நெல் கொள்முதல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அரசு மீது குற்றம்சாட்டியிருந்த நிலையில், இது தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கமளித்துள்ளார்.
தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் என டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ததால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாளொன்றுக்கு 2000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக அரசு கூறுகிறது. ஆனால் வெறும் 900 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்வதாக லோடுமேன்கள் கூறுகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நெல் மற்றும் அரிசி சேமிப்பு கிடங்கில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன்பின் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த மாவட்டத்தில் 299 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு 162 நேரடி நெல் கொள்முதல் நிலையம் தான் செயல்பட்டது. இந்த ஆண்டு 1.6 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு, 1.28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
79,800 ஹெக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு 61,000 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டது. 1250 லாரிகளில் தினம் தோறும் நெல் மூட்டைகளை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். 4 வேகன்கள் மூலமாக 8000 நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டு வருகிறது.
இன்னும் 8,600 ஹெக்டர் பரப்பளவில் உள்ள நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட உள்ளது. திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் ஒரு லட்சம் மெட்ரிக் டன் நெல் இருப்பில் உள்ளது.
வாடகைக்கு எடுக்கப்பட்ட குடோன்களில் 30 ஆயிரம் டன் உள்ளது. ஒரத்தநாடு பகுதியில் ஒரு லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யும் அளவுக்கு குடோன் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
அவர்கள் ஆட்சியில் குறிப்பாக, 2020இல் 800 மூட்டையில் இருந்து 1000 மூட்டை ஒரே ஆண்டு தான் வாங்குவதற்கு அனுமதி தந்தார்கள். ஆனால், முதல்வர் பொறுப்பேற்ற பின்பு 800 மூட்டையில் இருந்து 1000 மூட்டை என்பதை அரசு உத்தரவாகவும், அதோடு ஒரு ஏக்கருக்கு 60 மூட்டையில் இருந்து 70 மூட்டை வாங்குவதற்கான விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
கடந்த காலங்களில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தான் நெல் கொள்முதல் செய்யப்படும். ஆனால் மழைக்காலம் என்பதால் பிரதமருக்கு கடிதம் எழுதி அக்டோபர் 1ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 1ஆம் தேதி முதலே கடந்த நான்கு ஆண்டுகளாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது’ என்றார்.
மேலும் அவர், திமுக ஆட்சியில் நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது’என்றும் குறிப்பிட்டார்.
மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
