ஒரே கல்லில் இரண்டு மாங்காய்… மாசெக்கள் கூட்டத்தில் ஸ்டாலின் மாஸ்டர் பிளான்!

Published On:

| By vanangamudi

2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஜூன் 28 மாலை 6 மணிக்கு மாவட்ட செயலாளர்கள், 234 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் ஜூம் மீட்டிங் மூலமாக நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். mk stalin urge membership drive

இதற்காக நிர்வாகிகள் அனைவரையும் மாலை 5.30 மணிக்கெல்லாம் ஜூம் மீட்டிங்கில் இணைய அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

இதனால், சாலைகளில் பயணம் செய்துகொண்டிருந்த மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ-க்கள், தொகுதி பொறுப்பாளர்கள் அவசர அவசரமாக காரை ஓரம்கட்டி மீட்டிங்கிற்கு ரெடியானார்கள். அதேபோல, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களும் மீட்டிங்கில் கனெக்ட் ஆனார்கள். திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் மாலை 6.20 மணிக்கு ஜூம் மீட்டிங்கில் இணைந்தார்.

ஸ்டாலின் இந்த கூட்டத்தில் பேசும்போது,

ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தை நான்கு கட்டங்களாக கொண்டு செல்ல இருக்கிறோம். சென்னையில் ஐடி விங் மாநில செயலாளர் டி.ஆர்.பி ராஜா தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு இயத்தில் இணைவதற்காக உருவாக்கப்பட்ட செயலியை எப்படி ஆபரேட் செய்வது, ஒவ்வொரு வீடாக செல்லும் போது மக்களை எப்படி அணுக வேண்டும் என்பது பற்றியெல்லாம் நிர்வாகிகளுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டது. அவர்கள் 234 தொகுதி பொறுப்பாளர்களுக்கும் இப்போது பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்.

பூத் கமிட்டியில் உள்ள கிளை செயலாளர்கள், BL 2 அணி நிர்வாகிகளுக்கு தொகுதி பொறுப்பாளர்கள் பயிற்சி கொடுக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 68,000 பூத் ஏஜெண்டுகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

ஜூலை 1-ஆம் தேதி ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை சென்னையில் நான் தொடங்கி வைக்கிறேன். அன்றைய தினம் செய்தியாளர்களை சந்திக்கிறேன்.

கிளை செயலாளர்கள், BL2 அணி நிர்வாகிகள் என ஐந்து பேருக்கு குறையாமல் ஒவ்வொரு கிராமத்திலும், நகர்ப்புறங்களிலுள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் அனைத்து கட்சியினர் வீடுகளுக்கும் செல்ல வேண்டும்.

அவர்களிடம் ஸ்டாலின் அரசு எப்படி செயல்படுகிறது என கேட்க வேண்டும். தொடர்ந்து திமுக ஆட்சியின் திட்டங்களை விளக்க வேண்டும். திமுக ஆட்சியின் திட்டங்கள் அடங்கிய புத்தகத்தை ஒவ்வொரு வீடுகளிலும் கண்டிப்பாக வழங்க வேண்டும். இதில் எந்த திட்டங்களில் நீங்கள் பயன்பெற்றுள்ளீர்கள் என்று அவர்களிடம் கேட்க வேண்டும். அவர்கள் சொல்லும் பதிலை செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தமிழ் மண், உரிமையை காக்க ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைய விரும்புகிறீர்களா? என்று கேட்க வேண்டும். பின்னர், கட்சியில் உறுப்பினராக விருப்பம் உள்ளதா என்று கேட்டு சம்மதம் தெரிவித்தால் பெயர், வயது, மொபைல் எண் வாங்க வேண்டும்.

மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பி அவர்களை கட்சியில் உறுப்பினராக சேர்க்க வேண்டும். கடைசியாக அவர்கள் வீட்டில் ஓரணியில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டலாமா என்று அனுமதி கேட்க வேண்டும். அவர்கள் அனுமதி கொடுத்தால் அந்த ஸ்டிக்கரை கதவுகளில் ஒட்ட வேண்டும். இந்த ஸ்டிக்கர் இருந்தால் நல்ல நன்மை கிடைக்கும் என்றும் அவர்களிடம் சொல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடங்களுக்கு குறையாமல் பேச வேண்டும்.

அதன்படி, தமிழகம் முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இதன்மூலம் தேர்தல் பிரச்சாரத்தையும் நாம் தொடங்கிவிட்டோம். உறுப்பினர்களையும் சேர்த்து விட்டோம். அதாவது, ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல ஆகும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து உதயநிதி பேசும்போது,

மிஸ்டு கால் கொடுத்து இயக்கத்தில் சேர்க்க நாம் என்ன பாஜகவா? நாம் சொந்த காலில் நிற்கக்கூடியவர்கள். திராவிட இயக்கத்தின் வழி வந்தவர்கள். இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு சமூக வலைதளங்களை கையாளவும் பயிற்சி கொடுத்திருக்கிறோம். அதனால் அந்தந்த பகுதிகளில் உள்ள இளைஞரணி நிர்வாகிகளை ஓரணியில் தமிழ்நாடு திட்டத்திற்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மகளிரணி மாநில செயலாளர், முன்னாள் எம்.பி ஹெலன் டேவிட்சன்,

மாநில மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தை சென்னையில் நடத்தினோம். அப்போது ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ஒவ்வொரு பூத்களிலும் மகளிரணி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். இதற்காக அவர்களுக்கு பயிற்சியும் அளித்திருக்கிறோம்.

டி.ஆர்.பி.ராஜா,

தலைவர் குறிப்பிட்டதை போல ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தை அமல்படுத்த சிறப்பு பயிற்சியாளர்களை வைத்து பயிற்சி கொடுக்கப்பட்டது. அதன்பிறகு 234 தொகுதி பொறுப்பாளர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்படது. அந்த பயிற்சி முறையை வீடியோ மூலமாக காண்பித்து ஜூன் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் பூத் கமிட்டியில் உள்ள உறுப்பினர்களுக்கும் பயிற்சி கொடுக்க தொடங்கி விட்டனர்.

என்.ஆர்.இளங்கோ,

தலைவர் சொன்னது போல இந்த பணியை ஒவ்வொரு பூத்திலும் சரியாக செய்துவிட்டால், இந்த தேர்தல் மட்டுமல்ல அடுத்த வரக்கூடிய தேர்தல்களிலும் நமக்கு மிகவும் எளிதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் குறித்து தொகுதி பொறுப்பாளர்கள் சிலரிடம் நாம் பேசியபோது,

“இந்த வேலைகளை துவங்க முதல் கட்டமாக 68,000 பூத்களிலும், பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு தலா 5,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தொகுதி பொறுப்பாளர்களுக்கு 50,000 ரூபாய் முதல் 75,000 ரூபாய் வரை மாவட்ட செயலாளர்கள் கொடுத்துள்ளனர்.

மேலும், அவர்கள் தங்குவதற்கான இடம், உணவு ஆகிய அனைத்தும் தயார் செய்யப்பட்டு கொடுக்கப்படுகிறது. தொகுதி பொறுப்பாளர்கள் மாதத்திற்கு மூன்று முறை தொகுதிக்கு சென்று இந்த பணி விவரங்களை பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்பாகவே, பூத் கமிட்டி அமைத்து ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மக்களை பார்த்து பேசி பழகுவதால் பேப்பர் கொடுக்காமல் அனைத்து விவரங்களும் தெரிந்து விடும். இது தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா செய்வதற்கு எளிதாக இருக்கும்” என்கிறார்கள். mk stalin urge membership drive

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share