இந்தி மொழிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் வெறுப்பை பரப்புகிறார் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்த நிலையில், அவரது பேச்சுக்கு ஸ்டாலின் இன்று (மார்ச் 27) கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரேதச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏஎன்ஐ ஆங்கில ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “மொழி அல்லது மாநிலங்களால் நமது நாடு பிளவுபடக்கூடாது. இந்திய மொழிகளில் தமிழ் மிகவும் தொன்மையாது. தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் காசி – தமிழ் சங்கமத்தை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். Stalin replies to Yogi Adityanath
இந்தியாவில் உள்ள அனைவரும் தமிழ் மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் மதிக்கிறார்கள். ஆனால், ஸ்டாலின் ஏன் இந்தி மொழிக்கு எதிராக வெறுப்பை பரப்புகிறார்? அரசியல் லாபத்திற்காகவும் வாக்கு வங்கி அரசியலுக்காகவும் மொழி அடிப்படையிலான பிரிவினைவாதத்தையும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை கூட்டத்தையும் ஸ்டாலின் நடத்துகிறார்” என்றார்.
யோகி ஆதித்யநாத்துக்கு பதிலளித்து ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “இருமொழிக் கொள்கை மற்றும் தொகுதி மறுவரையறை குறித்த தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது. பாஜக தலைவர்கள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்பது அவர்களது நேர்காணல்களை பார்க்கும்போதே தெரிகிறது.
யோகி ஆதித்யநாத் வெறுப்பை பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கிறாரா? எவ்வளவு முரண்பாடாக இருக்கிறது. இது ஒரு பொலிட்டிக்கல் பிளாக் காமெடி.
நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பு மற்றும் பேரினவாதத்தை எதிர்க்கிறோம். இது வாக்குக்காக நடத்தப்படும் கலவர அரசியல் அல்ல. கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.Stalin replies to Yogi Adityanath