சிறுபான்மையினர் மீதான வெறுப்பு என்னும் நெருப்பைத் தூண்டிவிட்டு, அதில் குளிர்காயும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் நீங்கள், எப்படி அவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் நிலைநாட்டுவீர்கள்? என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை கீழ்பாக்கம் பகுதியில் நடந்த ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், “ஈகைப் பண்பும், அடுத்தவர்களுக்கு உதவும் மனமும், அனைவரையும் சமமாக கருதி அன்பு செலுத்தும் சமநெறியும் கொண்ட – தூய இஸ்லாமிய சொந்தங்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் என்னுடைய ரமலான் நல்வாழ்த்துகளை முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒருநாளும் பிரிக்க முடியாது!
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் – இஸ்லாமியர்களுக்கும் இருக்கும் உறவு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. இந்த இயக்கம் தொடங்கியது முதல் உண்டான உறவு! கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களின் காலம்தொட்டு, பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இப்போது நான் என தலைமுறை தலைமுறையாகத் தொடரும் உறவு, இந்த உறவு! அதன் தொடர்ச்சியாகத்தான், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த நபிகள் நாயகம் அவர்களின் 1,500-ஆவது பிறந்தநாள் விழாவில் நான் கலந்து கொண்டு பேசினேன். இந்த உறவு இணைபிரியாமல், காலம்காலமாக தொடரும். நம்மை யாராலும், ஒருநாளும் பிரிக்க முடியாது!
உங்களில் ஒருவராக இருந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். உங்களுக்கான பல நலத்திட்டங்களை அவரின் ஆட்சிக் காலங்களில் கொண்டு வந்தார். அவரின் வழியில் நடக்கும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், சிறுபான்மையினருக்காகச் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் என்பது, மிக மிகப் பெரியது. எதைச் சொல்வது எதை விடுவது என்றே தெரியாத அளவுக்கு, அந்த சாதனைப் பட்டியல் மிக மிக நீளமானது. நேரத்தின் அருமை கருதி, அதையெல்லாம் நான் விளக்கமாகப் பட்டியலிட்டுச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவையெல்லாம் உங்களுக்கே நன்றாகத் தெரியும்!
மிகப்பெரிய பலமே பெண்கள்தான்
கடந்த ஜனவரி மாதம் 28-ஆம் நாள் கும்பகோணத்தில் நடைபெற்ற மஹல்லா ஜமாத் மாநில மாநாட்டில் நான் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றேன். அந்த மாநாட்டில் எடுத்து வைத்த கோரிக்கைகளை எல்லாம் நான் ஏற்றுக் கொண்டு, அதில் ஐந்து சிறப்பு அறிவிப்புகளை நான் வெளியிட்டேன்.
எதற்காகச் சொல்கிறேன் என்றால், உங்களுக்கு எப்போதெல்லாம் என்ன தேவைப்பட்டாலும், அதை அறிவித்துச் செயல்படுத்துவதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி.
நம்முடைய திராவிட மாடல் அரசின் மிகப்பெரிய பலமே பெண்கள்தான்! மகளிர் நலனை முன்வைத்துதான் ஏராளமான நலத்திட்டங்களை நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அந்த ஜமாத் மாநாட்டில் நான் பேசும்போது, முஸ்லிம் பெண்கள்தான் அதிகமாகக் கைதட்டி அதை வரவேற்றார்கள். பெண்கள் நம்முடன் இருக்கும்போது, நம்மை யாராலும் வீழ்த்த முடியாது! அதிலும், இஸ்லாமிய சகோதரிகள் நம்முடன் இருக்கும்போது, நம்முடைய பலம் இன்னும் பல மடங்கு பெருகிவிடும்!
அனைவரும் சொன்னார்கள்… தேர்தல் அறிவிப்பு வந்திருக்கிறது. இந்த மேடையையே பாருங்கள்… இசுலாமிய மக்களுக்கான அனைத்து அமைப்புகளும் ஒன்றாக – ஒற்றுமையாக கூடி, பேரன்பின் ஈகைப் பெருவிழாவைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். அனைத்துச் சிறுபான்மை இயக்கங்களும் ஒரே மேடையில் சேர்ந்திருக்கிறார்கள். இதற்கு முன்பு, இதுபோன்று இருந்ததா என்றால், இல்லவே இல்லை. இந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது தி.மு.க. இந்த ஒற்றுமைதான், தமிழ்நாட்டுக்கும் அவசியம்! ஏன், இந்திய நாட்டுக்கும் அவசியம்!
ஆனால், அப்படியே இதற்கு நேர்மாறான நிலைமை, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இருந்து வருகிறது! அண்மையில், அசாம் மாநில முதலமைச்சரே இஸ்லாமியர்கள் பற்றி எப்படியெல்லாம் வெறுப்பை விதைத்தார் என்று விளக்கமாகச் சொல்லி, இந்த மேடையின் மாண்பை நான் குறைக்க விரும்பவில்லை. முஸ்லிம்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர்கள்கூட நிம்மதியாக கிறிஸ்துமஸ் கொண்டாட முடியவில்லை. குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என்றுகூட பார்க்காமல் தாக்குதலை நடத்துகிறார்கள்!
அடகு வைத்துவிட்டீர்களே
இப்படி நாடு முழுவதும் நடக்கும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறை பற்றி, இன்றைக்கு இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி எதாவது கருத்து சொன்னாரா? திருவாளர் பழனிசாமியிடம் நாம் கேட்பதெல்லாம்… அ.தி.மு.க. என்ற கட்சியுடன் சேர்த்து, உங்கள் மனசாட்சியையும் பா.ஜ.க.விடம் அடகு வைத்துவிட்டீர்களே! அதுதான் வேதனையாக இருக்கிறது. சிறுபான்மையினர் மீதான வெறுப்பு நெருப்பை தூண்டிவிட்டு, அதில் குளிர்காயும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் நீங்கள் எப்படி அவர்களின் உரிமையையும் பாதுகாப்பையும் நிலைநாட்டுவீர்கள்?
பழனிசாமி மட்டுமல்ல, நாட்டில் இப்படித்தான் பலரும், நோன்பு திறக்கும் ஒரு நாள் மட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ஃபோட்டோக்கு போஸ் குடுத்துவிட்டு, பா.ஜ.க. மூலமாக இஸ்லாமியர்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் அமைதியாக இருக்கிறார்கள்.
இஸ்லாமியர்களுக்கு இன்னல் ஏற்படும்போது ஓடி ஒளிந்து கொள்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்! எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரி, இப்போது ஆட்சியில் இருக்கும்போதும் சரி, இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக முதல் ஆளாக குரல் கொடுப்பது தி.மு.க.தான்! தொடர்ந்து களத்தில் இறங்கிப் போராடுகிறோம். சட்டமன்றத்தில் இருந்து தீர்மானம் நிறைவேற்றுகிறோம். ஏன், நீதிமன்றப் படியேறி வழக்கு தொடுக்கிறோம்! அதனால்தான், சிறுபான்மையின மக்களும் என்றைக்கும் தி.மு.க.வுக்குத் துணையாக நிற்கிறார்கள்.
எனவே, தமிழ்நாட்டின் மதநல்லிணக்கம் காப்பாற்றப்பட – சிறுபான்மையின மக்களும் பெரும்பான்மையின மக்களும் சகோதரப் பாச உணர்வுடன் பழகும் பண்பாடு தழைக்க – இந்த ஒற்றுமை எந்நாளும் தொடர வேண்டும்! அதற்கு, நீங்கள் ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த இனிய நாளில் உங்களின் ரமலான் பெருநாள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள எனக்கு வாய்ப்பளித்ததற்கு நான் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரையும் அரவணைக்கும் அன்பால் வெல்வோம் ஒன்றாக! ” என தெரிவித்துள்ளார்.
