில் கலைஞர் பேருந்து நிலையம் மற்றும் காய், கனி அங்காடி • மன்னார்குடி நகராட்சியில் பெருந்தலைவர் காமராசர் பேருந்து நிலையம் • திருவாரூர் மாவட்டம் – நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், திருவாரூர், கொரடாச்சேரி ஆகிய ஆறு ஒன்றியங்களில் இருக்கும் குடியிருப்புகளுக்கு, கொள்ளிடம் ஆற்றின் நீரை ஆதாரமாகக் கொண்டு கூட்டுக் குடிநீர் திட்டம் • சிப்காட் தொழில் வளாகம் • முத்துப்பேட்டையில் மீன் இறங்கு தளம் • திருத்துறைப்பூண்டியில் அவசரகால மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையம் மற்றும் தினசரி காய்கறி அங்காடி • நீடாமங்கலத்தில் தீயணைப்பு மீட்புப் பணிக் கட்டடம் – அறிவுசார் மையம் • கூத்தாநல்லூர் வட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி • நன்னிலம் வட்டம், வண்டாம்பாளை கிராமத்தில் அரசு தொழில் பயிற்சி நிலையம் •

328 பழமையான திருக்கோயில்களுக்குக் குடமுழுக்கு! நாம் செய்திருக்கும் சாதனைகளில் சிலவற்றை மட்டும்தான் குறிப்பிட்டிருக்கிறேன்! இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், • மன்னார்குடி, கூத்தாநல்லூர் வட்டங்களில் சிப்காட் தொழில் வளாகம் • திருவாரூர், கூத்தாநல்லூர் நகராட்சிகளில் 99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர்த் திட்டம் • நெடுவாக்கோட்டை பகுதியில் ஜவுளி ஆடை தயாரிக்கும் சிப்காட் டெக்ஸ் பார்க் • நன்னிலம் வட்டம், வண்டாம்பாளையில் அனைத்து வசதிகளுடன் கூடிய திருவாரூர் மாவட்ட மாடல் பள்ளிக் கட்டடம் • திருவாரூர் ஜூபிளி மார்க்கெட் பகுதியில் புதிய வணிக வளாகம் • மன்னார்குடியில் புதிதாக அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி • திருவாரூர் மாவட்ட ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களின் மதகுகள், 43 கோடி ரூபாயில் புனரமைக்கும் பணிகள் • நன்னிலம் வட்டம், பூந்தோட்டம் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை • பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கப் பாடுபட்ட நெல் ஜெயராமன் அவர்களுக்கு திருத்துறைப்பூண்டியில் நினைவுச் சிலை! இப்படி நாள் முழுவதும் என்னால் சாதனைகளை மட்டும் பட்டியலிட்டு சொல்லிக் கொண்டே இருக்க முடியும்!

ஹிட்டான நான் முதல்வன் திட்டம்

2021-இல் எங்கள் மேல் நீங்கள் எல்லாம் நம்பிக்கை வைத்து, ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தீர்கள். முதலமைச்சராக நான் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து, பெண்கள், விடியல் பயணத்தில் கட்டணமில்லாமல் பயணிக்கத் தொடங்கிவிட்டீர்களா இல்லையா!? அ.தி.மு.க. ஆட்சியில் சீரழிக்கப்பட்ட நிதி நிலைமையை ஓரளவு சரிசெய்தவுடனே, பெண்களுக்கு உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாயை ஒரு கோடியே 31 இலட்சம் பெண்களுக்கு கொடுக்க தொடங்கிவிட்டோமா இல்லையா!? அனைவரின் வங்கிக் கணக்கிற்கும் ஆயிரம் ரூபாய் சரியாக வருகிறதா இல்லையா!? பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடங்கினோம்… 19 இலட்சம் மாணவர்கள் சூடாக – சுவையாக, சத்தான உணவை சாப்பிடுகிறார்கள். நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் கல்வியில் சிறந்து, தலைசிறந்த வேலைகளில் பணிபுரிய வேண்டும் என்பதற்காக தொடங்கிய திட்டம்தான், நான் முதல்வன் திட்டம்.

அந்தத் திட்டம் இன்றைக்கு ஹிட்டாகி, 48 இலட்சம் திறன் சான்றிதழ்களை அவர்கள் வாங்கியிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தால், எத்தனை ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் உருவாகியிருக்கிறார்கள் என்று நீங்கள் அனைவரும் செய்திகளில் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள். அதுமட்டுமல்ல, சில குடும்பங்களின் சூழல் காரணமாக, சில பிள்ளைகளால் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்படும். இனிமேல் அந்த நிலை நீடிக்கக் கூடாது என்று, புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி, மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கினோம். அதன் வெற்றியைப் பார்த்து, மாணவர்களுக்கும் மாதாமாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை உருவாக்கினோம். இப்படி நம்முடைய திராவிட மாடல் அரசின் முத்திரைத் திட்டங்களைப் பற்றி, நானும் பல மேடைகளில் புள்ளிவிவரங்களுடன் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். இதனால் பயனடையும் மக்களே, ஊடகங்களில் வந்து பேசுகிறார்கள்.

யார் வயிறு எரிந்தால் என்ன

இதன் தொடர்ச்சியாகதான், கடந்த ஜனவரி மாதம் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை, மகிழ்ச்சிப் பொங்கலாக கொண்டாட வேண்டும் என்று மூன்றாயிரம் ரூபாய் வழங்கினோம். டெல்டா பகுதி என்பதால், விவசாயிகள் ஏராளமாக இங்கு வந்திருக்கிறீர்கள். இந்த உழவர் திருநாள் மகிழ்ச்சிப் பொங்கலாக இருந்ததா? நம்முடைய ஹிட் திட்டங்களில், டிரெண்ட்-செட்டர் என்றால், அது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்! நம்முடைய தமிழ்நாட்டைப் பார்த்து, பல மாநிலங்களும் உரிமைத் தொகை வழங்க தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், தேர்தலைக் காரணம்காட்டி இந்த உரிமைத் தொகையை நிறுத்த, ஒன்றியத்தில் இருக்கும் பா.ஜ.க. திட்டம் தீட்டியது! நாங்கள் சும்மா இருப்போமா… விழித்துக் கொண்டோம். ஏழைகளின் சுருக்குப் பையிலிருந்துகூட, காசை உருவத் திட்டம் போடும் பா.ஜ.க.விற்கு, நம்முடைய திராவிட மாடலின் நலத்திட்டங்கள் மூலமாக மக்களுக்கு நேரடிப் பணப் பயன் கிடைப்பது எரியத்தான் செய்யும்! யார் வயிறு எரிந்தால் என்ன… மக்களின் மனது நிறைய வேண்டும்! அதுமட்டும்தான் என்னுடைய லட்சியம் – நோக்கம்! அதனால்தான், பிப்ரவரி மாதமே, மூன்று மாதத்திற்கான உரிமைத் தொகையை அட்வான்சாகவும் – கோடைக்கால சிறப்பு நிதியாக இரண்டாயிரம் ரூபாயைச் சேர்த்து, ஐந்தாயிரம் ரூபாயை வழங்கியிருக்கிறோம்!

அதுமட்டுமல்ல, சற்றேறக்குறைய 22 ஆண்டுகளாக, அரசு ஊழியர்கள் போராடிக் கொண்டிருந்த கோரிக்கையான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்கிச் செயல்படுத்தியிருக்கிறோம். இப்படி அனைத்து வகையிலும் தமிழ்நாடு டாப்பில் இன்றைக்கு வந்திருக்கிறது. இது, பா.ஜ.க. தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. உள்ளிட்ட அடிமைக் கட்சிகளுக்கு எல்லாம் எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. அதனால், தமிழ்நாட்டை எப்படியாவது கலவர பூமியாக்கிவிடலாம் என்று திட்டமிட்டு, ஏராளமான போலிச் செய்திகளைத் தொடர்ந்து பரப்பிப் பார்த்தார்கள். கலவர வெறியுடன் திரிந்த அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கிறது! அவர்கள் பரப்பியது அனைத்துமே அவதூறுதான் என்று உண்மை வெளிப்பட்டு, இன்றைக்கு மக்கள் முன்னால் அசிங்கப்பட்டு நிற்கிறார்கள். தமிழ்நாடு இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது! அந்த பெருமிதத்தோடும் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களோடும்தான், வாக்கு கேட்டு மக்களான உங்களைச் சந்திக்க, உங்கள் ஸ்டாலின் இன்றைக்குத் திருவாரூருக்கு வந்திருக்கிறேன்.

சூப்பர் ஸ்டார்

நேற்று முன்தினம், நான் வெளியிட்ட இந்தத் தேர்தல் அறிக்கைக்கு ‘சூப்பர் ஸ்டார்’ என்று பெயர் சூட்டியிருக்கிறோம்! அந்தத் தேர்தல் அறிக்கையை நீங்கள் எல்லாம் தொலைக்காட்சியில், பத்திரிகைகளில் பார்த்தீர்களா… அதெல்லாம் வாக்குறுதிகள் மட்டுமல்ல. திராவிட மாடல் 2.0-வில் நிச்சயம் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள்! அதில் முக்கியமானது, இல்லத்தரசிகளுக்கு கூப்பன் வழங்கும் திட்டம்… எவ்வளவிற்குக் கூப்பன் தரப்போகிறோம்? எட்டாயிரம் ரூபாய்க்கு! இந்தக் கூப்பனை வைத்து, உங்களுக்குத் தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருளை, புதிதாகவும் வாங்கிக் கொள்ளலாம்; இல்லை என்றால், பழைய பொருளை எக்ஸ்சேஞ்ச் செய்தும் புது பொருளை வாங்கிக் கொள்ளலாம்! உங்களுக்குப் பிடித்த கடையில் உங்களுக்குப் பிடித்த பிராண்டை வாங்கிக் கொள்ளலாம்!

அதில் என்னென்ன பொருட்களைச் சொல்லி இருக்கிறோம்… பிரிட்ஜ், வாஷிங் மிசின், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோவேவ் அவன், மின்னடுப்பு. இதில், உங்கள் வீட்டுக்கு எது தேவையோ அதை வாங்கிக் கொள்ளலாம். அதுமட்டுமல்ல, இனிமேல் மாதந்தோறும் பெறும் மகளிர் உரிமைத்தொகை இரண்டாயிரம் ரூபாயாக கிடைக்கப் போகிறது! அடுத்து, காலை உணவுத்திட்டம். இது குழந்தைகளின் பசியைப் போக்கும் திட்டம் மட்டுமல்ல, இல்லத்தரசிகளின் பணிச்சுமையைக் குறைக்கும் திட்டம்! இனிமேல், காலை உணவுத் திட்டத்தை எட்டாம் வகுப்பு வரைக்கும் விரிவாக்கம் செய்யப்போகிறோம்!

டெல்டா மக்களான வாக்குறுதி

டெல்டா மண்டலத்தைச் சேர்ந்த, உழவர் பெருமக்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். உங்களுக்காக மிகவும் முக்கியமான ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறோம். அது என்னவென்றால், 20 இலட்சத்திற்கும் அதிகமான உழவர்கள் பயன்பெறும் வகையில், எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்புசெட்டுகளை வழங்கப் போகிறோம்! இதுமட்டுமல்ல, புதுமைப்பெண் திட்டத்திலும், தமிழ்ப்புதல்வன் திட்டத்திலும் இனிமேல் உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப் போகிறோம்! உயர்கல்வி படிக்கச் செல்லும் பிள்ளைகளுக்கு அடுத்தடுத்து 5 ஆண்டுகளில் 35 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப் போகிறோம். அந்தப் பிள்ளைகள், உயர்கல்வி முடித்தவுடன் வேலைவாய்ப்பு பெறும் வகையில், நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி கொடுத்து, மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகையும் 6 மாதத்திற்கு வழங்கப் போகிறோம்.

சோழ நாடு சோறுடைத்து என்கிற பெருமை கொண்ட டெல்டா மக்களான உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றுமொரு வாக்குறுதி: நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். பேரிடர் கால இழப்பீடுகளாக இறவைப் பாசன பயிர்கள் மற்றும் நெல் பயிர்களுக்கு இனிமேல் ஹெக்டேர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும், நீண்டகாலப் பயிர்களுக்கு 27 ஆயிரம் ரூபாயும், மானாவாரிப் பயிர்களுக்கு 12 ஆயிரம் ரூபாயும் உயர்த்தி வழங்கப்படும். பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை ஆயிரத்து 200 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும்.

மீன்பிடி தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாகவும், மீன்பிடி குறைவுக் காலச் சிறப்பு நிவாரணத் தொகை 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 9 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகளும் இங்கு வந்திருப்பீர்கள். சுயஉதவிக்குழு உறுப்பினராக இருக்கும் உங்களைத் தொழில் முனைவோராக முன்னேற்ற வேண்டும் என்று பிணை எதுவும் இல்லாமல் 5 இலட்சம் ரூபாய் வரை மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்போகிறோம். 10 ஆயிரம் புதிய பேருந்துகளை இயக்கப் போகிறோம். இன்னும் பட்டியல் பெரிதாக இருக்கிறது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, ஒரு மாபெரும் தொலைநோக்குத் திட்டம் அறிவித்திருக்கிறேன். டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம்! உறுதியாக சொல்கிறேன்… அடுத்த 5 ஆண்டுகளில் டெல்டா பகுதிகளுக்கான உட்கட்டமைப்பு மாறப் போகிறது. இவ்வாறு, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் வளர்ச்சியைப் காண்பதற்காக அடுத்த 5 ஆண்டிற்குள் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப் போகிறோம். இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம், கொஞ்சம்தான்! தேர்தல் அறிக்கை புத்தகத்தில் இன்னும் ஏராளமாக இருக்கிறது!

NDA கூட்டணிக்கு தெரியும்

நான் கலைஞரின் மகன்… சொன்னால், சொன்னதை நிச்சயம் செய்வேன்! அதுமட்டுமல்ல, சொல்லாததையும் அதிரடியாகச் செய்வேன்! இது உங்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கு எதிராக இருக்கும் NDA கூட்டணிக்கும் தெரியும்! 2011-இல் இருந்து, 2021 வரைக்கும், தமிழ்நாட்டைப் பாழாக்கி, தலைகுனிய வைத்த அ.தி.மு.க., 2014-இல் இருந்து இந்தியாவை மோசமான நிலைக்கு அழைத்துச் சென்றிருக்கும் பா.ஜ.க.விடம் சரணாகதி அடைந்து ஒரு கூட்டணி அமைத்திருக்கிறது! அந்தக் கூட்டணியில், பா.ஜ.க. கிளைச் செயலாளராக இருக்கிறார், அ.தி.மு.க.வை அழிவு பாதையில் அழைத்துச் செல்லும் பழனிசாமி அவர்கள். பி.ஜே.பி.யின் கிளைச் செயலாளராக இன்றைக்கு மாறியிருக்கிறார். இப்போது அவர், நம்முடைய தேர்தல் அறிக்கையைப் பார்த்து, புலம்பத் தொடங்கியிருக்கிறார்.

அது என்ன மாதிரியான புலம்பல் என்றால், நம்முடைய திட்டங்களான மகளிர் உரிமைத்தொகை, கனவு இல்லம், விடியல் பயணம் போன்ற திராவிட மாடல் திட்டங்களைக் காப்பியடித்து, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அவர், நம்முடைய தேர்தல் அறிக்கையைப் பார்த்து, காப்பி அடித்துவிட்டோம் என்று புலம்புகிறார். பழனிசாமி அவர்களின் அறிவுத்திறத்திற்கு, சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் தொடங்கி, பல எடுத்துக்காட்டுகள் இருந்தாலும், இப்போது புதிதாக ஒரு எடுத்துக்காட்டு வந்திருக்கிறது. அவருக்கு எதைப் பற்றியும் புரிதல் கிடையாது; தொலைநோக்குப் பார்வையும் இல்லை என்பதை தன்னுடைய உளறல்களால் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவரின் உளறல்களிலேயே ஹைலைட் எது தெரியுமா? “எப்படி உங்களின் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள்” என்று கேட்டால், “வரியை உயர்த்தி நிறைவேற்றுவோம்” என்று சொல்கிறார். பழனிசாமி அவர்களால் மட்டும்தான், இப்படியெல்லாம் சிந்திக்க முடியும்! அதனால்தான், அந்தளவிற்கு பழனிசாமி அவர்களை, ஈஸியாக மிரட்டி, தங்களின் அடிமைக் கூட்டணியில் வைத்திருக்கிறது பா.ஜ.க. அந்த NDA கூட்டணிக்கு ஒரே ஒரு நோக்கம்தான், தமிழ்நாட்டு வளர்ச்சியை தடுக்க வேண்டும். திராவிட மாடல் ஏற்படுத்தியிருக்கும் இந்த வளர்ச்சியை அழிக்க வேண்டும். இதுதான், NDA கூட்டணியின் நோக்கம்!

‘நம்பர் ஒன்’ மாநிலம்

NDA-வின் தலைமையாக இருக்கும் பா.ஜ.க.விற்கு, தமிழ்நாட்டில் நம்மை எதிர்ப்பதற்கு வலிமை இல்லை என்று, அ.தி.மு.க.வை விலைக்கு வாங்கியிருக்கிறது! பொதுவாக, பா.ஜ.க-வைப் பொறுத்தவரைக்கும் மக்களுக்கு நல்லது செய்யாது. ஆனால், தேர்தல் வந்துவிட்டது என்றால், கண்துடைப்பிற்காக பட்ஜெட்டில் சில அறிவிப்புகளைக் கொடுப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டிற்கு அதைக்கூட செய்ய மனமில்லாத, வஞ்சக எண்ணத்தோடு இருக்கும் உருவம்தான் NDA. பா.ஜ.க. ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்ததில்லை. எந்தச் சிறப்பு திட்டத்தையும் செய்யவில்லை; நாம் வைத்த எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை! மதுரையில் ஒரு எய்ம்ஸ் அறிவித்தார்கள்; அதன் நிலைமையை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை!

சென்னை மெட்ரோ திட்டத்திற்கு நிதி தரவில்லை. ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி கேட்டிருக்கிறோம்; தரவில்லை! குடிநீர் திட்டத்திற்கான நிதியும் தரவில்லை! இத்தனை தடைகளையும் சமாளித்துப் பல்வேறு சாதனைகளை நாம் செய்திருக்கிறோம். திறமையான நிர்வாகத்தால் ‘நம்பர் ஒன்’ மாநிலமாக உயர்ந்திருக்கிறோம். இருப்பதிலேயே என்ன கொடுமை என்றால்? இந்தித் திணிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று, நம்முடைய வீட்டுக் குழந்தைகள் படிப்பதற்கான கல்வி நிதியைக்கூட இதுவரைக்கும் கொடுக்கவில்லை! இப்படி வஞ்சக எண்ணம் கொண்ட கூட்டத்திடம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியுமா? இப்படிப்பட்ட வஞ்சக கூட்டத்திடம் தமிழ்நாட்டு மக்களை ஒப்படைக்க முடியுமா? NDAவைத் தமிழ்நாடு புறக்கணிக்க வேண்டும்! அப்போதுதான், தமிழ்நாட்டின் எதிர்காலம் காப்பாற்றப்படும்! NDA கூட்டணி என்பது, எப்படிப்பட்ட சந்தர்ப்பவாத கூட்டணி என்று நீங்களே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். கரப்ஷன் – கமிஷன் – கலக்ஷன் என்று ஆட்சி நடத்திய பழனிசாமி அவர்களை மிரட்டி கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்து, வரிசையாக பல துரோகங்களைச் செய்து, பிரிந்த மாதிரி நாடகங்களை நடத்தி, கடைசியாக இப்போது, டெல்லியில் தீர்மானித்து, தோற்பதற்காகத் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது என்.டி.ஏ! இதுதான் உண்மை.

தி.மு.க. ஆட்சியில் தொடர வேண்டும்

அதனால்தான் சொன்னேன்… இந்தத் தேர்தல் என்பது, தமிழ்நாடு அணி vs டெல்லி அணி! தமிழ்நாடு vs NDA! தமிழ்நாட்டைக் காக்க வேண்டும் என்றால், தி.மு.க.தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்! தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து நடைபோட வேண்டும் என்றால், தி.மு.க. ஆட்சியில் தொடர வேண்டும்! தமிழ்நாடு கலவர பூமியாக மாறாமல் இருக்க வேண்டும் என்றால், பா.ஜ.க. – அ.தி.மு.க கூட்டணியையும், வேரோடு வீழ்த்த வேண்டும்! நீங்கள் அனைவரும் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டும், நாம் போராடுவது, தி.மு.க.வின் வெற்றிக்காக மட்டுமல்ல; தி.மு.க. தலைமையில் அமைந்திருக்கும் கூட்டணியின் வெற்றிக்காக மட்டுமல்ல; இது தமிழ்நாட்டின் வெற்றி! மறந்துவிடாதீர்கள். தமிழ்நாட்டுக்கான வெற்றி இது. எனவே, அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த மண்ணின் மைந்தனாக கேட்கிறேன்… கலைஞரின் மகனாக கேட்கிறேன்… உங்களின் பொன்னான வாக்குகளை, திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு நீங்கள் வழங்க வேண்டும்!

திருவாரூரில் நமது வெல்லும் வேட்பாளர் பூண்டி கலைவாணன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை வழங்க வேண்டும்! மன்னார்குடியில் நமது வெல்லும் வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை வழங்க வேண்டும்! திருத்துறைப்பூண்டியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர், தோழர் மாரிமுத்து அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை வழங்க வேண்டும்! நன்னிலம் தொகுதியில், நம்முடைய கூட்டணி வேட்பாளர், முகமது முபாரக் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் உங்களின் பொன்னான வாக்குகளை வழங்க வேண்டும்! நான் உறுதியாகச் சொல்கிறேன்… அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில், எங்களின் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்சியை, தமிழ்நாட்டை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் ஆட்சியை, நாங்கள் வழங்குவோம்!

ஆதரிப்பீர் உதயசூரியன்

ஏப்ரல் 23 அன்று, நீங்கள் வாக்களிக்கச் செல்லும்போது நீங்கள் சிந்திக்க வேண்டியது, ஒன்றே ஒன்றுதான், NDA-வின் தமிழர் விரோத சந்தர்ப்பவாத கூட்டணியா? தி.மு.க. சாதனைகளின் தொடர்ச்சியா? என்பதைச் சிந்தித்து வாக்களியுங்கள்… தமிழ்நாடு வளம் பெற… நல்லாட்சி தொடர்ந்திட… ஆதரிப்பீர் உதயசூரியன்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை! உதயசூரியன், உங்கள் சூரியன்! உதயசூரியன், உங்கள் சூரியன்! வெல்வோம் ஒன்றாக!” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share