2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மதிமுக, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், பரமக்குடியில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக தேர்தல் பணிக்குழு தலைவரும், வனத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் துறை அமைச்சருமான ராஜ கண்ணப்பன் பேசியதாவது: சட்டமன்ற தேர்தலில் கட்சி யாரை நிறுத்தினாலும் அவர்களது வெற்றிக்காக பாடுபட வேண்டும். கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
மதிமுகவினர் பெரும்பாலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்பார்கள். இடதுசாரிகளும் விசிகவினரும் அவர்களது சின்னத்தில் நிற்பார்கள்.
கூட்டணிக்குள் ராமதாஸ் வந்து கொண்டிருக்கிறார்… ராமதாஸ் பேசிக் கொண்டிருக்கிறார்.. அப்புறம் ஜான் பாண்டியன் பேசிகிட்டு இருக்கிறார்.. ஆகையால் கட்சி வேட்பாளர்களையும் கூட்டணி வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசினார்.
