“இனி இவர்கள் அரசின் பிள்ளைகள்”: தந்தையை இழந்தவர்களுக்கு உறுதுணையாய் நின்ற முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Kavi

சங்கராபுரத்தில் தந்தையின் இறுதிச்சடங்கிற்கு வழியின்றி தவித்த பிள்ளைகளுக்கு கிராம மக்கள் ஒன்றுதிரண்டு உதவிய நெகிழ்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், மனிதநேயத்தையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (46). கூலி தொழிலாளி. இவரது மனைவி வசந்தா. 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு லாவண்யா (24),ரீனா (21), ரிஷிகா(17) ஆகிய 3மகள்களும், அபினேஷ் (13) என்ற மகனும் உள்ளனர்.

ADVERTISEMENT

தாய் மறைந்துவிட்ட நிலையில் குழந்தைகள் தந்தையின் பராபரிப்பில் வளர்ந்து வந்தனர். தந்தை வேலைக்கு போகும்போது கிடைக்கும் கூலி பணத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்தனர். இந்த கூலி வேலையும் எல்லா நாளும் கிடைக்காது. இதனால் வறுமையின் பிடியில் இருந்த பெண் பிள்ளைகள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டனர்.

பொறியியல் படித்து வந்த மூத்த மகள் லாவண்யா கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் தனது படிப்பை தொடரவில்லை. 8ஆம் வகுப்பு படித்து வந்த ரீனா, 10ஆம் வகுப்பு படித்து வந்த ரிஷிகா ஆகியோரும் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தினர். மகன் அபினேஷ் மட்டும் பூட்டை அரசு உதவிபெறும் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

ADVERTISEMENT

இப்படிப்பட்ட நிலையில் அடுத்த அடியாக தந்தை கமலக்கண்ணனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதற்கு 4 மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 14ஆம் தேதி உயிரிழந்தார்.

ADVERTISEMENT

அவரது உடல் வீட்டுக்கு எடுத்து வந்து வைக்கப்பட்டது. ஆனால் தாயும் இல்லாமல், கையில் பணமும் இல்லாமல் தந்தையின் உடலுக்கு எப்படி இறுதிச் சடங்கு செய்வது என தவியாய் தவித்தனர் பிள்ளைகள்.

குழந்தைகளின் பரிதாப நிலையை உணர்ந்த கிராம மக்கள், தானாக முன்வந்து ஒவ்வொரு வீடாகச் சென்று பணம் வசூலித்தனர்.

அதன்படி கிடைத்த நிதியைக்கொண்டு, கமலக்கண்ணனின் உடலுக்கு இறுதிச் சடங்குகளை நடத்தி, பிள்ளைகளின் பாரத்தைச் சிறிதளவு குறைத்தனர். கிராம மக்களின் இந்த மனிதாபிமான செயல், சங்கராபுரம் வட்டாரத்தில் பேசுபொருளாகி, பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

அதேசமயம் தமிழ்நாடு அரசு தங்களுக்கு உதவிட வேண்டும் என்றும், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய தனது சகோதரிகள் மீண்டும் பள்ளிப்படிப்பை தொடர உதவிட வேண்டும் என்றும் தாய்,தந்தையை இழந்து தவிக்கும் மூத்த மகள் லாவண்யா கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.

இந்த தகவல் முதல்வர் காதுக்கும் சென்ற நிலையில் உடனடியாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் பேசி உரிய உதவி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதுபோன்று பெற்றோரை இழந்து நிற்கும் பிள்ளைகளிடமும் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

”வணக்கம்மா… அப்பா மறைந்த செய்தியை பார்த்தேன்… கவலைப்படாதீங்க, தைரியமா இருங்க… என்ன செய்ய வேண்டுமோ… அரசு சார்பில் செய்து கொடுக்கிறோம்” என்று சொல்ல,

கமலக்கண்ணனின் மகள், தம்பி தங்கைகளை படிக்க வைக்க வேண்டும். ஏதாவது அரசு வேலை இருந்தால் ஏற்பாடு செய்து கொடுங்க சார் என்று கோரிக்கை வைத்தார்.

அதற்கு முதல்வர் உங்கள் என்னென்ன வேண்டுமோ… அந்த கோரிக்கைகளை கலெக்டரிடம் சொல்லுங்கள் நான் ஃபாலோ செய்துகொள்கிறேன். உங்களுக்கு என்ன வேண்டுமோ செய்து கொடுக்க சொல்கிறேன். கலைஞர் வீடும் ஏற்பாடு செய்துகொடுக்கிறோம் என்று ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “ இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்!

இந்தச் செய்தியைக் காலையில் தினத்தந்தியில் படித்ததுமே, மாவட்ட ஆட்சியரை அழைத்து அவர்களது தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியச் சொன்னேன்.

நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து துணை நிற்போம் என உறுதியளித்தேன்.

மாலை, அமைச்சர் எ.வ.வேலுவும் பிள்ளைகளை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான உடனடி நிதியுதவியை வழங்கியுள்ளார். இந்த நான்கு குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க, அவர்கள் வாழ்வில் முன்னேறிட நமது திராவிட மாடல் அரசு துணை நிற்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share