“நான் எந்த தப்பும் செய்யல” : eD நோட்டீஸுக்கு அமைச்சர் கே.என்.நேரு மீண்டும் விளக்கம்!

Published On:

| By Kavi

நான் எந்த தவறும் செய்யவில்லை… விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று அமலாக்கத் துறை நோட்டீஸ் குறித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேட்டி அளித்துள்ளார்.

ஏப்ரல் 2025 இல், அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனைகளை நடத்தியது.

ADVERTISEMENT

இந்தநிலையில் கடந்த அக்டோபர் 27, 2025 அன்று, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பில் பணம் பெற்று ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத் துறை தமிழக காவல்துறை தலைவருக்கு அறிக்கையை அனுப்பியது.

சுமார் 150 பணியிடங்களுக்கு தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் வாங்கப்பட்டதாகவும், இதன் மூலம் சுமார் ரூ.888 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகவும் அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் 2025 இல் நடத்தப்பட்ட சோதனையின் மூலம் கிடைத்த வாட்ஸ்அப் உரையாடல்கள் போன்ற டிஜிட்டல் ஆதாரங்கள் இந்த ஊழல் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தியதாக அமலாக்கத் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளுக்கு ஏற்கனவே மறுப்புத் தெரிவித்து அமைச்சர் நேரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (அக்டோபர் 31) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கு அவர், “ஏற்கனவே எல்லாம் சரிபார்த்து, நீதிமன்றத்தில் இருந்த வழக்குகளை தள்ளுபடி செய்துவிட்டார்கள். ரெய்டு செய்த போது, சில டாக்குமெண்ட்டுகள் கிடைத்தது என்று கூறி இதெல்லாம் உண்மையா என பார்க்க சொல்லி அமலாக்கத் துறை போலீசிடம் கொடுத்திருக்கிறது.

முறைகேடு குறித்து போலீசார் விசாரிப்பார்கள். தெளிவாக சொல்கிறேன்… நான் எந்த தவறும் செய்யவில்லை. திமுகவை மிரட்டிப்பார்ப்பதற்காக இப்படி செய்யலாம். முறைப்படி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கப்படும். அதன்படி நாங்கள் எந்த தப்பும் செய்யவில்லை, செய்வதில்லை என நிரூபிப்போம்.

விசாரணையை பார்த்த பின் அவதூறு வழக்குத் தொடர்வது குறித்து முடிவெடுக்கப்படும். நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை உறுதி செய்வோம்” என்று கூறினார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share