“நிதிஷ் குமாருக்கு வந்த நிலை எடப்பாடிக்கும் வரும்” – அமைச்சர் சிவசங்கர் விளாசல்!

Published On:

| By Pandeeswari Gurusamy

டெல்லி பாஜகவிற்கு அடிபணிந்து நடப்பதன் மூலம், அதிமுகவை ‘அடிமை திமுக’ என்ற நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளிவிட்டதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரன் கடுமையாகச் சாடியுள்ளார்.

சென்னையில் இன்று (மார்ச் 26)செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “இந்திய ஜனநாயக கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி போன்ற கட்சிகள் எல்லாம் தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் நிலையை பாஜக உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் நோட்டாவுக்குக் கீழே இருந்த தாமரைக்கு, அதிமுக ஒரு இடத்தைக் கொடுத்துள்ளது.

ADVERTISEMENT

பீகாரில் நிதிஷ் குமாருக்கும், மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் சரத் பவார் கட்சிகளுக்கும் ஏற்பட்ட நிலைதான் அதிமுகவிற்கும் வரப்போகிறது. பாஜகவுடன் கூட்டணியில் இருந்து, அக்கட்சியால் விழுங்கப்பட்ட மாநிலக் கட்சிகளின் வரிசையில் அதிமுகவும் இணையப் போகிறது என்பதை எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் உறுதிப்படுத்துகின்றன,” என்றார்.

எடப்பாடி பழனிசாமியின் ஒவ்வொரு அறிவிப்புக்குப் பின்னாலும் மத்திய அமைச்சர் அமித்ஷா இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், “அமித்ஷா எழுதிக் கொடுக்கும் ‘ஸ்கிரிப்ட்’-ஐ மாற்றாமல் அப்படியே எடப்பாடி பழனிசாமி படிக்கிறார். அதிமுக தொண்டர்களின் சுயமரியாதையைக் காப்பதே ஒரு திராவிடக் கட்சியின் கடமை. ஆனால், மறைந்த ஜெயலலிதா அவர்கள் ‘மோடியா? லேடியா?’ என்று சவால் விட்டார். இன்று மோடியே எல்லாம் என்று கூறி ஜெயலலிதாவின் ஆன்மாவையே சாகடிக்கும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமி சென்றுவிட்டார்,” என விமர்சித்தார்.

ADVERTISEMENT

திமுக கூட்டணியின் சிறப்புகளைப் பட்டியலிட்ட அமைச்சர், “தமிழக முதல்வர் தலைமையிலான கூட்டணி ஒரு மனமொத்த கூட்டணியாகத் திகழ்கிறது. ஒவ்வொரு கூட்டணிக் கட்சியிடமும் உரிய மரியாதை அளிக்கப்பட்டு, பலமுறை ஆலோசனைகள் நடத்தப்பட்டு சுமுகமான முறையில் தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

ஆனால், அதிமுக கூட்டணியோ டெல்லி அமித்ஷாவின் கட்டளைக்கு ஏற்ப இயங்குகிறது. சுயமரியாதையோடும், தன்மானத்தோடும் இயங்கும் திமுக கூட்டணி வரும் தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். தமிழக முதல்வர் மீண்டும் பொறுப்பேற்க மக்கள் தயாராகிவிட்டனர்,” என்று உறுதியாகத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

முன்னதாக மயிலாப்பூர் பிரச்சாரத்தில் திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்திருந்தார். திமுகவை நம்பினால் நடுரோட்டில் தான் நிற்க வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share