அதிமுகவில் இணைந்த மு.க.அழகிரி ஆதரவாளர் மதுரை பி.எம்.மன்னன்

Published On:

| By Mathi

EPS Mannan

மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளருமான பி.எம்.மன்னன் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மன்னனும் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் சிலரும் அதிமுகவில் இணைந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் மன்னன் கூறியதாவது: இன்று திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலே நாங்கள் இணைந்துள்ளோம். நான் மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னன். அதிமுகவில் இணைந்து முழு மூச்சோடு மக்கள் பணி செய்வதற்கு எனக்கு அனுமதி அளித்த எடப்பாடி பழனிசாமிக்கும் துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, சோலை ராஜா ஆகியோருக்கும் நன்றி.

ADVERTISEMENT

மதுரையைப் பொறுத்த அளவு ஐந்து தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், ஐந்து தொகுதிகளில் திமுக-வும் வெற்றி பெற்று இருக்கிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பத்து தொகுதிகளிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி வெற்றி பெறும். அதற்கு முழு ஒத்துழைப்போடு எங்களுடைய உயிரைக் கொடுத்து பணியாற்றுவோம்.

தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பார். இது நடந்தே தீரும், இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. மதுரையிலே சிலர் அதிகாரத் திமிரில் திமுகவின் கீழ்மட்டத் தொண்டர்களை அடிமை போல் நடத்தக்கூடிய அடிமைத்தனத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற முறையிலே என்னை போன்றவர்கள், அருமை தம்பிமார்கள் எல்லாம் இன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருக்கின்றார்கள்.

ADVERTISEMENT

நான் மக்கள் பணி செய்வதற்கு எனக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் அதிமுகவில் இணைந்தேன்.

நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் கலைஞர் இருக்கும் பொழுதே நீக்கப்பட்டோம். அது உட்கட்சிப் பிரச்சனை. அது நடந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்குப் பின்பாக நாங்கள் எத்தனையோ முறை திராவிட முன்னேற்றக் கழகத்திலே மனு அளித்து கேட்டோம். ஆனால் எங்களை மக்கள் பணி செய்வதற்கு அனுமதிக்கவில்லை. இந்தத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களுக்கும், மதுரையில் இருக்கக்கூடிய அதிகாரத்தில் இருக்கக்கூடிய சிலருக்கும் மமதை. அந்த மமதை வரும் தேர்தலில் என்ன ஆகும் என்று தெரியும். அதில் மாற்றமில்லை, இவ்வாறு மன்னன் கூறினார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share