படிப்புதான் ஒரு பெண்ணிற்கு உலகத்திலேயே அழகான அணிகலன் – மு.க.ஸ்டாலின்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழ்நாடு மற்ற மாநிலங்களோடு போட்டி என்ற நிலையைத் தாண்டி, உலக நாடுகளோடு தான் போட்டி போடுகிறோம். இதற்கெல்லாம் காரணம் கல்வியில் தமிழ்நாடு செலுத்திய கவனம்தான். படிப்புதான் ஒரு பெண்ணிற்கு உலகத்திலேயே அழகான அணிகலன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,” நானும் MCC பள்ளியின் பழைய மாணவன் தான்.. இந்தப் பாராட்டு விழா எனக்கு கூடுதல் பொறுப்பைத் தருகிறது. பாராட்டு விழா அன்பின் வெளிப்பாடு. நான் உங்களுக்கு செய்ய வேண்டிய பொறுப்புணர்வு நிறைய உள்ளது. இன்னும் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்றுவதற்கு மீண்டும் நாங்கள் ஆட்சி அமைப்போம்.

ADVERTISEMENT

புதுமைப்பெண் திட்டத்தால் பெண்கள் உயர்கல்வியில் சேர்வது 34 சதவீதம் அதிகரித்துள்ளது. புதுமைப்பெண் திட்டத்தால் நகர்ப்புற மாணவிகளைவிட கிராமப்புற மாணவிகள் அதிகம் பயனடைந்துள்ளனர்.வெற்றிக்கு குறுக்கு வழி கிடையாது. கடின உழைப்பு தேவை. 5 ஆண்டுகளில் பல குடும்பங்களின் தலையெழுத்தை திமுக அரசு மாற்றியுள்ளது.

என்னைப் பொருத்தவரை பெண்கள் என்றாலே அழகுதான். ஆனால் பெண்களுக்கு அறிவுதான் உண்மையான அழகு. படிப்புதான் ஒரு பெண்ணிற்கு உலகத்திலேயே அழகான அணிகலன். போட்டி நிறைந்த இந்த உலகத்தில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் டிகிரி படித்தால் மட்டும் போதாது. நீங்கள் வேலைக்குச் சென்றாலும், உங்களுக்கு ஆர்வம் உள்ள துறைகளில் ஆராய்ச்சிப் படிப்பு வரை தொடர்ந்து படிக்க வேண்டும். உங்கள் முன்னேற்றத்திற்காக மட்டுமல்ல, நமது மாநில முன்னேற்றத்திற்காகவும் தான்.

ADVERTISEMENT

இன்று தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக இருக்கிறது. ஆனால் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் 1950களில் அப்படியே தலைகீழான நிலைதான் இருந்தது. நாட்டிலேயே வறுமை அதிகமான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு இப்போது நாட்டிலேயே வறுமை குறைந்த மாநிலமாக மாறியுள்ளது. இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக உயர்ந்துள்ளது.நிறைய தொழிற்சாலைகள் தமிழகத்தைத் தேடி வருகின்றன. கடந்த ஆறு மாதங்களில் vinfast, டாடா, லேண்ட் ரோவர் என்ற இரண்டு பெரிய கார் உற்பத்தி ஆலைகளைத் திறந்து வைத்தேன். இதற்கு முன் இவ்வளவு குறைந்த நேரத்தில் இரண்டு பெரிய கார் நிறுவனங்களைத் திறந்து வைத்த வரலாறு கிடையாது.

மற்ற மாநிலங்களோடு போட்டி என்ற நிலையைத் தாண்டி, உலக நாடுகளோடு தான் போட்டி போடுகிறோம். இதற்கெல்லாம் காரணம் கல்வியில் தமிழ்நாடு செலுத்திய கவனம்தான்.தொழில்துறையை எடுத்துக்கொண்டால், எந்த நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டாலும், இதனால் பெண்களுக்கு எவ்வளவு வேலை கிடைக்கும் என்றுதான் முதலில் கேட்பேன்.பெண்களான நீங்கள் முன்னேறினால் ஒரு தலைமுறையே முன்னேறும். இந்தியாவிலேயே அதிக அளவிலான பெண்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. யாரும் எட்ட முடியாத உயரத்தில் தமிழ்நாடு உள்ளது.இது இன்னும் உயர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள எல்லா பெண்களும் வேலைக்குப் போகும் நிலை உருவாக வேண்டும்.

ADVERTISEMENT

அதற்கு உங்களுக்கு என்ன தேவை என்றாலும் சொல்லுங்கள். நான் செய்வதற்குத் தயாராக இருக்கிறேன். நிச்சயம் உங்கள் வளர்ச்சியில் நான் உங்களுடன் இருப்பேன். அதேபோல் உங்கள் உடல் நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள். 14 வயது உள்ள பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளோம். இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. தமிழகத்தில் தான் முதல் முதலில் தொடங்கப்பட்டுள்ளது.வெளியில் இந்த ஊசியை செலுத்தினால் 14 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.

இந்தத் தடுப்பூசியைத் தற்போது அரசு கட்டணமின்றி செலுத்துகிறது.இதைப் பற்றி தெரிந்தவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். நான் பேசியதை அட்வைஸாக நினைக்காதீர்கள். நீங்களும் எனக்கு மகள் போலத்தான். இது போல நன்றி தெரிவிக்கும் விழாக்களை விட நன்றாகப் படித்து வாழ்வில் முன்னேறினால் அதுதான் நீங்கள் எனக்கு செலுத்தும் உண்மையான நன்றி வெல்லும் தமிழ் பெண்களே..” என்றார்.

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share