ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: இறங்கி அடிக்கும் ஸ்டாலின்! எடப்பாடியிடம் தஞ்சமடையும் தவெக – அண்ணாமலை ‘செம்ம கேம்’!

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்தது “மழைவிட்டாலும் தூவானம் விடவில்லை”.. எவ்வளவு சரியாக இருக்கிறது என சொல்லியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

கரூர் ரியாக்சன்ஸா?

ADVERTISEMENT

ஆமாய்யா… கரூர் சம்பவத்தை வெச்சு ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு மூவ் செய்யுது..

நிச்சயமாக அப்படித்தானே இருக்கும்.. ஒவ்வொரு கட்சியாக என்ன செய்யுறாங்கன்னு சொல்லுமய்யா..

ADVERTISEMENT

திமுகவில் இருந்து தொடங்குவோம்.. சிஎம் ஸ்டாலினைப் பொறுத்தவரைக்கும் கரூர் சம்பவத்தை ரொம்பவே நிதானமாகவே கையாண்டார்.. இப்பதான் திமுக சைடுல வேகமெடுத்திருக்கு..

இதுக்கு ஏதாவது காரணம் இருக்கனுமே?

ADVERTISEMENT

இல்லாமலா.. கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிஎம்-க்கு “PEN” ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கு.. தமிழ்நாடு முழுவதும் இந்த ரிப்போர்ட் எடுத்திருக்காங்க.. மக்களோட மனநிலை என்னன்னு சொல்லக் கூடிய ரிப்போர்ட்தான் அது..

அந்த ரிப்போர்ட் என்ன சொல்லுதாம்?

அந்த ரிப்போர்ட்டுல,

35 வயசுக்கு மேல இருக்கிறவங்க விஜய் மேலதான் தப்புன்னு சொல்றாங்களாம்.. இவ்வளவு கூட்டத்தை கூட்டுற விஜய்தானே எல்லாத்துக்குமே பொறுப்பு.. இதுக்கு போலீஸோ, அரசோ எப்படி பொறுப்பாக முடியும்னு கேட்கிறாங்களாம்..

அந்த ரிப்போர்ட்டில் இளைஞர்கள் என்ன சொல்றாங்களாம்?

அவங்க எல்லாம், விஜய் மேல எந்த தப்பும் இல்லை.. போலீஸும் அரசும்தான் பொறுப்புன்னு சொல்லி இருக்காங்களாம்..

பெரும்பான்மை மக்களோட மனநிலை விஜய்க்கு எதிராக இருக்குன்னு அந்த ரிப்போர்ட் சொன்னதை வைச்சு சிஎம் ஒரு டிஸ்கஷன் நடத்தினாரு.. அதுல சிஎம்மை சுற்றி இருந்தவங்க, “நம்மை பழிவாங்குறோம்னு விஜய் சொல்றாரு.. அவரு அப்படி என்ன நமக்கு செஞ்சாரு.. நாம எதுக்கு பழிவாங்கனும்.. விஜய் ஒரு கட்சி நடத்துறாரு.. அவரு பிரசாரம் செய்யுறாரு.. அவ்வளவுதானே.. இனியும் நாம பதில் சொல்லாம இருக்கவே கூடாது”ன்னு சொல்லி இருக்காங்க..

PEN ரிப்போர்ட், இந்த டிஸ்கஷன் எல்லாத்துக்கும் பிறகுதான் சிஎம் ஸ்டாலினும் தம்மோட மூவ்களை வேகப்படுத்தி இருக்காரு..

அதுதான் அடுத்தடுத்த பிரஸ் மீட்டுகளா?

ஆமாய்யா.. சென்னையில திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, பிரஸ்ஸை சந்தித்து பேசுனார்.. ஆனாலும் ரொம்ப கடுமையாக பேசாமல் யதார்த்தமான விஷயங்களை ஸ்டிராங்கா சொன்னாரு.. “கரூர் சம்பவத்துக்கு பிறகும் அவசரம் அவசரமாக- செய்தியாளர்களை சந்திப்பதற்குகூட விஜய் வெட்கப்பட்டு கொண்டு, பயந்து கொண்டு ஏன் சென்னைக்கு வந்தார்?”னு கேட்டிருந்தார் ஆ.ராசா.

அதேபோல, “தவெக கட்சிகாரங்ககிட்ட அவங்களையே அறியாமல் ஒருவித கில்ட்டி கான்ஷியஸ் – குற்ற உணர்வு இருக்கிறது. நம்மால்தான் இது நடந்தது என்கின்ற ஒப்புதல், அவர்கள் மனசாட்சியில் இருக்கிற காரணத்தினால், அவர்கள் ஓடி வந்து விட்டார்கள் என்பதுதான் உண்மை” ன்னும் சொன்னார் ஆ.ராசா

அரசு தரப்பிலும் அமுதா ஐஏeஸ் தலைமையில பிரஸ் மீட் நடத்தி, எல்லா சந்தேகங்களுக்கும் வீடியோ வீடியோவா போட்டு பதில் சொல்லி அசத்தி இருந்தாங்க..

இன்னைக்கு கூட செந்தில் பாலாஜி கரூரில் பிரஸ் மீட் நடத்தினார்..

ஆமாய்யா..

அதான்.. PEN ரிப்போர்ட்டை வைச்சு இனி ‘இறங்கி’ செய்யலாம்னு சிஎம் முடிவெடுத்தப்பவே, செந்தில் பாலாஜியையும் கூப்பிட்டு பிரஸ்ஸை பார்க்க சொல்லிட்டாரு.. செந்தில் பாலாஜியும் வீடியோக்கள் மேல வீடியோக்களாக போட்டு காண்பிச்சு பதில் சொல்லிகிட்டே இருந்தாரு..

அடுத்து கவர்மென்ட் சைடில் என்ன செய்ய போறாங்களாம்?

புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன் ஜாமீன் கேட்டிருக்காங்க.. அதே நேரத்தில நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனாவுக்கு சம்மனும் இன்னைக்கு போலீஸ் அனுப்பி இருக்கு.. புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் தலைமறைவுங்கிறதால தனிப்படை போட்டு வலை வீசி தேடுறாங்கய்யா.

சரி.. விஜய் சைடுல என்ன நடக்குது?

அதை ஏன் கேட்குறீங்க.. எப்பவும் போல ஆளுக்கு ஒரு திசையிலதான்.. கரூர் சம்பவத்துல கட்சிக்கு நெருக்கடி வந்துருச்சு இல்லையா… இதனால திமுகவை ஸ்டிராங்கா எதிர்க்கனும்னா அதிமுக- பாஜக கூட்டணிக்கு போயிடலாம்.. இப்ப பேசுனாத்தான் சரியாக இருக்கும்னு ஆதவ் அர்ஜூனாவும் அருண்ராஜூம் விஜய்க்கு சொல்லாமலேயே ஆட்டத்தை தொடங்கி இருக்காங்க.. அருண்ராஜ், அதிமுக தரப்புல பேசவும் ஆரம்பிச்சிட்டாரு..

அதிமுகவுல என்ன சொல்றாங்களாம்?

என்னதான் அருண்ராஜ் சொன்னாலும், “நீங்க பேசுறது விஜய்க்கு தெரியுமா?”ன்னு முதல்ல கேள்வி கேட்டிருக்காங்க.. இதை எதிர்பார்க்காத அருண்ராஜ், “நீங்க முடிவை சொல்லுங்க.. அதை வைச்சு நாங்க விஜய்க்கிட்ட பேசிக்கிறோம்” என சமாளித்திருக்கிறார்..

தவெகவுடன் கூட்டணி வாய்ப்பு நல்லதுன்னு எடப்பாடி ரொம்ப ஹேப்பியாகிட்டாரா?

அதான் இல்லை.. எடப்பாடி பழனிசாமியோட வெர்சனே வேற மாதிரி இருக்கு.. எடப்பாடிக்கு நெருக்கமானவங்ககிட்ட நாம பேசுனப்ப, “பாதிக்கு பாதி சீட் கொடுத்தா அதிமுகவோட கூட்டணி.. எப்படியும் எலக்‌ஷன் நேரத்துல நம்மகிட்ட வருவாங்கன்னு விஜய் தரப்புல சொல்லிகிட்டு இருந்தாங்க.. இப்ப என்னவாம்?னு எடப்பாடி கேட்டிருக்கிறாரு…

அதோட, “விஜய்யால எல்லாம் கட்சி நடத்த முடியாது.. ஒரு நடிகனாக கட்சியை நடத்துறது அவ்வளவு எல்லாம் ஈஸியும் இல்லை.. அவரால எல்லாம் தாங்க முடியாதுன்னு தெரியும்.. கமல்ஹாசன் கட்சியை தொடங்குனப்பவே நான் சொன்னேன்.. கேட்கலையே.. எலக்‌ஷன் நேரத்துல நம்மகிட்டதான் வருவாங்க.. நம்ம காலில்தான் வந்து விழப்போறாங்க.. அப்ப 20 அல்லது 30 சீட் கொடுக்க பார்ப்போம்” என ‘அசால்ட்டாக’ சொல்லிக் கொண்டிருக்கிறாராம்..

ஓஹோ.. பாஜக என்ன நினைக்குதாம்?

பாஜகவுல அண்ணாமலைதான் எப்படியாவது, கரூர் சம்பவத்தை வைச்சு விஜய்யை கூட்டணிக்குள்ள இழுத்துவிடனும் ரொம்பவே தீவிரமாக இருக்காரு.. டெல்லியில் இருந்து பாஜக கூட்டணி எம்பிக்கள் டீமை கொண்டு வந்ததே அண்ணாமலைதானாம்..

சரி விஜய் அடுத்து என்ன செய்யப் போறாராம்?

விஜய் அடுத்த ரெண்டு வாரத்துக்கு பிரசாரத்தை கேன்சல் செஞ்சிருக்காரு. இனி பொதுக்கூட்டம், அரங்க கூட்டம்தான் நடத்த முடியும்.. அதுக்கான ஏற்பாடுகளைத்தான் இனி செய்யனும்னு தவெகவில பேசுறாங்க..

ஏன் ரோடு ஷோவுக்கு இனி வாய்ப்பே இல்லையா?

தமிழ்நாட்டுல இனி ரோடு ஷோவுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இல்லைன்னுதான் சொல்றாங்க.. நீதிமன்றம் என்ன சொல்லுதோ அதன்படி முடிவெடுக்கலாம்னு கவர்ன்மென்ட் வெயிட் பண்ணுது..

அப்ப ராமநாதபுரத்தில் சிஎம் நடத்த இருந்த ரோடு ஷோ?

சிஎம் நாளைக்கு (அக்டோபர் 2) ராமநாதபுரம் போறாரு.. அங்க நைட் தங்கிட்டு நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை சிஎம்-ன் ரோடு ஷோவுக்கும் ஏற்பாடு செஞ்சாங்க.. கரூர் சம்பவத்துனால சிஎம்-ன் ராமநாதபுரம் ரோடு ஷோவை இப்ப கேன்சல் பண்ணிட்டாங்களாம்.. நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகிட்டு பேச இருக்கிறாரு சிஎம்..

ஓஹோ…

ரோடு ஷோ இல்லைன்னா விஜய் எப்படி பிரசாரம் செய்வாரு? அவங்களால ஒவ்வொரு கூட்டத்துக்கும் முழுமையான ஏற்பாடுகளை செஞ்சுட முடியுமா? கூட்டத்தை சமாளிப்பாங்களா? பாதுகாப்பாக தொண்டர்களை அனுப்பிடுவாங்களா?ன்னு பல கேள்விகளுக்கு விடையே தெரியலையே என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share