வெளிநாடுகளுக்குச் சென்றால் பிரதமருடைய பார்வையில் தமிழர்கள் இணைப்புப் பாலமாக விளங்கக்கூடியவர்கள் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மலேசியாவில் மோடி “தமிழர்கள் இணைப்புப் பாலம்” என்று பேசியது குறித்த கேள்விக்கு,“பிரதமர் மலேசியாவுக்குப் போனால் தமிழைப் புகழ்ந்து பேசுவார். ஏன் என்றால் அங்கு இருப்பவர்கள் இந்தியர்கள். மலேசியாவில் இருப்பவர்கள் தமிழ் இந்தியர்கள்.
தமிழ்நாட்டிலிருந்து சென்ற இந்தியர்கள்தான் அதிகம். ஆனால் ஒடிசாவுக்குப் போனால் தமிழனைத் திருடன் என்பார். ‘தமிழ் திருடனுடைய கையிலே ஒடிசாவின் சாவி இருக்கிறது’ என்பார். பீகாருக்குப் போனாலும் தமிழனைத் திருடன் என்பார். அங்கெல்லாம் தமிழர்கள் திருடர்கள் என்று சொல்வார். ஆனால் வெளிநாடுகளுக்குச் சென்றால் அவருடைய பார்வையில் தமிழர்கள் இணைப்புப் பாலமாக விளங்கக்கூடியவர்கள்” என்பார்.
மலேசியாவில் தைப்பூசம் குறித்து மோடி பேசியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு,“தமிழ்நாட்டில் கொண்டாடுவதைப் போலவே மலேசியாவில் தைப்பூசம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. பினாங்கில் இரண்டு நாட்கள் விடுமுறை விடக்கூடிய பண்டிகை. அங்கு இருப்பவர்கள் இனம் பாராமல், மதம் பாராமல்—சீனர்களாக இருந்தாலும், மலேசியர்களாக இருந்தாலும், இந்தியர்களாக இருந்தாலும்—எல்லோரும் தமிழ்க் கடவுள் முருகனை ஏற்றுக்கொண்டு அந்த விழாவை நடத்துகிறார்கள்.
இன்றைக்கு மலேசியாவிலேயே மிகப்பெரிய தமிழர் திருவிழா என்றால் அது தைப்பூசத் திருவிழாதான். சிங்கப்பூரிலும், கோலாலம்பூரிலும், பினாங்கிலும் நடக்கிறது. பினாங்கில் இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழா.இதையெல்லாம் பார்த்துதான் மோடி பேசுகிறார். தவிர, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முருகனுக்கு தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். அவர்கள் தமிழ் பக்தர்கள். தமிழ் முருகனை வணங்குகின்றவர்களுக்கு திராவிட மாடல் ஆட்சியினுடைய உண்மை புரியும். நிலைமை புரியும். தங்களுக்குப் பாதுகாப்பு திராவிட மாடல் ஆட்சிதான் என்பதை உணர்ந்தவர்கள்தான் தமிழகத்தின் முருக பக்தர்கள்” என்று தெரிவித்தார்.
