தமிழில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் குறிப்பிடத்தக்க கமர்ஷியல் பட இயக்குனராக உருவெடுத்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். ‘மாநகரம்’மில் ஒரு வித்தியாசமான இயக்குனராக அறியப்பட்டவர் ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என்று பயணித்து இன்று ‘கூலி’ வரை வெற்றிகரமாகத் திகழ்ந்து வருகிறார். இவர் நாயகனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் இரண்டாண்டுகளாகவே தமிழ் திரையுலகில் உலா வருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அவர் அறிமுகமாகிறார் என்ற தகவல் வெளியானபிறகே, அது உண்மை தான் என்றானது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தில் லோகேஷின் ஜோடியாக மிர்னா மேனன் நடிப்பதாகச் சொல்லப்பட்டது. இவர் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக, வசந்த் ரவியின் மனைவியாக நடித்தவர். அதற்கும் முன்னால் அதிதி என்ற பெயரில் ‘பட்டதாரி’, ‘களவாணி மாப்பிள்ளை’ படங்களில் இவர் தோன்றியிருக்கிறார். சில மலையாளப் படங்கள், தெலுங்கு படங்களோடு ‘பர்கா’, ‘பெர்த்மார்க்’ ஆகியவற்றிலும் தலைகாட்டியிருக்கிறார். ’ஜெயிலர் 2’ படத்திலும் இவர் இடம்பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதனால், இந்த வாய்ப்பின் மூலமாக மிர்னா மேலும் பரவலாக அறியப்படுகிற நிலை உருவானது.
இந்த நிலையில், தற்போது அருண் மாதேஸ்வரன் படத்தில் லோகேஷின் ஜோடியாக ரசிதா ராம் நடிக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கன்னடப் படவுலகில் புகழ் பெற்று விளங்கும் இவர் சமீபத்தில் ‘கூலி’யில் வில்லியாகத் தோன்றி கலக்கியது நாம் அறிந்ததே.
ரசிதாவின் சகோதரி நித்யா ராம் தமிழில் ’அவள்’ மற்றும் ‘நந்தினி’ சீரியல்களில் நடித்தவர். ‘அண்ணா’ என்ற சீரியலிலும் இவர் தற்போது நடித்து வருகிறார்.
ஒரேயொரு தெலுங்கு படத்தில் மட்டுமே நடித்திருக்கும் ரசிதா ராம், ‘கூலி’ வழியே பெரும்பாலான தமிழ் ரசிகர்களைச் சென்றடைந்திருக்கிறார். அந்த புகழைத் தக்க வைக்கும் வகையில் அவர் லோகேஷின் படத்தில் இடம்பெறக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
ஆக, லோகேஷின் ஜோடியாக நடிக்கப் போவது மிர்னாவா, ரசிதா ராமா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. இருவரில் ஒருவர் நடிப்பாரா அல்லது இருவருமே அப்படத்தில் உண்டா என்ற கேள்வி உருவாகியுள்ளது.
படக்குழுவிடம் இருந்து உறுதியான தகவல் வெளியாகிறபோது, இவர்கள் தவிர்த்து வேறு நாயகிகளின் பெயர்கள் இடம்பெறக்கூடும். சினிமாவின் மாயாஜாலங்களில் அதுவும் ஒன்று தானே..?!